பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு 27-10-2024
திருப்பலி முன்னுரை
நம்மிடத்தில் உள்ள குறைகள் தான், நாம் நிறைவுள்ள இறைவனோடு ஒன்றிணைவதற்கான முதன்மையான காரணம். வளமையான வாழ்வு வாழ்பவர்களின் பக்கத்தில் இறைவன் இருப்பதை விட, வலி நிறைந்த வாழ்க்கையை வாழ்பவர்களின் உள்ளத்தில் இருக்கின்றார் என்பது நிதர்சனம். நம் வாழ்வில் நாம் வலிகளை சந்திக்கின்றோம் என்றால் இறைவன் நம் உள்ளத்தில் குடி கொண்டுள்ளார் என்று பொருள் கொள்ளலாம். ஏனெனில், நம்மிடத்தில் உள்ள குறையை நிறைவு செய்ய, இறைவனே நேரடியாக நம்மை தேடி வருகின்றார். இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைப்பது போல இறைவன்தாமே நலிவுற்றவர்களின் ஆதரவாக இருக்கின்றார். உடலளவிலும், உள்ளத்தளவிலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இயேசு கிறிஸ்து குணமளிக்கின்றார். நம் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள குறையை மற்றவரிடத்தில் உள்ள நிறைவை வைத்து சரிசெய்து செய்ய வாழ்வில் நிறைவுகாண இறைவன் நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றார். பார்வையற்றோர், முதியோர் மற்றும் இயல்பான வாழ்க்கையை வாழ இயலாதவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய இறைவன் நம்மை அழைக்கின்றார். இந்த அழைப்புக்கு நம்மையே நாம் தகுதி ஆக்கிக் கொள்வதற்கு நாம் உறுதியான இறை நம்பிக்கை பெற்றவர்களாக இருக்க வேண்டும். எனவே, இயேசுவைப் போல இயலாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்யும் மனதையும், அதற்கு தேவையான ஆழ்ந்த இறை நம்பிக்கையும் வேண்டி இந்த அன்பின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசகம் முன்னுரை
இறைவாக்கினர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படும் இறைவாக்கினர் எரேமியா, இஸ்ரேயலிருந்து சிதறடிக்கப்பட்ட இஸ்ரேல் மக்கள் பெருங்கூட்டமாய் இறைவனை நோக்கி வருவர் என்றும், அவர்களில் பார்வையற்றோரும், கால் ஊனமுற்றோரும், கருவுற்றோரும், பேருகால பெண்களும் அடங்கி இருப்பர் என்று இறைவாக்குரைப்பதை இம்முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.
இரண்டாம் வாசகம் முன்னுரை
திருமுழுக்கு பெற்ற நம் அனைவருக்கும் வழங்கப்பட்ட அழைத்தல் வாழ்வானது நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. இறைவனே, தன்னுடைய இறைபணியை ஆற்றுவதற்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றார். அவ்வகையில் தன்னுடைய பணியை செய்ய இறைமகன் இயேசு கிறிஸ்துவை இறைவன் அழைத்தார் என்ற கூற்றை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. சிதறிய உள்ளங்களை சீர்படுத்தும் எம் இறைவா! மனதளவில் காயப்பட்ட உம்முடைய பிள்ளைகளாகிய எங்களை நிறைவாக ஆசீர்வதியும் , பார்வையற்ற பார்த்தல்மேயோவின் கண்களுக்கு ஒளி தந்து ஆசீர்வதித்ததை போல, நொறுங்கி எங்கள் உள்ளங்களை சீரமைத்து ஒளிதர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. வழிநடத்தும் எம் இறைவா, எங்களை வழி நடத்தும் திரு அவை மற்றும் அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். தங்களுக்கு அளிக்கப்பட்ட பதவியை பிறருக்கு பணி செய்ய கிடைத்த வாய்ப்பாய் கருதி பணியாற்றிட தேவையான வரங்களைத் இவர்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. காயப்பட்ட ஆடுகளை தேடிச் செல்லும் இறைவா! சமூகத்தில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், நாங்கள் உதவியாக இருக்கவும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கும் எங்களுக்கு தேவையான வரங்களை தந்துள்ள வேண்டும் என்று உண்மை மன்றாடுகின்றோம்.
4. தேடிச் சென்று உதவும் இறைவா! பல்வேறு பிரச்சனைகளால் காப்பகங்களில் இருக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை நாங்கள செய்;யவும், எங்கள் இல்லங்களில் உள்ள குறைபாடுள்ளவர்களை நன்றாக கவனித்து கொள்ளதற்கும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
5. துன்புறும் ஊழியனே எம் இறைவா ! பேரிடர் காலங்களிலும், மற்ற ஆபத்து நேரங்களிலும் மீட்பு பணியில் ஈடுபடும் அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் புரியும் வேலைகள் நீரே இவர்களுக்கு பாதுகாப்பு அளித்து, அவர்களுக்கு எவ்வித் ஆபத்தும் நேரிடாதபடி காத்தருள் வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.