பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு 20-10-2024
திருப்பலி முன்னுரை
மன்னக மாந்தரின் பாவங்களைப் போக்க தம் இன்னுயிர் தந்த இயேசுவைக் காண இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் 29-ஆம் ஞாயிறு திருவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நம்மை தாழ்ச்சியுள்ள நல்ல தொண்டனாக வாழ அழைக்கின்றது. விண்ணகத்தில் இறைவனுடன் இருந்த இறைமகன் நம் அகத்தை சீரமைப்பதற்காய் இம்மண்ணகத்தில் பிறந்தார். கிறிஸ்து இறைவனாக இருந்த போதிலும் இறைவனுக்குரிய பண்புகளை மட்டும் பற்றிக்கொள்ளவில்லை. மனிதராக பிறந்து அனைத்து சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டார். அவர் பாவம் ஏதும் செய்யவில்லையென்றாலும், நம்முடைய பாவங்களுக்காக துன்புற்று, துன்புறும் ஊழியனாக திகழ்ந்தார். உலகையே ஆள நினைத்த பல அரசரகள் மணிமுடி சுமந்து ஆட்சி செய்தனர், தங்கள் அரியணையை இழந்தனர். நம்முடைய கிறிஸ்து அரசரோ முள்முடி சூடி, இவ்வுலகை இன்றும் ஆட்சி செய்கின்றார். இதற்கு காரணம் இயேசுவின் தாழ்ச்சியும், பிறரன்பு நேசமுமே. இயேசவின் சீடர்களாகிய நாம் அனைவரும் தலையேழு புண்ணியங்களில் ஒன்றான தாழ்ச்சி என்ற நற்குணத்தை அடையாக அணிய அழைக்கப்படுகின்றோம். பிறரன்பும், தாழ்ச்சியும் இருக்கும் இடத்தில் பெரியவர் சிறியவர், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற எந்த பாகுபாடும் இருக்காது. எனவே. இறைவனின் அருளைப் பெற, தாழ்ச்சியை நமதாக்க இந்த உன்னத கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்;.
வாசக முன்னரைகள்
முதல் வாசக முன்னுரை
இறைவன் இறைமக்களை பாவத்தின் பிடியிலிருந்து மீட்டு இறைப்பாதையில் நடத்திட எண்ணற்ற முயற்சிகளைச் செய்தார். பல இறைவாக்கினர்களை மக்களிடையே அனுப்பினார். அவ்வாறு அனுப்பப்பட்ட இறைவாக்கினர்கள் இறைவனின் துன்புறும் ஊழியனாக இருந்து மக்களை பாவத்திலிருந்து எவ்வாறு மீட்டார்கள் என்பதை விளக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
மனிதராக பிறந்த இயேசு கிறஸ்து நம்மைப் போல பல வகைகளில் சோதிக்கப்பட்டார். ஆனால், அவர் நம்மைப்போல பாவம் ஏதும் செய்யவில்லை. இரக்கமும், பரிவும் கொண்ட நம் இறைவன் நமக்கெல்லாம் தலைமைக் குருவாக இருக்கின்றார். நம் பாவங்களுக்காக உயீர் நீத்த நம் இறைவன், நம்மை புதுவாழ்வு வாழ அழைக்கின்றார். புதுவாழ்வு பெறும் ஆவலுடன் இவ்விரண்டாம் வாசகத்தை பக்தியுடன் கவனிப்போம்.
மன்றாட்டுகள்
1. பாவிகளைத் தேடிச் சென்று மீட்ட எம் அன்பு இறைவா! நீர் ஏற்படுத்திய பிறரன்பு பணிகளை, தொண்டருக்கெல்லாம் தொண்டாராக இருந்து இன்று வரை ஆற்றி வரும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காவும் மன்றாடுகின்றோம். நற்செய்தி அறிவிப்பிலும், இறை சேவை புரிவதிலும் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் எங்களுடன் இருந்து எங்களை வலுப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
2. தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! எம் மக்களை ஆளும் தலைவர்களும், அதிகாரிகளும் தாங்கள் மக்களின் பணியாளர்கள் என்பதை முழமையாக உணர்ந்து, மக்களின் நல்ல சேவகர்களாக செயல்படவும், மக்களுக்கு தேவையான அரோக்கியமான திட்டங்கனை இயற்றவும் தேவையான உள்ள அற்றலை தந்தருன வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. உழைப்பின் உயர்வை அறிந்த எம் இறைவா! கடினமாக உழைத்து இந்த சமுதாயத்தின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் எங்களுடைய பணியில் ஈடுபடும் பொழுது எந்தவித துன்பங்களும் எங்களை நெருங்காதபடியும், நாங்கள் பணியை சிறப்புடன் ஆற்ற தேவையான ஆற்றலையும் தந்தருளு வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. இயற்கையை ஆளகை புரியும் எம் இறைவா! இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பவும், இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் அறிவையும், இயற்கையின் போக்கை புரிந்து கொண்டு நாங்கள் அனைவரும் இயற்கையினை சேதபடுத்தாமல் இருக்க வேண்டிய பொறுப்பையும் எங்களுக்கு தந்தருளு வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
5. எங்களுக்கு எல்லாமுமான எம் இறைவா! செபமாலைக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த மாதத்தில் நாங்கள் எடுக்கும் பக்தி முயற்சிகள் அனைத்திலும்; உம் ஆசீரை பொழிந்தருள வேண்டுமென்றும், நாங்கள் எழுப்பும் மன்றாட்டுகளுக்கு செவிசாய்த்து எங்கள் ஆன்மீக வாழ்வில் நாங்கள் மென்மேலும் வளர அருள்புரிய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
உண்மையாக உழையுங்கள்
ஊதியத்திற்காக அல்ல, ஊழியத்திற்காக
**Thirupali Munnurai**
**Mass Introduction**
**Sunday**


No comments:
Post a Comment