Friday, August 30, 2024

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு 01 – 09 - 2024

 பொதுக்காலம் 22-ம் ஞாயிறு 01 – 09 - 2024

Scroll down for pdf

** Thirupali Munnurai **

** Sunday Mass Introduction**

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு 01 – 09 - 2024

திருப்பலி முன்னுரை

உள்ளமென்னும் இறை இல்லத்தை புதுப்பிக்க, இறை வெள்ளமாய் திரண்டு வந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் 22-ம் ஞாயிறு வாசகங்கள் அனைத்தும் , நம்முடைய வழிபாடுகளும், வாழ்க்கையும் பதிவேடுகளோடும், பகட்டோடும் நின்று விடாமல், பண்பட்ட வாழ்வை நோக்கி பயணப்பட வேண்டுமென்ற இறை ஒழுங்கின் படி வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றது. உண்மையான ஞானம் இறைவனிடமிருந்தே வருகின்றது. அறிவாளிகள் இறைவனின் கட்டளைகளைப் கற்று, அவற்றை தங்களுடைய வாழ்வாக்குகின்றனர். அறிவிலிகள் ஏட்டில் உள்ள விதிகளை பிடித்து கொண்டு ஞானத்தை கடைசிவரை பெறாமலே செல்கின்றனர். இறைவன் நமக்கு தரும் உன்னதமான கட்டளைளில் முதன்மையானது பிறரிடத்தில் அன்புகாட்டுவது. எனவே, பிறரன்பு பணியில் ஈடுபடுபவரே ஞானமுடையோர். அன்புடையோர் பிறருக்கெதிராய் செயல்பட மாட்டார்கள். அன்னை தெரசா தன்னுடைய இறை ஞானத்தின் வெளிப்பாடாக நலிந்தவர்களிடத்தில் அன்பு பாராட்டினார். இன்னல்களின் மத்தியில் தன்னை எதிர்த்தவர்களுக்கும், இன்முகத்துடன் பணியாற்றினார். இதுவே, இறை வெளிப்பாடு. இதுவே இறைவன் அளிக்கும் ஞானம். ஆகவே, ஞானத்தை நமத்தாக்க அன்புப் பாதையில் பயணிப்போம். அன்பின் பலியில் இணைவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவனின் ஆசி பெற்ற பேரினமாய் திகழ, இறைவனின் கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும். எகிப்தின் பிடியிலிருந்து இஸ்ரேயல் மக்களை மீட்ட இறைவன், அவர்களுக்கு, நியமங்களையும், ஒழுங்குமுறைகளையும் அளித்து அவர்களை ஒரு பேரினமாக்கி, காத்து, வழிநடத்தும் நிகழ்வை எடுத்துக்கூறும் இம்முதல் வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவார்த்தைகளை அறிந்து, அதன்படி வாழ்வது வெறும் வாழிபாட்டில் மட்டும் பிரதிபலிக்கக் கூடாது. அது நம் வாழ்விலும் வெளிப்பட வேண்டும். இன்னலுறுபவர்களுக்கும், எளியவர்களுக்கு நாம் செய்யும் சேவையே, இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய சேவை என்ற இறைஞானத்தை தரும் இவ்விரண்டாம் வாசககத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. எளியவர்களின் இல்லமாக திரு அவையை உருவாக்கிய எம் இறைவா! உன் அன்பின் நீட்ச்சியாக நீர் ஏற்படுத்திய திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். எளியவர்களிடத்தில் அதிக அன்பு செலுத்தி, காயப்பட்ட ஆடுகளை தேடி அரவணைக்க தேவையான இறைவலிமையை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. உண்மைக்கு குரல் கொடுத்த எம் இறைவா! சமூகத்தில் உள்ள பிரச்சனைகளையும், அடக்குமுறைகளையும், நாங்கள் கண்டும் காணதது போல் இல்லாமல், நாங்களும் சமுகத்தின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து, எங்களுடைய சமுக பொறுப்புகளை ஆற்றிட தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. இயற்கையை ஆளுகை செய்யும் எம் இறைவா! நீர் நல்லதென கண்டு படைத்த இயற்கையை, நாங்கள் நல் முறையில் பாதுகாக்கவும், இயற்கையின் அசூர மாற்றங்கள் எங்கள் வாழ்வின் அன்றாட செயல்களை பாதிக்காமால், இயற்கையோடு நாங்கள் என்றும் இணைந்திருக்கும் அருள் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.

