பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு 29-09-2024
திருப்பலி முன்னுரை
இறைவனுடைய உண்மையின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்க இன்னொரு முறை இந்த இறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! நாம் அனைவரும் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்றால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற படிப்பினைகளை மையமாகக் கொண்டு இன்றைய வாசகங்கள் நம்மை சிந்திக்க அழைக்கின்றன. இறைவனின் விருப்பப்படி வாழ்வதற்கு இறைவன் தன்னுடைய ஆவியை நமக்கு வழங்குகின்றார். இறைவனின் சாயலாக இருக்கும் நாம், அந்த இறை ஆவியின் தூண்டுதல் படி வாழ அழைக்கப்படுகின்றோம். நம் வாழ்வை இறைவனுக்கு உகுந்த வாழ்வாக மாற்ற இறைவனளிக்கும் அந்த உன்னத ஆவியின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும். தூய ஆவிக்கு செவி சாய்க்காமல் நாம் நம் விருப்பத்திற்கு செயல்படும் பொழுது பாவத்தில் விழுகின்றோம். நம்மை பாவத்தில் விழச் செய்வது நம்முடைய பேராசையும், சுயநல எண்ணங்களுமே;. நம்மை பாவத்தில் விழச் செய்வது எதுவாகினும் அதை விட்டுவிட்டு, இறைவன் விருப்பப்படி வாழ்வதே இறைவனுக்கு உகந்த வாழ்க்கை. எனவே, நம் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பேராசையையும், சுயநல எண்ணங்களையும் வெட்டி எறிவதன் மூலம் நம்மை நாம் ஆண்டவருடன் இணைத்துக்கொள்ள முடியும். இறைவனோடு உறவாடும் இந்த உன்னத பலியில், இறைவனின் ஆவியை முழுமையாக பெற முயற்சி செய்வோம். நம்முடைய பேராசைகளையும், சுயநல எண்ணங்களையும் விலக்கிவிட்டு இறைவன் காட்டும் வழியில் நம் வாழ்வை வழிநடத்த வேண்டிய வரங்களை வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
இறைவன் தன்னுடைய இறைவாக்குறைக்கும் பணிக்கு பலரை தெரிந்து கொண்டார். அவர்களுக்கு தன்னுடைய வாழ்வு தரும் ஆவியை அளித்து புத்துயிர் அளித்தார். இறைவன் மோசேவுக்கு துணையாக 70 மூப்பர்களை தன்னுடைய ஆவினால் நிரப்பி, இறைவாக்குறைக்கும் பணிக்கு அமர்த்தும் நிகழ்வை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசகம் முன்னுரை
இவ்வுலகம் அளிக்கும் அழிந்து போகும் செல்வத்தை சேர்ப்பது ஒன்றுக்கு உதவாது. அது பூச்சிகளால் அறிக்கப்பட்டு அழிக்கப்படும். பேராசை எண்ணத்துடனும், சுயநலப் போக்குடனும் நம் வாழ்வை நகர்த்துவது நமக்கு அழிவைத் தரும் என்ற எச்சரிக்கையை கொடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி செவி கொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பை ஆணிவேராக வைத்து நீர் உருவாக்கிய உம் திரு அவைக்காக மன்றாடுகின்றோம். இறைவாக்கினர்களும், மெசியாவும் எவ்வித தொய்வும் இன்றி இறைப்பணி ஆற்றியது போல உம் திரு அவையின் தலைவர்களும், உறுப்பினர்களும் தளராது இறைப்பணி ஆற்ற தேவையான மன திடத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நல்ல மேய்ப்பனே எம் இறைவா! இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்கிறோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், தங்களுடைய வாழ்வின் சுயநல எண்ணங்களுக்காக மக்களை பயன்படுத்தாமல் இருக்கவும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. நலம் தரும் நற்கருணை நாயகனே எம் இறைவா! இவ்வுலகில் நோய்களாலும், போர்களாலும் மற்றும் கொடிய இனவாதத்தாலும் பாதிப்படைந்து தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் மன்றாடுகிறோம். நீரே அவர்களை உம்முடைய பிள்ளைகளாக கருதி அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
4. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும் ஆன்மீக வாழ்வில் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
5. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களுடைய குறைகளை ஏற்று, இறைவழியில் நடந்து, இறைவனின் வல்லமையை பெற எங்களுக்கு தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.