ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா
திருப்பலி முன்னுரை
நம் வாழ்வை செம்மையாக்கவும், சீர்படுத்தவும் இறைவனாம் இயேசு கிறிஸ்து, மனிதராய் நம்மிடையே பிறந்தார். சாவின்மேல் வெற்றி கொண்ட இயேசு, இம்மண்ணுலகின் மாந்தர் அனைவருக்கும் விண்ணுலகையை சொந்தமாக்கினார்.
இன்றைய நாளில் நம் தாயாம் திருஅவையானது ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது. மரியாவிடத்தில் மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து, யூதர்களின் வழக்கப்படி கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகின்றார். மேலும், இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ்ந்த சிமியோன் மற்றும் அன்னாவால் புகழப் பெறுகின்றார். இறைவனுக்கு உகந்த வாழ்வை வாழ்ந்ததன் பலனாக இவ்விருவம், இரு பெரும் பேற்றை பெற்றனர். நாம் இறைவனை அணுகி சென்று நம்மையே, நம்முடைய இறைவனுக்கு காணிக்கையாக வேண்டும். நம் வாழ்வை, நாம் இறைவனுக்காக அர்ப்பணிக்கும் பொழுது ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்து எண்ணற்ற வரங்களால் நம் வாழ்வை நிரப்பிடுவார் என்ற நம்பிக்கையுடன் இந்த அர்ப்பணிப்பின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் கலந்திடுவோம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
இறைவாக்கினர்கள் மூலம் முன்னுரைக்கப்பட்ட மீட்பர் நம்மிடையே தோன்றுவார் என்ற உறுதி தரும் வார்த்தைகளை, உணர்வுகளுடன் கூறுகின்றது இன்றைய முதல் வாசகம். இறைவனால் அனுப்பப்படும் தூதர் வரும் நாளில் எண்ணற்ற அற்புதங்களும், மாட்சிமை பொருந்திய பல நிகழ்வுகளும் நடக்கும் என்று விளக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இறைவனிடமிருந்து வந்த தூதுவராம் இயேசு கிறிஸ்து, நம்மைப் போன்று மனிதனாய் பிறந்து சாவின் மீது வெற்றி கொண்டார். அவர் வான தூதர்களைப் போல் அல்லாமல், நம்மைப் போன்று எளிமையான வாழ்வு வாழ்ந்தார். நம்மைப் போன்றே அவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். எனவே, நம் சோதனை வேளைகளில் நமக்கு துணை நிற்பார் என்ற துணிச்சலை அளிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவிக்கொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. உலகெங்கும் நற்செய்தியை கொண்டு செல்லும் உம் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உம்முடைய நிறைவான ஆசீர்வாதத்தை பொழிந்தருளும். இயேசுவை அறியாதவர்களுக்கும் இயேசுவை கற்பித்து, இறைவனுடைய மாட்சியையும், அவரிடமிருந்து வரும் மீட்பையும் நாங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள தேவையான இறை வரங்களை தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம். வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நேர்மையாளரே எம் இறைவா! எம் தாய் திருநாட்டின் தலைவர்களையும், அதிகாரிகளையும் சிறப்பான முறையில் ஆசீர்வதியும் . நேற்றைய தினத்தில் வெளியிடப்பட்ட நடப்பு ஆண்டிற்கான திட்ட பட்டியலில், மக்களுக்கு பயன்படும் திட்டங்களை விரைவில் செய்து முடிக்கவும், அனைத்து மக்களுக்கும் ஆன நல உதவிகள் விரைவாக சென்றடைவதற்காக இவர்கள் அனைவரும் உழைக்கவும், இவர்களுக்கு தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. எங்கள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! இந்த திருவழிப்பாட்டில் பங்கு கொள்ளும் அனைவரின் தேவைகளையும் கண்ணோக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்தருள வேண்டுமென்றும், மேலும் விண்ணக உணவாகிய உம்மை நாங்கள் இறுகப்பற்றிக் கொள்ள வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
4. நிலைவாழ்வை உடமையாக்க உரிமையளித்த எம் இறைவா! உம் திருமகன் வழியாய் நீர் எமக்களித்த வாழ்வின் வாரத்தைகளை கேட்டு, அவ்வார்த்தையைப் பின்பற்றி பேரசையின் வழியை மறந்து, புதுவழியில் பயணப்பட்டு நிலைவாழ்வை எமதாக்கிக் கொள்ள தேவையான இறைவலிமையை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
5. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும் ஆன்மீக வாழ்வில் வளரவும் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.
To download PDF