4. வார்த்தைக்கு வாழ்வளிக்கும் எம் இறைவா! இறைஞானம் பெற இறைப்பிடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும், பிறரன்பு பகிர்வில் வெறும் சொல் வீரர்களாய் மட்டும் இல்லாமல், செயல் வீரர்களாய் இருந்து, பிறரன்பு பணியில் ஈடுபட்டு இறைஞானத்தை எமதாக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. நொருங்கிய உள்ளத்தை பலியாக கேட்ட எம் இறைவா! பேராசை, தீச்செயல், வஞ்சகம், , பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்ற உள்ள அழக்குகளை அகற்றி, எங்கள் இல்லங்களை நாங்கள் அலங்கரிப்பது போல, எங்கள் உள்ளங்களையும் அலங்கரிக்கும் வரம் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.



To download pdf


Wednesday, August 21, 2024

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு 25 – 08 – 2024

 பொதுக்காலம் 21-ம் ஞாயிறு 25 – 08 – 2024

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு 25 – 08 – 2024

திருப்பலி முன்னுரை

இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு இறைவழியில் பயணிக்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே ! தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது என்ற யோவான் நற்செய்தியாளரின் வார்த்தைகளின் சுருக்கத்தை தியானிக்க பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறாகிய இன்று நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். கடவுளோடு விண்ணகத்தில் வீற்றிருந்த இயேசு, மண்ணகத்தில் மனிதராக பிறந்து, மனிதராக வாழ்ந்து, இறைபடிப்பினைகளை வார்த்தையாலும், தன்னுடைய வாழ்வாலும் மக்களுக்கு போதித்தார். இயேசுவினுடைய அன்பின் போதைனைகள் மீது பலர் நம்பிக்கைக் கொண்டனர், சிலர் அவற்றின் மீது நம்பிக்கைக் கொள்ளவில்லை. நாமும் பல நேரங்களில் இயேசுவின் போதைனைகளில் இருந்து தவறி நடக்கின்றோம், இதற்கு காரணம், நாம் இயேசுவினுடைய இறைத்தன்மையை பற்றிய முழமையான அனுபவம் பெறாததே காரணமாகும். நாம் நம்முடைய ஊனியல்புகளுக்கு இடம் கொடுக்;காமல், தூய ஆவியால் முழமையாக ஆட்கொள்ளப்படும் பொழுது, இயேசு காட்டும் பாதையில் பயணிக்க முடியும். தூய அவியால் முழமையாக ஆட்கொள்ளப்படுவதற்காகவும், இயேசுவின் வார்த்தைகளை நம் வாழ்வாக்கவும் வேண்டியும் இந்த உறவின் விருந்தில் பங்கேற்போம்.  

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

 வேற்று தெய்வங்கள் மீதும் ஆர்வம் கொண்டு பொய் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்ரேயல் மக்களை, இறைவன் தன்னுடைய பணியாளராகிய யோசவா மூலம் நெறிப்படுத்துகின்றார். இறைவனின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்த இஸ்ரேயல் மக்களும், இறைவன் தங்களுக்கு செய்த அரும் அடையாளங்களை எண்ணி, இறைவன் பதம் திரும்பும் நிகழ்வை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

