நள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு
📅 டிசம்பர் 31, 2025
முன்னுரை
இயேசு பாலனின் ஆசிரைப் பெற்ற சகோதர, சகோதரிகளே! கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த அளவிட முடியாத நன்மைகளை நினைவு கூர்ந்து இறைவனுக்கு உளமாற நன்றி சொல்ல வேண்டிய தருணமிது.
மேலும், கடந்த ஆண்டு முழுவதும் இறைவனுக்கும், நம் சகோதர சகோதரிகளுக்கும் எதிராக செய்த பாவங்களை எண்ணி இறைவனிடம் மன்னிப்பு வேண்டவும், வருங்காலம் நம் வாழ்வின் வளம் கொழிக்கும் வருடமாக மாறிட அருள் வேண்டி இந்த நன்றியின் வழிபாட்டில் நாம் அனைவரும் பக்தியோடு பங்கெடுப்போம்.
📖 நற்கருணை காட்சிபடுத்தியதற்கு பின்
நிலையான புகழுக்குரிய – 3 முறை
பாடல் 1 – ஏதேனும் பொருத்தமான ஆராதனைப் பாடல்
பாவ மன்னிப்பு வழிபாடு
நன்றியின் வழிபாட்டில் முழு தகுதியுடன் பங்கேற்க, பாவ மன்னிப்பு வழிபாட்டுடன் நம்முடைய செபத்தை தொடங்குவோம்.
📜 விவிலிய வாசகம் (1 யோவான் 1:5–10)
கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்;;து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.
— ஆண்டவர் உங்களோடு இருப்பராக
நம்முடைய பாவங்களை நினைவு கூர்ந்து, மனம் வருந்தி இந்தப் பாடலை ஒன்றாகப் பாடி மன்னிப்பு வேண்டுவோம்.
🎵 நன்றி பாடல் : மன்னிப்பாயா மன்னிப்பாயா / வேறு மன்னிப்பு பாடல்
நன்றி வழிபாடு
“ஆண்டவர் வழங்கிய நீதிக்காகவும், நன்மைகளுக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவோம்” (திபா 7:17). இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள், தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள் (திபா 30:4) என்று திருவிவிலியத்தின் வாசகங்கள் இறைவனை நன்றியின் மிகுதியால் புகழந்து பாட அழைக்கின்றது.
அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே, இறைவன் கடந்த ஆண்டு முழுவதும் நேரடியாகவும், பிறர் மூலமாகவும் இறைவன் நமக்கு செய்த அனைத்து நன்மைகளும் நம் நினைவுக்கு கொண்டு வரவும். நாம் மேற்கொண்ட புதிய முயற்சிகளிலும், கடந்த காலத்தின் தொடர்ச்சிகளை சரியான முறையில் மேற்கொள்ள பலமளித்து, வளமளித்த இறைவனை போற்றிப் பாடுவோம்.
நன்றியின் கனிகளை சுவைத்த நாம் நம்முடைய அன்பின் காணிக்கையை நம்முடைய நன்றி மன்றாட்டுகளால் இறைவனிடத்தில் காணிக்கையாக்குவோம்.
குழு செபம்
நன்றியின் நிறைவில் புனித தாமஸ் அக்குவினாஸ் இறைவனை புகழ்ந்த இவ்வார்த்தைகளை ஒன்றாக செர்ந்து செபிப்போம்.
அன்பான தந்தையே, எல்லாம் செய்ய வல்ல, என்றும் வாழும் எம் இறைவா! உமது மகனாகிய நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும், இரத்தமும் வழியாக பாவியான என்னை ஆசிர்வதிக்க நீர் விரும்பியதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.
இந்த அருளாசீர், நான் செய்த எந்த நல்ல செயல்களாலோ எனக்குள்ள தகுதியாலோ கிடைத்தது அல்ல. உம்முடைய அளவற்ற அன்பும் கருணையும் வழியாக நான் பெற்ற பெரும் ஆருளுக்கு இறைவா உமக்கு நன்றி – ஆமேன்
(விருப்பமான நன்றிப்பாடல்)
நன்றி மன்றாட்டுகள்
பதில் : நன்மையின் இறைவனுக்கு, நன்றி பாடி மகிழ்ந்திடுவோம்.
எல்லையில்லா வரங்களைப் பொழியும் எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் உம்முடைய அன்பின் கருணையால் காத்து வந்த உம்முடைய கருணைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எங்களுடைய வாழ்வில் நாங்கள் பெற்ற அனைத்து வளங்களுக்காகவும், வலிகளுக்காகவும் நன்றி செலுத்துகின்றோம். எங்களுடைய கடந்த ஆண்டின் ஒவ்வொரு நொடியிலும் எம்மோடு இருந்து எம் வாழ்வை வளப்படுத்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
அன்பின் இறைவா! எனக்கு நல்ல பெற்றோரையும், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் கொடுத்து குடும்பத்தில் சமாதானம், ஒற்றுமை, மகிழ்ச்சி என கொடுத்து வருகின்றீர் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்;. அன்பின் இறைவா! எனக்கு நல்ல கணவரை, பண்புள்ள மனைவியை, பாசமுள்ள பிள்ளைகளை கொடுத்து நல்வருமானமும் கொடுத்து காத்துவரும் உம் அருளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
கடந்த ஆண்டு முழுவதும் நல்ல மழையினை கொடுத்து, விளைச்சலைப் பெருக்கி கொடுத்தமைக்காகவும், பல்வேறு விபத்துகள், இயற்கை சீற்றங்கள். பேரிடர்கள் ஆபத்துகளினின்று காத்த உமது நலனுக்காய் நன்றி செலுத்துகிறோம்.
ஆன்மீக வழி நடத்த நல்ல அருட்தந்தையையும், அருட்சகோதரிகளையும் கொடுத்ததோடு அல்லாமல் எல்லாவற்றிற்கும் மேலாக உன் அன்பின் மிகுதியால் அன்றாட திருப்பலியில் உடலாகவும், இரத்தமாகவும் எழுந்து, திருவிருந்தளிக்கும் உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம்.
எதிர்நோக்கின் பயணிகளாக கடந்த ஆண்டு முழுவதும் நம்முடைய ஆன்மீக முயற்சிகளை ஆசிர்வதித்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். கடந்த ஆண்டில் நம்முடைய வாழ்வில் நடைபெற்ற ஆன்மீக வளர்ச்சிக்காக நன்றி செலுத்துகின்றோம்.
(இறைவனிடத்தில் நம் நம்பிக்கை வெளிப்படுத்திய நன்றியுணர்வோடு, நற்கருணை ஆசிரை பெற தயாராகுவோம்)
No comments:
Post a Comment