இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Thursday, December 5, 2024

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு 08-12-2024

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு 08-12-2024



திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு 08-11-2024

திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின் வருகைக்கான தயாரிப்பில் இருக்கும் நாம், திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறில் அமைதி என்ற இறைவனின் பேரருளை மையமாகக் கொண்டு சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். அமைதி என்பது, நம் அகத்திலிருந்து பிறக்கின்றது என்கிறார் புத்தர். உண்மையில், சமுக பழுமைவாதத்தாலும் உலக மாயைகளாலும் நாம் உண்மையான அமைதியை அடைய முடியாது. பள்ளங்கள் நிறைந்த இந்த பாதையை சமன்செய்யவே, இயேசு பாலன் நம் அகத்தின் அமைதியை அலங்கரிக்க நம்மிடையே பிறக்கிறார். எவ்வித பிரச்சனைகளுமின்றி, சண்டை சச்சரவுகளும் இல்லாமல் வாழ்வது முழமையான அமைதி அல்ல. முழுமன நிறைவுடன், இறைவனோடு இணைந்த நிலையில் வாழ்வதே அகநிலை அமைதியாகும். மனிதர்கள் தங்கள் வாழ்வின் பிரச்சனைகளை பணம், பதவி மற்றும் உலக இன்பங்கள்  மூலமாக திர்வு கண்டு அமைதி அடையலாம் என்று கருதுகின்றனர்.  உலக நாடுகள் தங்களின் எல்லைகளில் உயரக கருவிகளையும், ஆயுதங்களையும் கொண்டு துப்பாக்கி மொழியினால் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். உண்மையான அமைதி என்பது நாம் ஒருவர் மற்றவரிடத்தில் கொண்டுள்ள அன்பின் மூலமாகவே முழுமை பெறும். அமைதி இழந்த இவ்வுலகிற்கு அமைதியை கொணர வந்த பாலன் இயேசுவின் புன்னகையின் மலர்ச்சியைப் போல் நம் வாழ்வில் அமைதி மலர வேண்டி, இந்த அகஅமைதி அளிக்க வல்ல உயர்வின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

கிறிஸ்துமஸ் ரீத் - அமைதி முன்னுரை

திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் இயேசு பாலன் அளிக்கும் அமைதி என்னும் கொடையை பெற்றுக் கொள்ள நம்மையே நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவினுடைய பிறப்பு, சமூகத்தின் கடைநிலையானவர்கள் என்று கூறப்பட்ட இடையர்களுக்குதான் முதலில் அருளப்பட்டது. இயேசு பாலனின் ஆசிரும் அவர்களுக்குத்தான் முதலில்  வழங்கப்பட்டது. ஏனெனில், கிறிஸ்து இவ்வுலகிற்கு கொண்டு வரும் அமைதியானது எளியவர்களுக்கானது. திருவருகைக்காலத்தின் முதல் வாரத்தில் நம்முடைய நம்பிக்கை உறுதிப்படுத்திய நாம் இரண்டாம் வாரத்தில் இறைவன் அருளும் அமைதியை பெறுவதன் அடையாளமாக அமைதியின் திரியை ஏற்றி இவ்வாரம் முழுவதும் இறைவன் அருளும் அக அமைதியை நம் ஆடையாக ஏற்றுக் கொள்ள சிறப்பாக வேண்டி ஜெபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பாருக்கு நூலிளிருந்து வாசிக்கப்படும் முதல் வாசகம்; எருசலேமின் மறுமலர்ச்சியையும், கடவுளின் மாட்சியிலும் இரக்கத்திலும் அது அடையும் உயர்வையும் எடுத்துரைக்கிறது. பகைவரால் சிதறிய இஸ்ரேயல் மக்களை கடவுள் திரும்ப அழைத்து, நீதியுடனும் அமைதியுடனும் புதுப்பாதையில் நடத்திடுவார் என்ற நம்பிக்கையும், இறைவனின் மக்களை இறைவன் கைவிடுவதில்லை என்ற உறுதியையும் அளிக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுல், பிலிப்பியர்களின் நற்செய்திப் பணியில் காணப்படும் உறுதியையும் கடவுளின் கருணையையும் புகழ்ந்து எழுதுகிறார். அவர் அவர்களுக்கான தனது மன்;றாட்டுகளையும், ஆவலையும் பகிர்ந்துகொள்கிறார். அன்பிலும் அறிவிலும் மேன்மேலும் வளர்ந்து, குற்றமற்றவர்களாக நேர்மையுடன் வாழ்ந்து, கிறிஸ்துவின் நாளுக்கென்று நீதியின் செயல்களால் நிரம்பியவர்களாக இறைவனை மகிழ்விக்கவே வாழ வேண்டும் என்ற பவுலின் உள்ளக் குரலை இவ்விரண்டாம் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

மன்றாட்டுகள்

  1. அமைதி இழந்து தவிக்கும் வேளைகளில் ஓடி சென்று உதவும் உம்; திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் நீர் கற்றுத் தந்த அமைதியின் பாதியை இம்மண்ணுலகில் நிறுவிடவும், உன் பிறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் எங்கள் அனைவர் வாழ்விலும் அமைதி மலரவும் வரமருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
  2. பல்வேறு கலவரங்களிலும், வன்முறையிலும் தங்கள் வாழ்க்கையை இழந்த அனைவருக்காகவும்  மன்றாடுகிறோம். அமைதியிழந்து அகதியாய் தவிக்கும் இவர்களுக்கு நீரே ஆறுதலாக இருந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும் இருக்க வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்
  3. எங்கள் குடும்பங்கள் அனைத்தும் திரு குடும்பத்தை பிரதிபலித்து, திருக்குடும்பத்தில் நிலவிய அன்பு, அமைதி மற்றும் பரிவு போன்ற இறை மதிப்பீடுகளில் மேலோங்கவும், கிறிஸ்துவின் பிறப்பால் திருக்குடும்பம் நிறைவு பெற்றது போல, கிறிஸ்துவின் வருகையால் எங்களின் ஒவ்வொருவரின் குடும்பமும் நிறைவு பெற வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. கிறிஸ்துவின் அன்புப் பணியை உலகெங்கும் ஆற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்காவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு நீரே துணையாக இருக்க வேண்டுமென்றும், மேலும் இவர்கள் செய்யும் பணியை தொடர்ந்தாற்ற தேவையான இறை அழைத்தல்களை எங்கள் பங்கில் உருவாக்கி தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. எங்களை அதிகமாக நேசிக்கும் அன்பு இறைவா! இறைவனே மனிதனாக பிறந்து இயற்கையின் அங்கமானதை நாங்கள் உணர்ந்து, இயற்கையுடன் இணைந்து வாழ எங்களுக்கு தேவையான அறிவையும், பருவநிலை மாற்றத்தோடு இணைந்து வாழும் ஆற்றலையும் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

No comments:

Post a Comment

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...