பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு
09-02-25
திருப்பலி முன்னுரை
இறைவனுடைய பணி குருத்துவத்திலும், பொது குருத்துவத்திலும் பங்கேற்று இறைவனின் ஆசிர் பெற வந்துள்ள சகோதர, சகோதரிகளே!
இறைவன் தன்னுடைய மக்களுக்காக எண்ணற்ற இறைவாக்கினர்களையும், நீதி தலைவர்களையும், அரசர்களையும், ஞானிகளையும் அனுப்பி மீட்பின் பாதையில் பாதையில் அவர்களை நடத்திச் சென்றார். புதிய ஏற்பாட்டில் தாழ்ச்சியை ஆடையாக அணிந்து இறைமகன் இயேசு கிறிஸ்துவே நம்மை வழி நடத்துவதற்காக மண்ணகத்தில் மனிதராய் பிறந்தார். மண்ணகத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து தனக்குப்பின் திருஅவையையும் மற்றும் இவ்வுலக மக்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்வதற்கு திருத்தூதர்களையும், சீடர்களையும் ஏற்படுத்தினார்.
பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறாகிய இன்று நமக்கு தரப்பட்டுள்ள அனைத்து வாசகங்களும் இறைய அழைத்தலை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இறைவனே, திருஅவை என்னும் இத்திராட்சை தோட்டத்தின் உரிமையாளர். நாம் அனைவரும் அதில் பணிபுரியும் பணியாளர்கள். எனவே நாம் இறைவனின் பணியில் இறைவனோடு பங்கேற்கின்றோம். என்ற மனநிலையை பெற வேண்டும். அன்று தன்னுடைய பணிக்காக இறைவாக்கினர் எசாயாவை, புனித பேதுரு மற்றும் பவுலை அழைத்த இறைவன் இன்று நம்மையும் அழைக்கின்றார்.
இறைவனின் வார்த்தைகள் அடங்கிய திருவிவிலியத்தை நன்குணர்ந்து, இயேசு காட்டிய இறையன்பு மற்றும் பிறரன்பு பாதையில் பயணித்து, இயேசுவின் உண்மை சீடர்களாக திகழ இந்த அழைப்பின் விருந்தில் பெரு மகிழ்வுடன் பங்கு கொள்வோம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் இறைவாக்கினர் எசாயாவை தனது பணிக்காக அழைக்கின்றார். இறைவாக்கினது எசாயா தன்னுடைய இயலாமையும், அசுத்த தன்மையையும் இறைவன் முன் வைக்கின்றார். ஆனால், இறைவன் அவரை மாசற்றவராக மாற்றி இறை பணிக்காக தன்னுடன் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு விளக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கிறிஸ்தவர்களை தன் வாளால் வெட்டி வீழ்த்திய சவுல், கிறிஸ்துவின் மூலம் மன மாற்றம் பெற்று புனித பவுல் ஆக மாறுகின்றார். திருத்தூதர்களில் கடைசியானவராகிய புனித பவுல் தன்னுடைய அழைப்பை பற்றி கூறும் வார்த்தைகள் அடங்கிய இவ்வாசகம்; நம்மை இறைபணிக்காக அழைக்கின்றன என்ற மனதிடத்துடன் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. உலகை மீட்க வந்த எம் இறைவா! நீர் விட்டு சென்ற மீட்பின்; பணியை இவ்வுலகத்தில் தொடர்ந்த ஆற்றும் திருஅவையின்; அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் அனைவரும் இறைவனின் பாதையில் தொடர்ந்து பயணித்து இறைவனின் அழைப்பில் என்றும் நிலைத்திருக்க தேவையான அருள் வரங்களை தந்தருள் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. உண்மைக்கு உயிர் கொடுக்கும் என் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்களும், அதிகாரிகளும் தங்களின் பொறுப்புகளை நன்குணர்ந்து, தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை கடமையுடன் ஆற்றவும், லஞ்சமற்ற நேர்மையான சமுதாயத்தை உருவாக்க வேண்டிய நல்ல மனதையும் தந்தருள வேண்டும் என்று உண்மை மன்றாடுகிறோம்.
3. இறைப் பணியில் இன்புற்ற எம் இறைவா! திருஅவையின் நலனுக்காக உழைக்கும் அனைத்து பொதுநிலையினருக்காகவும் மன்றாடுகின்றோம். பாடகர் குழு. பீடச் சிறுவர்கள். வேதியர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள், ஆலய தூய்மை பணியாளர்கள் மற்றும் இன்ன பிற பணிகளை புரியும் அனைவருக்கும் நிறைவான ஆசீரளித்து அவர்கள் உள்ளமும், இல்லமும் அன்பால் நிரம்பிட வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. அறுவடைக்கு வேண்டிய வேலை பணியாளர்களை அனுப்பும்படி மன்றாட எம்மை பணித்த எம் இறைவா! இறைவனை அழைப்பு ஏற்று, பணிக்குருத்துவதற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அனைத்து அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். அதிலும், சிறப்பாக எம் பங்கில் பணிபுரியும் அருள் தந்தையர்களையும், கன்னியர்களையும் நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இறைப்பணியில் மென்மேலும் வளர தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
5. நோயாளிகளை குணமாக்கிவரே எம்; இறைவா! சமூக நல சேவைகளையும், சமூக மாற்றத்தையுமே தங்கள் முழு மூச்சாக கொண்டு உழைக்கும் அனைத்து உள்ளங்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற்று சமூக நோய்களையும், சமூக அநீதிகளையும் வேரறுக்க தேவையான வல்லமை இவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.