 கிறிஸ்துவை மனமகனாவும், கிறிஸ்து ஏற்படுத்திய திருஅவையை மனமகளாகவும் உருவகப்படுத்திய பவுல் அடிகளார், திருஅவையின் உறுப்பினர்காளாகிய நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று போதிக்கின்றார். கிறிஸ்து நமக்காக செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து, கிறிஸ்துவர்களுக்கு உகந்த வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. உமது அன்பின் வெளிப்பாடாக திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! கிறிஸ்து விட்டுச் சென்ற அன்பின் பணியை, இன்றும் தியாக உள்ளத்தோடு பணியாற்றும் திருஅவையின் உறுப்பினர்களுக்களாகிய எங்கள் அனைவருக்காகவும் செபிக்கின்றோம். கிறிஸ்துவின் தியாகப் பணியில் எங்களை மேலும் ஈடுபடுத்திக் கொள்ள தேவையான இறைவலிமையைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. வார்த்தைகளால் உலகை உருவாக்கிய எம் இறைவா! உம் அன்பையும், வல்லமையையும் வெளிப்படுத்துவதற்காக உருவாக்கிய இயற்கையை நாங்கள் எங்களுக்கு அளித்த பரிசாக எண்ணி, இயற்கையை நல்ல முறையில் காக்கவும், மனிதர்களாகிய நாங்களும் இயற்கையின் அங்கம் என்று உணர தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. திருக்குடும்பத்தின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள தந்தைகளும், தாய்களும் மற்றும் பிள்ளைகளும் திருக்குடும்பத்தை பிரதிபலிக்க வேண்டுமென்றும், திருக்குடும்பத்தில் உள்ள தியாக உணர்வும், பரசபர அன்பும் எங்கள் குடும்பங்களில் மேலோங்க தேவையான இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


4. நலம் அளிக்கும் நாயகனே எம் இறைவா! எம்-பாக்ஸ்(ஆ-pழஒ) என்ற புதியவகை கிருமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நலமளிக்க வேண்டுமென்றும், இந்த புதியவகையை கிருமியை கட்டுபடுத்த வேண்டிய போதிய அறிவை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. விண்ணக படிப்பினைகளை மண்ணகம் வந்து போதித்த எம் இறைவா! இறைஞானத்தின் வெளிப்பாடாக நீர் எமக்களித்த திருவிவிலியத்தின் மேன்மையை உணர்ந்து திருவிவிலியத்தில் உள்ள வார்த்தைகளை குறையின்றி கற்று, தியானித்து, எங்கள் வாழ்வில் பின்பற்ற வரமருள வேண்டுமென்று உம்மை

 மன்றாடுகின்றோம்.


To download pdf



Friday, August 16, 2024

பொதுக்காலம் 20ம் ஞாயிறு 18-08 -2024

 பொதுக்காலம் 20ம் ஞாயிறு 18-08 -2024

பொதுக்காலம் 20ம் ஞாயிறு 18-08 -2024

திருப்பலி முன்னுரை

விண்ணக இறைவன் அளிக்கும் விருந்தில் பங்கேற்க வந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் 20ம் ஞாயிறு திருப்பலியில் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ள நம் அனைவரையும் நம் தாயாம் திருஅவை இறைவனோடு இணைந்திருப்பதற்கான எளிய வழியைக் கற்பிக்கின்றது. நாம் எப்பொழது நமக்கும், நம்முடைய சுயநல எண்ணங்களுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கின்றோமோ, அப்பொழுது நாம் இறைவனுடன் நமக்கு இருக்கும் உறவை இழக்கின்றோம். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இயேசு கிறிஸ்து, தம்மையே நமக்காக தந்தார். தன்னுடைய விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் இறைவனின் திருவுளம் நிறைவேற்றினார். இயேசு கிறஸ்துவை பின்பற்றும் நாமும் அவ்வாறு வாழ அழைக்கப்படுகின்றோம். சுயநலமற்ற பிறநல வாழ்வே, இயேசு நமக்கு காட்டும் வழியாகும். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இயேசு கிறிஸ்து நாம் எவ்வாறு வாழ வேண்டுமென்று வாழ்ந்து காட்டி, நமக்கு அன்பின் பாதையைக் காட்டியுள்ளார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இறைவனின் பாதையான பிறரன்பு பாதையில், நாம் பயணிக்கும் பொழுது நாம் இறைவனோடு இணைந்திருப்போம். இறைவனோடு இணைந்திருப்பதற்கான ஞானத்தை பெற, இந்த விண்ணக கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

