பொதுக்காலம் 27 – ஆம் ஞாயிறு 06-10-2024
திருப்பலி முன்னுரை
நம்முடைய பாவங்களின் கரையை, தம்முடைய இரத்தத்தால் துடைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆராதிக்க இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! இன்றைய நாளில் நம் தாய் திருஅவையானது பொதுக்காலத்தின் 27 ஆம் ஞாயிறை சிறப்பாக கொண்டாடுகின்றது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை கடின உள்ளத்தினராய் அல்லாமல், குழந்தைகளின் மனநிலையைக் கொண்டவர்களாக வாழ அழைக்கின்றன. விண்ணகத்தில் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருந்த இயேசு, நம்முடைய பாவங்களை நீக்க தாழ்ச்சியின் உருவாய் மண்ணகத்தில் மனிதராய் பிறந்தார். வெறுமையை தன் உடைமையாக்கி கொண்டார். பாவிகளாகிய நம்மை தம்முடைய சகோதர, சகோதரிகள் ஆக்கிக் கொண்டார். இயேசு தாழ்ச்சியை தன் கையில் எடுத்ததன் விளைவாக நாம் அனைவரும் பாவத்திலிருந்து மீட்கப்பட்டோம். இயேசுவைப் போல நாம் நம்முடைய கடின மனதை கரைத்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தால் மீட்பு என்னும் நிலை வாழ்வை அடைய முயற்சி செய்வோம். இயேசு கிறிஸ்து தன்னுடைய அன்பை தியாகத்தின் வழியாக வெளிப்படுத்தியது போல, நம்முடைய உறவுகளிடத்தில் நம்முடைய அன்பை, நம்முடைய தியாகத்தின் வழியாக வெளிப்படுத்துவோம். இயேசுவைப்போல தாழ்ச்சியை நமதாக்கிக் கொள்ளும் வரம் வேண்டிய இத்திருப்பலியில் ஜெபிப்போம். மேலும், மனம் முறிவு அதிகரிக்கும் இன்றைய கால சூழலில், ஒருவர் மற்றவருக்குமான புரிதலை அதிகப்படுத்தும் ஆற்றலையும், புரிந்து கொள்ளும் திறனையும் வேண்டியும் சிறப்பாக ஜெபிப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
இறைவன் தன்னுடைய எல்லையில்லா அன்பை தம்முடைய படைப்பின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார்: மனிதர்களாகிய நம்மை படைக்கும் முன்பே, நாம் வாழ்வதற்கு ஏற்றவாறு இவ்வுலகை உருவாக்குகின்றார். படைப்புகளை, படைப்புகளின் சிகரமாகிய மனிதனிடத்தில் ஒப்படைக்கும் நிகழ்வை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
விண்ணக தந்தையின் மகனாம் இயேசு கிறிஸ்து, நம் பாவங்களுக்காக துன்புறுவதற்காய் மனிதராக மண்ணகத்தில் பிறந்தார். நம் பாவங்களுக்காக துன்புற்றதன் வாயிலாக நம்மை தம்முடைய சகோதர, சகோதரிகளாக ஏற்றுக் கொண்டார். எனவே, இறைவனால் தூய்மையாக்கப்பட வேண்டும் என்ற ஆவலுடன் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பை அடித்தளமாக கொண்டு திருஅவையை ஏற்படுத்திய அன்பு இறைவா! வறியவர்களை வாட்டி வதைக்க பயன்படுத்தப்படும் அனைத்து சட்ட திட்டங்களையும், உம்முடைய அன்பின் நெறிமுறைகளால் வென்றெடுக்கும் உறுதியை உம்முடைய திருஅவையின் உறுப்பினர்களாகிய எங்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. இறைத் திருவுளத்தை இன்முகத்துடன் நிறைவேற்றிய எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்களும், அதிகாரிகளும், தேவையற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்பாமல், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான தொலைநோக்குப் பார்வை கொண்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான நல்ல அறிவை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
3. துன்புறுபவரின் துயர் துடைக்கும் எம் அன்பு இறைவா | ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் மீண்டும் தீவிர நிலையை அடைந்துள்ள போர் சூழ்நிலையானது மாறி, அங்குள்ள மக்கள் அமைதியில் வாழவும். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீரே ஆதரவாகவும், அவர்கள் உள்ளங்களுக்கு உற்ற மருந்தாகவும் இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. திருக்குடும்பத்தின் நாயகனே எம் இறைவா! பரஸ்பர புரிதலும், உறுதியான அன்பையும் கொண்ட திரு குடும்பத்தை முன் உதாரணமாக கொண்டு, நாங்கள் அனைவரும் எங்களுடைய குடும்பங்களில் வாழவும், ஒருவர் மற்றவருக்கு இடையில் ஏற்படும் மனக்கசப்புகளை ஆரோக்கியமான உரையாடல்கள் மூலம் தீர்வு காண்பதற்கான மன உறுதியையும் தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.
5. திருப்பலியிலும், திருவழிபாட்டிலும் பங்கு கொள்ள முடியாமல் நோய்வாய்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் எம் பங்கின் பெரியவர்களுக்காக மன்றாடுகின்றோம். ஆன்ம உணவாக உம்மை உட்கொள்ளும் அவர்கள் உன்னுடைய எல்லையில்லா வரங்களால் ஆசிர்வதிக்கப்பட்டு விரைவில் குணம் பெற அவர்களுக்கு தேவையான உடல் நலனை தந்தருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
To get the PDF kindly scroll to the top and Follow "இறை வெளிச்சம்" pdf file will be sent to your mail ID.
By