அன்னை மரியா இறைவனின் தாய் மற்றும் புத்தாண்டு விழா
01 – 01 – 2026
✦ திருப்பலி முன்னுரை
வாழ்க்கையில் மிளிர்ந்திட! வசந்தத்தை அளித்திட! வாட்டத்தை போக்கிட! வளமுடன் வாழ்ந்திட! வரும் ஆண்டை – இப்புத்தாண்டை வாழ்த்தி வரவேற்போம்.
அன்னை மரியா இயேசுவை கருவில் சுமந்து இறைவனை ஆராதித்தது போல, கிறிஸ்துவை மனதில் ஏற்று ஆராதிக்க வந்திருக்கும் சகோதர, சகோதரிகளே! இன்பம் பொங்கும் இந்நாளில் அன்னை மரியா இறைவனின் தாய் மற்றும் புது வருட பிறப்பு என்ற இரு பெரும் விழாவினை பெரு மகிழ்வுடன் கொண்டாடி கொண்டிருகின்றோம்;. ஒரு முழு ஆண்டை முழமையாக நிறைவு செய்து இன்னொரு புத்தாண்டில் காலடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில் நன்றி மற்றும் நம்பிக்கை என்ற இருபெரும் இறைப்பண்பை பெற்று அதன் துணையுடன் நடைபோட அழைக்கப்படுகின்றோம்.கடந்த ஆண்டில் இறைவன் நமக்கு செய்த அனைத்து நன்மைகளையும் நினைவு கூர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். இறைவனின் தாயாகிய அன்னை மரியா, அமல உற்பவியாக இவ்வுலகில் தன்னை பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிறிஸ்துவை கருவில் சுமந்து, பாவத்திற்கெதிரான பாடுகளின் பாதை உருவாகுவதற்கு காரணமாக அமைந்தார். அன்னை மரியாவைப் போல கடந்த ஆண்டில் நாம் பெற்ற நன்மைகளின் நன்றியை, நம்முடைய நன்மை பயக்கும் செயல்களால் வெளிப்படுத்த வேண்டிய தருணமிது.
மேலும், இறைவனின் துணையுடனும், அன்னை மரியாவின் பரிந்துரையுடன் நற்பாதையில் பயணிப்போம் என்ற நம்பிக்கையுடன் இப்புதிய ஆண்டில் அடியெடுத்து வைப்போம். கன்னி மரியாவை, இறைவனின் அன்னையாக உயர்த்திய பொழுது, இறைவனை முழுமையாக நம்பி ‘ஆகட்டும்’ என்று மொழிந்து இறை திட்டத்திற்கு இசைந்தார் அன்னை மரியா. அன்று, இறைவனை கருவெந்தி, மடியேந்திய தாய் இன்று நம்மை அரவணைக்க தயாராக உள்ளார்.
எனவே, இப்புத்தாண்டின் பெரும் மகிழ்வு நாளில் இறைவனுக்கு நன்றி செலுத்தி, இறை நம்பிக்கையுடனும், அன்னை மரியாவின் பரிந்துரையுடனும் புது வாழ்வை தொடங்குவோம். எதிர்நோக்கின் திருப்பயணிகளாக யூபிலி ஆண்டில் கற்ற விழுமியங்களை வாழ்வாக்கி, அன்னை மரியாவை மாட்சிபடுத்துவோம்;. இம்மீட்பின் கொண்டாட்டத்தில் பெருமகிழ்வுடன் பங்குகொள்வோம்.
✦ வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை (எண்ணிக்கை 6:22-27):
எண்ணிக்கை நூலில் இருந்து வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில் இறைவன் தன்னுடைய ஆசீரை, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு ஆரோனின் வழியாக வழங்குகின்றார். ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக. அருள் பொழிவாராக, ஒளியை மிளிர செய்வாராக போன்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து நம்முடைய புதிய ஆண்டின் பாதையில் திடத்துடன் பயணிக்க வேண்டிய உறுதியோடு இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை (கலாத்தியர் 4:4-7) :
இறைமகன் இம்மண்ணுலகில் பிறந்ததற்கான அர்த்தத்தை மிகச் சுருக்கமாக பவுலடிகளார் இந்த இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார். பெண்ணிடம் பிறந்தவரான இறைமகன் இயேசு கிறிஸ்து, எவ்வாறு இறைவனின் மகனாகின்றார் என்றும், இயேசு கிறிஸ்து இறைவனை மகன் என்பதால் நாம் அவருடைய சகோதர சகோதரிகளாய், தந்தை கடவுளின் பிள்ளைகளாகின்றோம் என்ற மறைபொருளை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செலி கொடுப்போம்.
✦ மன்றாட்டுகள்
- எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற கருப்பொருளினை மையமாக வைத்து, கடந்த ஆண்டு முழவதும் பயணித்த மற்றும் பயணித்துக் கொண்டிருக்கும்; திருஅவையின் அனைத்து உறுப்பினர்களையும் ஆசிர்வதித்தருளும். உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் இறைவனின் தாயகிய அன்னை மரியாவைப் போல் நம்பிக்கையில் என்றும் நிலைப் பெற்றிட தேவையான அருள் வரங்களை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- புது வாழ்வு அளிக்க வல்ல வள்ளலே எம் இறைவா! கடுமையான போர்களாலும், இனக் கலவரங்களாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து மக்களுக்காகவும் மன்றாடுகின்றோம். புலர்ந்திருக்கும் இப்புதிய ஆண்டில் அவர்களுக்கு தேவையான மன அமைதியையும், பொருளாதார தேவைகளையும் அளிந்து, அவர்களை தங்கள் வாழ்வின் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்புதவற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.
- எங்களுக்கு துணை நிற்கும் எங்கள் அன்பு இறைவா! இப்புத்தாண்டில் ஆண்டில் நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் எங்களுடன் இருந்து, வழி காட்ட வேண்டுமென்று மன்றாடுகின்றோம். நாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் நல்லவைகளையும், தீங்குகளையும் சரியான முறையில் முறைப்படுத்தி எங்கள் வாழ்வில் மென்மேலும் வளமடைய எங்களுக்கு தேவையான அருள் நலன்களைத் தந்தருள வேண்டுமென்று, உம்மை மன்றாடுகின்றோம்.
- நெருக்கடியான வேளைகளில் எமக்கு அரணும், அடைக்கலமும் அளிக்கும் எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் நீர் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகின்றோம். இப்புத்தாண்டில் எங்களுடைய பங்கு, குடும்பங்கள் மற்றும் பணி புரியும் இடங்களை எல்லையில்லா வரங்களால் நிரப்பியருளும். எங்களுடைய வாழ்வில் நாங்கள் ஆன்ம அளவிலும், சமுக அளவிலும் மற்றும் பொருளாதார அளவிலும் முன்னேறிட எங்களுக்கு உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- நேர்மையாளர்களை தேர்ந்து கொள்ளும் எம் இறைவா! நீதியின் பாதையில் நடப்பவர்களை எங்களின் தலைவர்களாக தேர்ந்து கொள்ள வெண்டிய ஞானத்தை வேண்டி மன்றாடுகின்றோம். பணம், புகழ் மற்றும் திரைக்கவர்ச்சி போன்ற தேவையற்ற மாயைகளைத் தவிர்த்து, தலைவர்களின் கொள்கைகள், திட்டங்கள் அனைத்திற்கும் மேலாக அவர்களுடைய நேர்மையை எடை போட்டு, மத, சாதிய பாகுபாடுகளைப் பாராட்டாத நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அறிவாற்றலை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.