கிறிஸ்துவை பின்பற்றும் நாம் அனைவரும் ஞானத்துடன் நடந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம். உலகின் அழியக்கூடிய இன்பங்களில் ஈடுபடுவதல்ல, இயேசு தரும் விண்ணகப் பாதையில் பயணிப்தே உண்மையான ஞானம். இந்த ஞானத்தை பெற அழைப்பு விடுக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுத்து ஞானத்தை நம்முடையதாக்குவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஞானமில்லாமல் வாழும் தறுமாறான வாழ்வை விட்டு, இறைவன் தரும் ஆவிக்குரிய வாழ்வை வாழ நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இறைவனை முன்னிருத்த வேண்டும். ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுவதற்காக அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. விண்ணக வாழ்வை வழங்க வந்த எம் இறைவா! நிலைவாழ்வை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான வழியைக் கற்பிப்பதற்காய் நீர் ஏற்படுத்திய உம் திருஅவையின் உறுப்பபினர்களுக்காக மன்றாடுகின்றோம். நாங்கள் அனைவரும் விண்ணக உணவாகிய இயேசுவை அழமாக அறிந்துகொண்டு, இறைவனை அடைவதற்கு வேண்டிய ஆசீரை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. உண்மையை உலகுக்கு அளிக்க வந்த எம் அன்பு இறைவா! கடமை, கண்ணியம் தவறாது உழைக்கும் அனைத்து தலைவர்களுக்காவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். எந்த சூழலிலும் கடமை தவறாது உழைக்கும் உண்மையானவர்களுக்கு, உண்மையின் வழியில் தொடர்து பயணிப்பதற்கான ஆற்றலையும், உண்மையில் வழியில் செல்லாதோர்க்கு தகுந்த ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. எஙகள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! கடும் நோய்களாலும், தீராத மன உளைச்சலாலும் அல்லல்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். விண்ணகத்திலிருந்த மண்ணகத்திற்கு இறங்கி வந்த மண்ணக உணவாகிய நீரே, அவர்களுக்கு ஆறதலாக இருந்து நலமளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. விண்ணகத்தை இருப்பிடமாக கொண்ட எம் இறைவா! மாறிவரும் புதிய காலச் சூழலுக்கு ஏற்ப எம் பிள்ளைகளை விண்ணகத்தின் பாதையான அன்பு வழியில் வழிநடத்திட வரம் வேண்டுகின்றோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரி வாழ்வு வாழ்ந்து காட்டவும், அதன் மூலம் பிள்ளைகள் நற்குணங்களுடன் வளரவும் தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. விண்ணக உணவாக மண்ணகம் வந்த எம் இறைவா! அன்றாட உணவில்லாமல் வீடுகளிலும், வீதிகளிலும் வசிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு ஆன்மா உணவையும், அன்றாட உணவையும் அளிக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To download pdf 


#mass introduction #

#18-08-2024#

#Thirupali Munurai#



Friday, August 9, 2024

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு 11 - 08 - 2024

 பொதுக்காலம் 19-ம் ஞாயிறு


பொதுக்காலம் 19-ம் ஞாயிறு


திருப்பலி முன்னுரை

விண்ணக உணவின் உன்னதத்தை உணர இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! மனிதர்கள் ஆகிய நாம் நம்முடைய வாழ்வில் உயர்த்த நிலையை அடைய நாளும் அயராது உழைக்கின்றோம். ஆனால், நாம் தேடி அலையும் அந்த உயர்ந்த நிலை உண்மையானதா, என்று சிந்திக்க பொதுக்காலத்தின் 19-ம் ஞாயிறு திருப்பலி வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுகின்றன. சொந்தம் மறந்து, தூக்கம் இழந்து, நாம் சேர்க்கும் செல்வம் இம்மண்கத்தை சார்ந்தது, அழியக் கூடியது. தந்தையிடமிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய இயேசு கிறிஸ்துவே, நாம் தேடி சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம். நாம் இம்மண்ணுலகை சார்ந்தவற்றில் நாட்டம் கொள்ளும் பொழுது, நம்மையே அறியாமல் பொறாமை, கோவம், தலைக்கணம் மற்றும் பல வேண்டா குணங்கள் நமக்கே தெரியாமல் நம்மை ஆட்சி செய்கின்றது. விண்ணக உணவாகிய இயேசு காட்டும் அன்புப் பாதையில் நாம் பயணிக்கும் பொழுது இறையன்பிலும் , பிறரன்பிலும் செழித்து நிலைவாழ்வை நமதாக்கி கொள்கின்றோம். விண்ணகத் தந்தை அளித்த, விண்ணக உணவாம் இயேசுவை பெறுவதற்காக, நிலைவாழ்வளிக்க வல்ல இந்த மகிழ்வின் கொண்டாட்டத்தில் பங்குகொள்வோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

