பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசு கிறிஸ்துவை ஆயனாக கொண்டு வாழும் இறைமக்கள் சமூகமே உங்கள்
அனைவரையும் பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்திற்கு அன்புடன்
அழைக்கின்றோம். .
இன்றைய உலகின் தலைவர்கள் தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக
ஒரு சாராருக்கும்,
மற்றொரு சாராருக்கும் இடையே வெறுப்பை உண்டாக்கி அந்த வெறுப்பில்
குளிர்காய்கின்றனர். ஆனால், பரந்த இவ்வுலகின் ஆயனாகிய இயேசு கிறிஸ்து அன்பு வழியை போதித்து தம்
மந்தையின் ஆடுகளை அமைதியின் வழியில் வழி நடத்துகின்றார். ஆகையால், நாம் கிறிஸ்து அளிக்கும் அமைதி வழியை விட்டும்,
அன்பு வழியை விட்டும் விலகும் பொழுது நாம் கிறிஸ்துவை விட்டு விலகுகிறோம்
என்று பொருளாகின்றது. பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்ட நம்முடைய
மீட்பர் நம்மிடத்தில் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். அதுதான் அனைவரையும் அன்பு செய்யுங்கள். கிறிஸ்துவின் பெயரால் திருமுருக்கு பெற்று கிறிஸ்துவின் மந்தையின்
உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்து குரலுக்கு செவிசாய்த்து அன்பு வழி வழியில் பயணிப்போம் அப்பொழுது கிறிஸ்துவின்
மந்தையின் சிறந்த உறுப்பினராக இருப்போம் என்ற தெளிவோடு இந்த உறவின் கொண்டாட்டத்தில் பக்தியுடன்
இணைவோம்.
வாசக முன்னுரை
முதல் வாசக முன்னுரை
தங்களின் சுயநல எண்ணங்களுக்காக மக்களை பிரித்தாளுபவர்கள் மக்களுடைய வாழ்வின் நலனில் அக்கறை கொள்வதில்லை. ஆனால், உண்மை ஆயன் மக்களை ஒன்றிணைத்து நன்மையின் வழி கூட்டிச் செல்கின்றார் என்ற செய்தியை கூறும் முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
வெவ்வேறு காரணங்களால் வேறுப்பட்ட மக்கள் சமுதாயத்தை கிறிஸ்து தம் இரத்தத்தின் வழியாக ஒன்றாக கட்டுகின்றார். எண்ணங்கள் வெறுப்பட்ட நாம், கிறிஸ்துவால் ஒன்றினைக்கப் படுகின்றோம் என்ற செய்தியை கூறும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
மன்றாட்டுகள்
1.
திருஅவையை கட்டியெழுப்பிய எம் இறைவா! போர்களாலும், உள்நாட்டு பிரச்சனைகளாலும் சிதறுண்ட இவ்வுலகை, அன்பின் போதனையால் அமைதிப்படுத்தும் ஆற்றலை உம் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2.
நல் ஆயனே எம் இறைவா ! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களின் சுயநலனுக்காக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தாமல் , மக்களை நீதியுடன் நடத்திட தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3.
எங்களுடைய இல்லங்களிலும், உள்ளங்களிலும் வாழும் கிறிஸ்து , எங்களிடத்தில் உள்ள வேற்றுமைகளை களைந்து நாம் அனைவரும் இயேசுவின் பிள்ளைகள் என்ற எண்ணத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
4.
எம் பங்கின் குழந்தைகள் அனைவருக்கும் , கிறிஸ்துவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்து, அவர்களை இறைவன் காட்டும் பாதையில் வழிநடத்தும் ஞானத்தை அவர்களுடைய பெற்றோர்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
5.
இயற்கையை ஆளுகை செய்யும் எம் இறைவா! தண்ணீர் பஞ்சத்தால் அல்லலுறும் அனைவருக்கும் தண்ணீரின் அருமையை உணர்த்தி, இனிவரும் காலங்களில் தண்ணீரை சேமிக்கவும், இயற்கையை பாதுகாக்கவும் தேவையான அறிவை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
