திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று திருவருகை காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் அடி எடுத்து வைக்கிறோம். இக்காலம் இறைமகனின் வருகைக்காக நம்மை தயாரிக்கின்ற காலம். அதிலும், சிறப்பாக திருவருகை;காலத்தின் இம்முதல் வாரத்தில் நாம் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையை பலப்படுத்த அழைக்கப்படுகின்றோம். இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்காக நாம், நம் இல்லத்தை மட்டுமல்லாமல், நம் உள்ளங்களையும் தயாரிக்க இத்திருவருகைக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இன்றைய மூன்று வாசகங்களும் இறைமகனின் வருகையை பற்றியும் அதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய தயாரிப்பு கடமைகளை பற்றியும் நமக்கு போதிக்கின்றன. இறைவனின் வார்த்தைகளுக்கேற்ப நோவா தன்னை தயார்படுத்திக் கொண்டார். அதனால், தன்னுடைய உயிரையும், இறைவனோடு கொண்ட உறவையும் காத்துக்கொண்டார். நோவாவைப் போல் நாமும் நம்முடைய இறைமகனின் வருகைக்காக நம்மை தயார் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் நம்மை தயார் செய்யும் பொழுது கிறிஸ்து பிறப்பின் மகிழ்வில் தகுதியுடன் பங்கெடுக்க முடியும். எனவே, கிறிஸ்து பிறப்பின் நிகழ்விற்காக நம்மைத் தயாரிக்கும் இத்தாயரிப்பின் பயணத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
கிறிஸ்துமஸ் ரீத் முன்னுரை
நம்பிக்கை
கிறிஸ்துவில் நம்பி;க்கைக் கொள்வோர் என்றென்றும் வாழ்வு பெறுவர் என்ற இறைவார்த்தைகளை மையமாக வைத்து நம்முடைய நம்பிக்கை வாழ்வை ஆழப்படுத்த வேண்டும். அதே வேளையில், நம்முடைய நம்பிக்கை நம் செயல்களில் வெளிபட வேண்டும். இதைத்தான், புனித பவுல் செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம் என்கின்றார். நம்முடைய சொல், செயல்களில் நம்முடைய கிறிஸ்துவின் போதனைகளை வெளிப்படுத்தவும். நம் அயலாரை அன்பு செய்தல், பிறருக்கு உதவுதல், இறைவனைனோடு கொண்ட உறவை இறைவேண்டல் மூலம் அதிகரித்தல் போன்ற நம்பிக்கையின் கனிகளை நம்முடைய வாழ்வாக்குவதன் அடையாளமாக இந்த நம்பிக்கையின் திரியை ஏற்றி திருவருகைக்காலத்தின் முதல் படிநிலையில் பயணமாக தயாராகுவேம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
ஆண்டவரின் ஆசிர் பெற்ற மக்களினமாக கருதிய இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய பாவங்களால் இறைவனை மறுத்தலித்தனர். இருப்பினும், இறைவன் முன்குறித்தது போல தன்னுடைய மகனை இறைமக்களின் மீட்புக்காக அனுப்புவதாக முன்னறிவித்தார். இவ்வாறு, வரப்போகும் மீட்பரை எதிர்நோக்கி காத்திருக்கும் நமக்கு அளிக்கப்பட்ட இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கிறிஸ்தவ வாழ்வென்பது கிறிஸ்துவின் வார்த்தைகளை அறிந்து, அதன்படி வாழ்வதாகும். கிறிஸ்துவின் மக்கள் என்பவர்கள் நீதிநெறி தவறாமல், ஒளியில் நடப்பவர்கள் ஆவார்கள். கிறிஸ்துவை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்கும் நாம் அனைவரும் நம்முடைய வாழ்கையை நிதியின் பாதையில் நடத்துவதற்கு அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. இறையன்பையும், இறைவன் தரும் மீட்பையையும் இவ்வுலகிற்கு என்றென்றும் அளிப்பதற்காக உழைக்கும் திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உம்முடைய அன்பின் பாதையில் பயணித்து, இறைவன் தரும் மீட்பை நாங்கள் எமதாக்கிக் கொள்ள வரமருள வேண்டுமென்று உம்;மை மன்றாடுகிறோம்.
2. இவ்வுலகத் தலைவர்கள் தங்களின் நலனிலும், புகழிலும் அக்கறை கொள்ளாமல், மக்களின் நலனுக்காக இடைவிடாது உழைக்கவும், மக்களை இனத்தின் அடிப்படையில் பிரித்தாளாமல் அன்பினை ஆதாரமாக வைத்து, அமைதியான உலகை உருவாக்க வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்
3. இறையரசை நிறுவிய எம் இறைவா! கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றில் முழுமையான நம்பிக்கை கொண்டு, கிறிஸ்துவின் வாழ்வை எங்களுடைய பாதையாக மாற்றிக்கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
4. கிறிஸ்துவின் பிறப்பை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்கும் எங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும், இறைவன் தரும் அன்பை நாங்கள் முழுமையாக உணர்ந்து அதை எங்கள் இல்லத்திலும், சமூகத்திலும் பிறருடன் பகிர்ந்து முழுமையான மனித வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.