திருப்பலி முன்னுரை
திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறில் அடியெடுத்து வைக்கும் நாம் அனைவரும் கிறிஸ்துவின் வருகைக்காக நம் உள்ளத்தை தயார் செய்ய அழைக்கப்படுகின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் வருகைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மனிதர்கள் மேல் இறைவன் கொண்ட எல்லையில்லா அன்பின் அடையாளமாக, விண்ணுலகில் இறைவனின் வலப்பக்கம் வீற்றிருந்த இறைமகன், மண்ணுலகில் மனிதராய் நமக்காக, நம்முள் ஒருவராய் பிறக்கின்றார். இப்படி பிறக்கும் இயேசு பாலகனை எதிர்நோக்கி காத்திருக்கும் காலமே திருவருகைக்காலம். பகிர்வு மற்றும் தாழ்ச்சி என்ற இரண்டு இறை மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்க இறைமகன் இயேசு கிறிஸ்து மனித உறவில் நம்மிடையே பிறக்கின்றார். பகிர்வு மற்றும் தாழ்ச்சி என்ற குணங்களை நாம் பெறும் பொழுது நாம் எவ்வித பாவமுமின்றி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மகிழ்வை பெறுகின்றோம். இறைமகன் இயேசுவின் பிறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் நாம், பகிர்வு மற்றும் தாழ்ச்சியை என்ற குணங்களைப் பெற்று பாவத்தை விட்டு விலகி அருள்வாழ்வு வாழ்வதற்காக இத்திருப்பலியில் சிறப்பான முறையில் பங்கேற்று செபிப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
பாவத்தில் விழுந்த இஸ்ரேயல் மக்களை மீட்பதற்காக, ஒரு மீட்பரை அனுப்புவதாக இறைவன் இறைவாக்கினார்கள் வழியாக முன்மொழிந்தார். இவ்வுலகிற்காய் பிறக்க போகும் மீட்பரை பற்றியும், அவருடைய வருகையைப் பற்றியும் எடுத்துரைக்கும் எரேமியா இறைவாக்கினரின் வார்த்தைகளை இம்முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இறைமகன் இயேசுவின் போதனையால் ஈர்க்கப்பட்ட பலர், இயேசுவின் பாதைகளை தமதாக்கிக் கொண்டு பயணிக்க தொடங்கினர். இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெற்றனர். அவ்வாறு திருமுருக்கு பெற்ற அனைவரும், இறைவன் மீது எவ்வாறு பற்று கொள்ள வேண்டும் என்று கற்பிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
மன்றாட்டுகள்
- இறையன்பையும், இறைவன் தரும் மீட்பையையும் இவ்வுலகிற்கு என்றென்றும் அளிப்பதற்காக உழைக்கும் திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உம்முடைய அன்பின் பாதையில் பயணித்து, இறைவன் தரும் மீட்பை நாங்கள் எமதாக்கிக் கொள்ள வரமருள வேண்டுமென்று உம்;மை மன்றாடுகிறோம்.
- இவ்வுலகத் தலைவர்கள் தங்களின் நலனிலும், புகழிலும் அக்கறை கொள்ளாமல், மக்களின் நலனுக்காக இடைவிடாது உழைக்கவும், மக்களை இனத்தின் அடிப்படையில் பிரித்தாளாமல் அன்பினை ஆதாரமாக வைத்து, அமைதியான உலகை உருவாக்கவா வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்
- இறையரசை நிறுவிய எம் இறைவா! கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றில் முழுமையான நம்பிக்கை கொண்டு, கிறிஸ்துவின் வாழ்வை எங்களுடைய பாதையாக மாற்றிக்கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
- அமைதியை உலகிற்கு கொண்டு வந்த எம் இறைவா! இவ்வுலகில் நிகழும் போர்களாலும், கலவரங்களாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நீரே ஆறுதலாக இருந்து அவர்களின் உடல், உள்ள மற்றும் ஆன்ம நலன்களை நிறைவு செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- கிறிஸ்துவின் பிறப்பை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்கும் எங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும், இறைவன் தரும் அன்பை நாங்கள் முழுமையாக உணர்ந்து அதை எங்கள் இல்லத்திலும், சமூகத்திலும் பிறருடன் பகிர்ந்து முழுமையான மனித வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment