தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25
திருப்பலி முன்னுரை
தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தில், மனம் வருந்தி விண்ணகத்தை உடமையாக்கிக் கொள்ள நம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, பாவமற்ற பரிசுத்த வாழ்வு வாழ்வதற்கான வழிகளை நமக்கு காட்டியுள்ளார். ஒரு மரத்தின் கனியின் மூலம் மரமானது அறியப்படுவது போல, நம்முடைய செயல்களே நம்மைப் பற்றி இவ்வுலகுக்கு எடுத்துரைக்கின்றன. எனவே, இத்தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பக்தி முயற்சிகள் அனைத்தும் நம்முடைய செயல்களில் வெளிப்பட வேண்டும். ஏனெனில், நாம் அனைவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ளோம். ஆகவே, கிறிஸ்துவின் இயல்புகள் நம்மில் வெளிப்பட வேண்டும். ஆவ்வாறாக, கிறிஸ்துவின் இயல்புகளை நாம் பெற வேண்டுமெனில் நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவத்தை விலக்கி, அனைவருக்கும் நலமளிக்க கூடிய வகையில் வாழ வேண்டும். மரத்தின் கிளைகளை தரித்து விடுவது போல, நம்மிடத்தில் உள்ள வேண்டாத குணங்களை இத்தவகாலத்தில் விலக்குவோம். கிறிஸ்து வாக்களித்த விண்ணகத்தின் குடிமக்களாக மாற தகுதி பெற வேண்டி இந்த பாவ கழுவாயின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
துன்பத்தில் வாடுவோரின் துயர் துடைக்க இறைவன் தன்னுடைய பணியாளர்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கின்றார். எகிப்தில் கடும் கொடுமைகளுக்குள்ளான இஸ்ரேயல் மக்களை, மீட்பதற்கு இறைவன் மோசேவை அனுப்பினார். அவ்வாறு மோசே இறைவனின் பணிக்காக அனுப்பபடும், இறைவன் மோசேவின் நம்பிக்கயை உறுதிபடுத்தும் வார்த்தைகளைக் கொண்ட இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
பாலைநிலத்தில் பயணம் செய்த இஸ்ரேயல் மக்களை இறைவன் நிறைவாக ஆசிர்வதித்து, அவர்களுக்கு தேவையான அனைத்தும் நலன்களையும் அளித்தார். இருப்பினும், இஸ்ரேயல் மக்கள் இறைவனுக்கு எதிராக பாவம் புரிந்தனர். பாவத்தில் விழுந்து இஸ்ரேயல் மக்களை போலில்லாமல், விண்ணகத்தை உறைவிடமாக கொண்ட நம் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி விண்ணகத்தின் மக்களாக வாழ அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்த்pற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பை ஆணிவேராக கொண்டு நீர் உருவாக்கிய உம் திரு அவைக்காக மன்றாடுகின்றோம். இறைவாக்கினர்களும், மெசியாவும் எவ்வித தொய்வுமின்றி இறைப்பணி ஆற்றியது போல உம் திரு அவையின் தலைவர்களும், உறுப்பினர்களும் தளராது இறைப்பணி ஆற்ற தேவையான மன திடத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
2. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும்;. சாகோதரத்துடன் வாழவும் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களுடைய குறைகளை ஏற்று, இறைவழியில் நடந்து, இறைவனின் வல்லமையை பெற எங்களுக்கு தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. மனம் வருந்துங்கள் என்று மொழிந்த எம் இறைவா! தவக்காலத்தில் பக்தி முயற்சிகளில் ஈடுபடும் எங்களின் செப வாழ்வு, எங்கள் அன்றாட வாழ்வில் வெளிப்பட வேண்டுமென்றும். எங்களிடத்தில் உள்ள தீய குணங்களை விலக்கி விண்ணத்தின் மக்களாக வாழ வரமருளி, உம் மந்தையில் எம்மையும் சேர்த்துக் கொள்ள வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.
5. அல்லல்படுவோரின் ஆதரவே எம் இறைவா! பருவநிலை மாற்றத்தாலும், மோசமான உடல்நிலையாலும் பாதிக்கப்பட்டு அல்லல்படும் மக்களை நிறைவாக ஆசிர்வதியும். நீரே அவர்களுக்கு அதரவாக இருந்து, அவர்களின் துயர்துடைத்து அவர்களுக்கு புதுவாழ்வளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment