Saturday, May 4, 2024

முதல் வான்விருந்து திருப்பலி முன்னுரை

 First Holy communion mass introduction and prayer of faithful. The word form and pdf form are available at the end.



தம் அன்பின் அளவை

இவ் அவனிக்கு உணர்த்த

விண்ணகத்தின் உன்னத கடவுள்

மண்ணகத்தின் மாந்தாரை பிறந்து

தம்மகத்தில் நம்மை சேர்க்க

உறுதி கொண்டார்,

தம் உதிரம் கொடுத்தார்,

நமக்கு உயர்வை கொடுத்தார்,

நாம் நம்பிக்கையில் உறுதிபட


திருப்பலி முன்னுரை

இறை உறவில் ஒன்றிணைந்த சகோதர சகோதரிகளே!

    இறைவன் இவ்வுலகை படைக்கத் திட்டமிட்ட நாள் முதல் இந்நாள் வரை தம்முடைய எல்லையில்லா வரங்களால் நம்மை ஆசிர்வதித்து நம்மை வழி நடத்துகிறார். இறைவன் தன்னுடைய அன்பை தம் படைப்புகள் வாயிலாக நம்மிடத்தில் வெளிப்படுத்துகிறார். அந்தப் படைப்பு அனைத்திற்கும் சிகரமாக மனிதனை நியமித்து அனைத்தையும் அவனுடைய ஆளுகைக்கு உட்படுத்துகிறார். இப்படி நம்மை ஒரு படைப்பாகவும், தம்முடைய படைப்பின் வழியாகவும், மேலும் தம்முடைய படைப்புகளின் காப்பாளனாகவும் நம்மை நியமித்து தன்னுடைய எல்லையற்ற அன்பை நாம் முழுவதும் அனுபவிக்க நமக்கு உரிமை அளிக்கிறார். நாம் பாவத்தில் விழுந்து இவ்வுரிமையை மறுக்கும் பொழுதும், துறக்கும் பொழுதும், இறைவனே உற்ற மருந்தாக உன்னத விருந்தாக எழுந்து நம்முடைய ஆன்மாவை தூய்மைப்படுத்தும் கருவியாக செயல்படுகின்றார்.

இறைவன் தொடக்கம் முதல் இன்றைய நாள் வரை தன்னுடைய அன்பை நமக்கு தம்முடைய இறை பராமரிப்பின் வழியாக நமக்கு தொடர்ச்சியாக வெளிப்படுத்துகின்றார். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏதேன் தோட்டத்தின் விளைச்சலை உணவாக கொடுத்து தம் அன்பை வெளிப்படுத்தினார். எகிப்தின் அடிமை தனத்தில் இருந்து விடுதலை அடைந்து பாலை நிலத்தில் பயணமான இஸ்ரேல் மக்களுக்கு மன்னாவினை அளித்து தம்முடைய உடன் இருப்பை வெளிப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக இறுதி இராவுணவில் தம்மையே நமக்காக அளித்து நம்மோடு துணையாய் இன்றும் வாழ்கின்றார். இவ்வுலகில் இறைவனின் துணையோடு பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் துணை இல்லாமல் வாழ முடியாது. இவ்வுன்னத விருந்தின் வழியாக நமக்கு துணையாய் வரும் இறைவன் நம் ஆன்ம நோய்களை நீக்கி நமக்கு குணமளிக்கின்றார்.

    இப்படிப்பட்ட உன்னத உணவாம் இறைவனை இன்று முதன் முதலாக பெற இருக்கும் நம்முடைய பங்கின் குழந்தைகளுக்காக இத்திருப்பலியில் சிறப்பாக செபிப்போம். இறைவனின் துணையோடு, இறைவனை உணவாய் கொண்டு, இறைவனின் வாக்கில் புதிய பயணத்தை தொடங்க இருக்கும் இவர்களுக்கு இறைவன் என்னாலும் துணையாய் இருக்கவும், புனித சாவியோவை போல நற்கருணை பக்தியில் வளரவும் ஜெபிப்போம். மேலும், இறைவனின் வாக்கை உணவாக உட்கொண்டு, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வை இறைவன் காட்டும் பாதையில் நடத்தி , நல்ல குணம் பெற்று நலம் பெற இம் மகிழ்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.


மன்றாட்டுகள்

1. நற்கருணை ஏற்படுத்திய எம் அன்பு இறைவா |

    உன் அன்பின் அடையாளமாக, நீர் கற்பித்த அன்பின் பகிர்வை நற்கருணை பகிர்வின் வழியாக அனுதினமும் கொண்டாடும் உம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள் மற்றும் துறவியர் அனைவருக்காகவும் சிறப்பாக ஜெபிக்கின்றோம். இவர்கள் அனைவரும் நற்கருணையின் வழியாய் உன்னுடைய அன்பை அனுபவித்து, அவர்கள் அனுபவித்த அந்த அன்பை பிறரோடு பகிர்ந்திடவும், பிறருக்காய் வாழ்ந்திடவும் வேண்டிய பலத்தை நற்கருணை வழியாக தந்தருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. நல்ல மேய்ப்பனே எம் இறைவா!

    இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்கிறோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், தங்களுடைய வாழ்வின் சுயநல எண்ணங்களுக்காக மக்களை பயன்படுத்தாமல் இருக்கவும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டுமென்றும், மேலும் எம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வழியாக மக்களுக்கு உண்மையாக உழைக்கும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்து, உன் அன்பின் பணியை ஆற்ற அவர்களுக்கு தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நலம் தரும் நற்கருணை நாயகனே எம் இறைவா1!

    இவ்வுலகில் நோய்களாலும், போர்களாலும் மற்றும் கொடிய இனவாதத்தாலும் பாதிப்படைந்து தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் மன்றாடுகிறோம். நீர் அன்று எவ்வாறு உம்முடைய அன்பை, நற்கருணையின் வழியாக இஸ்ரேல் மக்களுக்கும், உம்முடைய சீடர்களுக்கும் வெளிப்படுத்தினீரோ, அதேபோல் உம்முடைய உடன் இருப்பை இவர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களின் இன்னலான சூழல்களில் அவர்களுக்கு துணையாக நின்று, அவர்களின் ஆன்ம, உடல் மற்றும் மன நோய்களுக்கு நல்ல மருந்தாக அமைய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா!

    உன் அன்பின் திரு அவையின் ஒரு பகுதியாம் எம்முடைய பங்கிற்காகவும் பங்கு மக்களுக்காகவும் மன்றாடுகின்றோம். திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும் ஆன்மீக வாழ்வில் வளரவும் மேலும் எம் பங்கு உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் நற்கருணை நாதரின் நலம் வீசி அவர்கள் அமைதியும் பக்தியிலும் வாழவும் அருள் புரிய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.





No comments:

Post a Comment

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...