திருப்பலி முன்னுரை
திருக்குடும்பத்தின் உன்னதத்தை உணர்ந்து கொள்ள இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! ஆண்டின் கடைசி ஞாயிறாகிய இன்று நம் தாயாம் திருஅவை இறைமகன் இயேசு, அன்னை மரியா மற்றும் புனித யோசப்பின் திருக்குடும்பப் பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் இறைவனை தந்தையாக விளங்குகின்றார். இப்பூவுலகின் அனைத்து உயிர்களும் இறைவனுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆகின்றோம். இந்த இறை குடும்பத்திற்கு இறைவனே தலைவராக விளங்குகின்றார். விண்ணகத்திலிருந்து இறைத்திருவுளத்தை நிறைவேற்றிய இறைவன், மண்ணகம் வந்து தன் போதனைகளை போதிக்க மனிதராய் நம்மிடையே பிறந்தார். அப்படி தன்னுடைய மனித பிறப்புக்காக அவர்கள் தேர்ந்து கொண்ட உத்தம உள்ளங்கள் தான் அன்னை மரியாவும் புனித யோசேப்பும். பாவமில்லாமல் உற்பவித்த அன்னை மரியாவும், இறை வெளிப்பாட்டால் தெளிவடைந்த புனித யோசிப்பும் மனிதராய் பிறத்த இயேசு பாலனை நன்னெறியில் நடத்தி மனித குல மீடபுக்கு காரணமாக இருந்தார்கள். ஒரு நல்ல குடும்பத்தின் பலனை அந்த சமுதாயம் அனுபவிக்கும் என்பார்கள். அதன்படி இயேசு பாலனின் திரு குடும்பம் இவ்வுலகிற்கே ஒளி கொடுத்தது. நம்முடைய குடும்பங்களும் திருக்குடும்பத்தை பிரதிபலிப்பாக இருக்கும் பொழுது நாமும் நம்முடைய சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற பலன்களை அளிக்க முடியும். எனவே, திருக்குடும்பத்தின் பண்புகளான தாழ்ச்சி, எளிமை, விட்டுக் கொடுத்தல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துதல் போன்ற பண்புகளை நம் இல்லத்தில் வளர்த்து, நம்முடைய குடும்பத்தை இறைவன் விரும்பும் திருக்குடும்பமாக மாற்ற இந்த மகிழ்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
இறை மக்கள் சமுதாயத்தை கட்டி எழுப்ப இறைவன் அவ்வப்போது அவர்களுக்கான இறைவாக்கினர்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்;. இந்த இறைவாக்கினர்கள் ஒருவரான இறைவாக்கினர் சாமுவேல் இஸ்ரேயல் மக்களின் நீதித் தலைவராக இருந்து அவர்களை பல ஆண்டுகள் வழி நடத்தினார். இறைவாக்கினர் சாமுவேலின் பிறப்பை பற்றியும் அவரை இறைவனுக்கு காணிக்கையாக அளித்ததை பற்றியும் கூறும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நம்முடைய இறைவன் நம் மீது எத்தனை அன்பு கொண்டுள்ளார் என்று நம்முடைய இயேசு பாலனின் பிறப்பு நமக்கு உறக்கச் சொல்கின்றது. கடவுளின் பிள்ளைகளாய் நம்மை மாற்ற, கடவுளின் பிள்ளையே இம்மண்ணில் மனிதராய் தோன்றி நம்மை நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றார். அப்படி மண்ணில் தோன்றிய இயேசு பாலனின் போதனைகளை கடைபிடிக்கும்படி வலியுறுத்தும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
மன்றாட்டுகள்
- இறைமகன் ஏற்படுத்திய மாபெரும் குடும்பமாகிய திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், ஒரே குடும்பமாக இருந்து, இயேசு பாலன் காட்டும் அன்பின் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், திருக்குடும்பத்தில் காணப்பட்ட இறைபண்புகளை இவ்வுலகெங்கும் எடுத்துரைத்து அமைதியான வாழ்வை அனைவருக்கும் அளிக்கவல்ல ஆற்றலை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நல்ல மேய்ப்பனே எம் இறைவா! இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், மக்கள் சமுதாயத்தை தங்களுடைய குடும்பமாக கருதி, மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- உழைப்பின் உயர்வை அறிந்த எம் இறைவா! புனித யோசப்பை; போல கடினமாக உழைத்து இந்த சமுதாயத்தின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் எங்களுடைய பணியில் ஈடுபடும் பொழுது எந்தவித துன்பங்களும் எங்களை நெருங்காதபடியும் மேலும், எங்கள் பணியை சிறப்புடன் ஆற்ற தேவையான ஆற்றலையும் தந்தருளு வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- குழந்தைகளை விரும்பிய எம் அன்பு இறைவா! தலைமுறை இடைவெளியாலும், தகவல் தொழில் நுட்ப கருவிகளாலும் கட்டுண்டு தவிக்கும் எம் குழந்தைகளுக்கு, இறையரசின் மேன்மைகளை உணர்த்தும், நல்ல பண்புகனை கொண்ட வழிகாட்டிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- திருக்குடும்பத்தை முழுமைப் பெறச் செய்த எம் இறைவா! எம் பங்கில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பத்தைப் போல எம் பங்கிற்கும், சமுதாயத்திற்கும் நிறைந்த பலனை அளிக்க வேண்டுமென்றும், அதற்கு தேவையான ஆற்றல்களைக் இக்குடும்;பங்களை வழிநடத்துபவர்களுக்கு தந்து அவர்கள் ஆன்ம, உடல் மற்றும் பொருளாதார அளவில் மேம்பட வரமுருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.