பொதுக்காலம் 14-ம் ஞாயிறு
07-05-2024
திருப்பலி முன்னுரை
வெறுமையான அப்பத்தையும், இரசத்தையும் கிறிஸ்துவின் திருவுடலாகவும், இரத்தமாகவும் மாற்றும் இவ்வுன்னத விருந்தில் பங்கேற்க வந்துள்ள சகோதர, சகோதரிகளே! நம் தாய்த் திருஅவையானது பொதுக்காலத்தின் 14-ம் ஞாயிற்று திருப்பலியை கொண்டாட நமக்கு அழைப்பு விடுகின்றது. கடவுள் உலகைப் படைத்தார். அவர் படைப்புகளின் சிகரமாக மனிதரைப் படைத்தார். அந்த மனிதன் பாவத்தில் விழுந்து மீளா முடியாமல் தவித்த பொழுது இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களின் வரிசையில் தன் ஒரே மகனான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மீட்பராக இவ்வுலகிற்கு அனுப்பினார். இவ்வாறு இறைவன் அனுப்பிய இறைவாக்கினர்களும், மெசியாவும் இவ்வுலகிற்கு எதற்காக அனுபப்பட்டார்கள் எனவும், அவர்கள் எவ்வாறு நமக்காக தங்களையே அளித்தார்கள் என்று சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. நம்முடைய முற்சார்பு சிந்தனைகள் புதிய தகவல்களை உள்ள வாங்க நமக்கு தடையாக உள்ளது. இறைவாக்கினர்களும், இயேசுவும் இன்ன பிற மகான்களும் இவ்வுலகில் பிறந்த பொழுது அவர்களை இவ்வுலகம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதற்கு காரணம் அவர்கள் மேல் மக்களுக்கு இருந்த முற்சார்பு எண்ணங்கள்தான் காரணம். பிற மனிதரிடத்திலும், இறைவனிடத்திலும் நாம் நெருங்கிய உறவு கொள்ள நம்மிடத்தில் அவர்களைப் பற்றிய முற்சார்பு எண்ணங்களை மறந்து, புதிய நேர்மறையான எண்ணங்களை கொண்டு அவர்களுடன் புதிய பயணத்தை தொடர்வதற்கு தயராக இருக்க வேண்டும். நமக்கும் பிறருக்கும், இறைவனுக்குமான உறவுகளை புதுப்பிக்க இந்த உறவின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரை
முதல் வாசக முன்னுரை
இறைவனை விட்டு விலகி சென்ற இஸ்ரேயல் மக்களை இறைவன் அப்படியே விட்டுவிடுவில்லை. அவர்களை இறைவழியில் நடத்த பல இறைவாக்கினர்களை அவர்களிடத்தில் அனுப்பினார். தாம் அறிவிக்க வேண்டிய வார்த்தைகளை இறைவாக்கினர்கள் மூலம் இஸ்ரேயல் மக்களிடத்தில் அறவித்தார். அவ்வாறு இறைவனின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இறைவாக்கினர்களின் முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நம் வலுவின்மையை நாம் எற்றுக்கொள்ளும் பொழுதுதான், அதைக் களைவதற்கான வழிகளை நாம் கண்டடைய முடியும். புனித பவுல் அடிகளார் தன்னுடைய குறைகளை ஒப்புக்கொண்டு, அதைக் களைவதற்கான வழிகளை இறைவனிடத்தில் பெற வல்லமை பெற மன்றாடுகின்றார். அவருடைய மன்றாட்டுகள் அடங்கிய இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பை ஆணிவேராக வைத்து நீர் உருவாக்கிய உம் திரு அவைக்காக மன்றாடுகின்றோம். இறைவாக்கினர்களும், மெசியாவும் எவ்வித தொய்வும் இன்றி இறைப்பணி ஆற்றியது போல உம் திரு அவையின் தலைவர்களும், உறுப்பினர்களும் தளராது இறைப்பணி ஆற்ற தேவையான மன திடத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
2. நல்ல மேய்ப்பனே எம் இறைவா! இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்கிறோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், தங்களுடைய வாழ்வின் சுயநல எண்ணங்களுக்காக மக்களை பயன்படுத்தாமல் இருக்கவும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்க தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. நலம் தரும் நற்கருணை நாயகனே எம் இறைவா! இவ்வுலகில் நோய்களாலும், போர்களாலும் மற்றும் கொடிய இனவாதத்தாலும் பாதிப்படைந்து தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் மன்றாடுகிறோம். நீரே அவர்களை உம்முடைய பிள்ளைகளாக கருதி அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
4. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும் ஆன்மீக வாழ்வில் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
5. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களுடைய குறைகளை ஏற்று, இறைவழியில் நடந்து, இறைவனின் வல்லமையை பெற எங்களுக்கு தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம
by


No comments:
Post a Comment