நம் வாழ்வின் தொடகத்தையும், முடிவையும் அறிந்தவர் இறைவன் ஒருவரே, தன் வாழ்வின் பணிகளை முடித்து விட்டாதாக கருதி இறைவினிடத்தில் தன் உயிரை ஒப்படைக்கும் இறைவாக்கினர் எலியாவை தன்னுடைய பணிக்காக தயார் செய்யும் விண்ணகத் தந்தையின் அன்பை பிரதிபலிக்கும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள். பிள்ளைகள் வழிதவறதும் பொழுது, பெற்றோர் மனம் வருந்துவது போல, நம் இறைவன், நம்முடைய தீய குணங்களின் பொருட்டு வருந்துகின்றார் என்ற இறைவனின் துயரையும்,. இயேசு தம்மையே நமக்களித்த போல நாமும் நம்மை பிறக்காக அளித்திட வேண்டும் என்ற அழைப்பையும் அளிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நிலைவாழ்வை எமக்களிக்க வந்த எம் அன்பு இறைவா! விண்ணகத்தை நாங்கள் உடைமையாக்கி கொள்ள நீர் கற்ப்பித்த வழிகளை அன்றாடும் கடைப்பிடிக்கும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இயேசு கற்றுத் தந்த வாழ்வின் படிப்பிகளை நாங்கள் அனைவரும் சரியாக பின்பற்றிட தேவையான இறைஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. உண்மைக்கு உயிர் கொடுக்கும் எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தங்களின் அதிகாரத்தை, எந்த ஒரு தனி மனிதரின் வாழ்வையும் குலைப்பதற்காகவும் பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வை வளப்படுத்தும் மனித பண்புகளை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. படைப்புகளை ஆளுகை புரியும் எம் இறைவா! இயற்கை பேரிடரினால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைவருக்காகவும். மன்றாடுகின்றோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, அவர்கள் மீண்டும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்ப வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. அமைதியை அகிலத்திற்கு அளித்த எம் இறைவா! கடும் போராட்டத்தாலும், வன்முறையாலும் பாதிக்கப்பட்ட வங்கதேச மக்களுக்காக மன்றாடுகின்றோம். போரட்டங்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு நீரே ஆறுதலாக இருந்து, அவர்களின் நாட்டிலும், வீட்டிலும் அமைதியை மலரச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்

5. எங்கள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! இந்த திருவழிப்பாட்டில் பங்கு கொள்ளும் அனைவரின் தேவைகளையும் கண்ணோக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்தருள வேண்டுமென்றும், மேலும் விண்ணக உணவாகிய உம்மை நாங்கள் இறுகப்பற்றிக் கொள்ள வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.


