இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, July 12, 2024

பொதுக்காலம் 15ஆம் வாரம் – ஞாயிறு 14-07-2024

பொதுக்காலம் 15ஆம் வாரம் – ஞாயிறு 14-07-2024

பொதுக்காலம் 15ஆம் வாரம்

திருப்பலி முன்னுரை

திருமுழுக்கின் வழியாக இறைவனின் அழைப்பை பெற்று, இறைவனை தொழ இறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே!

கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் இறைவனின் அழைப்பை சிறப்பான முறையில் பெற்றுள்ளோம். தன்னுடைய அரும் அடையாளங்கள், போதனைகள், புதுமைகள் என அனைத்திலும் அன்பிற்கும், அனைவரையும் அணைக்கும் பண்பிற்கும் இறைமகன் இயேசு கிறிஸ்து முதன்மையான இடம் அளிக்கின்றார். தாம் விதைத்த அன்பின் விதையை, நாள்தோறும் பராமரிக்க தன்னுடைய சீடர்களை பணிக்கின்றார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இறைவனின் பணியை தொடர்ந்தாற்ற இயேசு கிறிஸ்து அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் இயேசுவின் பாதையை நம் பாதையாக்கிக் கொண்டு, இயேசுவின் போதனைகளை யாவருக்கும் கொண்டு செல்ல வேண்டும். இயேசு சொல்லால் நற்செய்தி அறிவித்ததை விட, தன்னுடைய செயலால் அதிக வலிமையுடன் நற்செய்தி அறிவித்தார். நாமும் நம்முடைய அயலாரிடத்தில் நமக்குள்ள வெறுப்பை விரட்டி, அவரோடு என்றும் நட்பு பாராட்டி இறைமகன் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அறிவித்த நற்செய்தியை தொடர்ந்து நம்முடைய செயல்களால் எடுத்துச் சொல்வோம். அதற்கு வேண்டிய இறை ஒளியையும், இறை ஞானத்தையும் பெற இந்த அன்பின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.


வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கு உரைப்பதும், நற்செய்தி அறிவிப்பதும் இறைவனின் பணி. இந்தப் பணியை மனித சக்திகள் தங்களுடைய வலிமையால் கட்டுப்படுத்த முடியாது. இறைவனே இறைவாக்கினர்களை தேர்ந்தெடுக்கிறார், அவரே இறைவாக்கினர்கள் மூலம் இறைவாக்குரைக்கின்றார் என்ற செய்திகளை கூறும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

தந்தை கடவுள் படைத்த இவ்வுலகை இறைவன் இயேசு கிறிஸ்து தன் ரத்தத்தின் பலனாக மீட்டெடுத்தார். மீட்டெடுத்த தன்னுடைய மக்களை தொடர்ந்து வழிநடத்த தூய ஆவியின் ஆசிகளால் அவர்களை நிரப்புகின்றார். நாமும் பாவத்திலிருந்து விடுபட்டு தூய ஆவியின் ஆசியை முழுமையாக பெறுவதற்காக இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பை ஆதாரமாகக் கொண்டு திருஅவையை நிறுவிய எம் இறைவா! திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் , நீர் விட்டு சென்ற செயல்வழி நற்செய்தி அறிவிப்பு பணியை இன்று போல் என்றும் தொடர்ந்தாற்ற தேவையான இறைவலிமையை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. அமைதியை நிலைநிறுத்தம் எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்து, மக்களுக்கு உகந்த முறையில் நிர்வாகம் செய்யவும், சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை நிவர்த்தி செய்யவும் தேவையான நிர்வாகத் திறனை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.


3. இறை திருவுளத்தை நிறைவேற்றுவதையே உணவாகக் கொண்ட எம் இறைவா! திருமுழுக்கினால் இறைவனின் அழைப்பு பெற்ற அனைவரும் இறைவனின் திருவுளத்தை அறிந்து, இறைவன் நமக்கென அளித்துள்ள பணியை சிறந்த முறையில் ஆற்றிட தேவையான மனதிடத்தை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆதரவற்றோரின் ஆதரவே இறைவா! குடும்பத்தால் விலக்கப்பட்டு இல்லங்களிலும், காப்பகங்களிலும் தங்கள் வாழ்நாட்களை கழித்துக் கொண்டிருக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு நீர்தாமே ஆறுதலாக இருந்து, அவர்கள் வாழ்வின் அனைத்து வேளைகளிலும் நிறைவு காண அருள் புரிய வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. திருப்பலியிலும், திருவழிபாட்டிலும் பங்கு கொள்ள முடியாமல் நோய் பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் எம் பங்கின் பெரியவர்களுக்காக மன்றாடுகின்றோம். ஆன்ம உணவாக உம்மை உட்கொள்ளும் அவர்கள் உன்னுடைய எல்லையில்லா வரங்களால் ஆசிர்வதிக்கப்பட்டு விரைவில் குணம் பெற அவர்களுக்கு தேவையான உடல் நலனை தந்தருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


 To download pdf




No comments:

Post a Comment

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...