To download pdf 


Friday, August 2, 2024

பொதுக்காலம் 18ம் ஞாயிறு 04-08-2024

பொதுக்காலம் 18ம் ஞாயிறு 04-08-2024

பொதுக்காலம் 18ம் ஞாயிறு 04-08-2024


திருப்பலி முன்னுரை

மீண்டும் ஒருமுறை இறை அனுபவம் பெற இவ்விறைபீடம் சூழ்ந்துள்ள, இயேசுவின் அன்பு சகோதர, சகோதரிகளே! நாம் அனைவரும் பொதுக்காலத்தின் 18ம் ஞாயிறாகிய இன்று இறைவன் தரும் நிலைவாழ்வை நம்முடையதாக்கிக் கொள்ள சிறப்பான முறையில் அழைக்கப்படுகின்றோம். தொடக்கம் முதல் இந்நாள் வரை, இறைவன் தன் படைப்புகளின் வழியாக நம்மை நிரப்பி, நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றார். இறைவன் தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்துவதற்காக படைப்புகளை படைக்கவில்லை. தன்னுடைய அன்பின் ஆழத்தை மனிதர்களிடத்தில் வெளிப்படுத்துவதற்காக இறைவன் படைப்புகளின் மீது ஆளுமை செய்கின்றார். தந்தை கடவுள் மன்னாவை பொழியச் செய்தும், இயேசு கிறிஸ்து அப்பத்தை பலுக பெருகச் செய்தும்  தங்கள் அன்பை நம்மிடத்தில் வெளிப்படுத்துகின்றனர். இறைவன் வழியாய் கிடைக்கும் புதுமைகள் மட்டும் போதும், இறைவன் வேண்டாம் என்று எண்ணும் பொழுது இறைவன் வழியாய் நமக்கு கிடைக்கும் நிலைவாழ்வை நாம் இழந்து விடுகின்றோம். இறைவன் வழியாய் கிடைக்கும் நிலைவாழ்வை நமதாக்க இந்த உயிர்ப்பின் கொண்டாடத்தில் பக்தியுடன் பங்குகொள்வோம். மேலும், கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவின் வயநாடு மக்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைத்திடவும், அவர்கள் மீண்டும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவும் வேண்டி    இத்திருப்பலியில் சிறப்பான முறையில் செபிப்போம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

மோசேயின் வழியாக இறைவனால் எகிப்தின் கொடும் பிடியிலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரேயல் மக்கள், இறைவன் அளித்த உணவினை வயிறார உண்டபின்னும், தங்களின் பேராசையால் இறைவனுக்கு எதிராக முணுமுணுத்தனர். இருப்பினும் இறைவன் அவர்களுக்கு மேலும் மன்னாவினையும், காடைகளையும் அளித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்திய நிகழ்வை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்துவின்பால் ஈர்கப்பட்ட நாம் அனைவரும் பிறரைப் போல் நெறிதவறியவர்களாக இல்லாமல், கிறிஸ்து காட்டும் வழியில் பயனப்பட வேண்டுமென்றும், நம்முடைய பழைமையை மறந்து, புதுப்பிக்கப்பட்ட மனித பண்புகளுடன் வாழ நம்மை அழைக்கும் பவுல் அடியாரின் வார்த்தைகளை தாங்கிய இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. அன்பை அடித்தளமாக கொண்டு திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகி நாங்கள் அனைவரும், வெறும் அரும்அடையாளங்களை மட்டும் நாடமல், இறைவார்த்தைகளை எங்கள் வாழ்வாக்கி கிறிஸ்துவில் வாழ்வு பெற தேவையான அருள் வளங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

2. வாழ்வும் வழியுமான எம் இறைவா! கடும் மழையாலும், கொடும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் துயரைக் கண்ணோக்கியளும். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்கள் மீண்டும் எழுந்து புதுவாழ்வு பெற அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. நிலைவாழ்வை உடமையாக்க உரிமையளித்த எம் இறைவா! உம் திருமகன் வழியாய் நீர் எமக்களித்த வாழ்வின் வாரத்தைகளை கேட்டு, அவ்வார்த்தையைப் பின்பற்றி பேரசையின் வழியை மறந்து, புதுவழியில் பயணப்பட்டு நிலைவாழ்வை எமதாக்கிக் கொள்ள தேவையான இறைவலிமையை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. அல்லல்படுவோரின் ஆதரவே எம் இறைவா! பருவநிலை மாற்றத்தாலும், மோசமான உடல்நிலையாலும் பாதிக்கப்பட்டு அல்லல்படும் மக்களை நிறைவாக ஆசிர்வதியும். நீரே அவர்களுக்கு அதரவாக இருந்து, அவர்களின் துயர்துடைத்து அவர்களுக்கு புதுவாழ்வளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. இறை திருவுளத்தை நிறைவேற்றுவதையே உணவாகக் கொண்ட எம் இறைவா! திருமுழுக்கினால் இறைவனின் அழைப்பு பெற்ற நாங்கள் அனைவரும் இறைவனின் திருவுளத்தை அறிந்து, இறைவன் நமக்கென அளித்துள்ள பணியை சிறந்த முறையில் ஆற்றிட தேவையான மனதிடத்தை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF


தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...