இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Saturday, August 3, 2024

பொதுக்காலம் 18ம் ஞாயிறு 04-08-2024

பொதுக்காலம் 18ம் ஞாயிறு 04-08-2024

பொதுக்காலம் 18ம் ஞாயிறு 04-08-2024


திருப்பலி முன்னுரை

மீண்டும் ஒருமுறை இறை அனுபவம் பெற இவ்விறைபீடம் சூழ்ந்துள்ள, இயேசுவின் அன்பு சகோதர, சகோதரிகளே! நாம் அனைவரும் பொதுக்காலத்தின் 18ம் ஞாயிறாகிய இன்று இறைவன் தரும் நிலைவாழ்வை நம்முடையதாக்கிக் கொள்ள சிறப்பான முறையில் அழைக்கப்படுகின்றோம். தொடக்கம் முதல் இந்நாள் வரை, இறைவன் தன் படைப்புகளின் வழியாக நம்மை நிரப்பி, நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றார். இறைவன் தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்துவதற்காக படைப்புகளை படைக்கவில்லை. தன்னுடைய அன்பின் ஆழத்தை மனிதர்களிடத்தில் வெளிப்படுத்துவதற்காக இறைவன் படைப்புகளின் மீது ஆளுமை செய்கின்றார். தந்தை கடவுள் மன்னாவை பொழியச் செய்தும், இயேசு கிறிஸ்து அப்பத்தை பலுக பெருகச் செய்தும்  தங்கள் அன்பை நம்மிடத்தில் வெளிப்படுத்துகின்றனர். இறைவன் வழியாய் கிடைக்கும் புதுமைகள் மட்டும் போதும், இறைவன் வேண்டாம் என்று எண்ணும் பொழுது இறைவன் வழியாய் நமக்கு கிடைக்கும் நிலைவாழ்வை நாம் இழந்து விடுகின்றோம். இறைவன் வழியாய் கிடைக்கும் நிலைவாழ்வை நமதாக்க இந்த உயிர்ப்பின் கொண்டாடத்தில் பக்தியுடன் பங்குகொள்வோம். மேலும், கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவின் வயநாடு மக்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைத்திடவும், அவர்கள் மீண்டும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவும் வேண்டி    இத்திருப்பலியில் சிறப்பான முறையில் செபிப்போம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

மோசேயின் வழியாக இறைவனால் எகிப்தின் கொடும் பிடியிலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரேயல் மக்கள், இறைவன் அளித்த உணவினை வயிறார உண்டபின்னும், தங்களின் பேராசையால் இறைவனுக்கு எதிராக முணுமுணுத்தனர். இருப்பினும் இறைவன் அவர்களுக்கு மேலும் மன்னாவினையும், காடைகளையும் அளித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்திய நிகழ்வை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்துவின்பால் ஈர்கப்பட்ட நாம் அனைவரும் பிறரைப் போல் நெறிதவறியவர்களாக இல்லாமல், கிறிஸ்து காட்டும் வழியில் பயனப்பட வேண்டுமென்றும், நம்முடைய பழைமையை மறந்து, புதுப்பிக்கப்பட்ட மனித பண்புகளுடன் வாழ நம்மை அழைக்கும் பவுல் அடியாரின் வார்த்தைகளை தாங்கிய இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. அன்பை அடித்தளமாக கொண்டு திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகி நாங்கள் அனைவரும், வெறும் அரும்அடையாளங்களை மட்டும் நாடமல், இறைவார்த்தைகளை எங்கள் வாழ்வாக்கி கிறிஸ்துவில் வாழ்வு பெற தேவையான அருள் வளங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

2. வாழ்வும் வழியுமான எம் இறைவா! கடும் மழையாலும், கொடும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் துயரைக் கண்ணோக்கியளும். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்கள் மீண்டும் எழுந்து புதுவாழ்வு பெற அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. நிலைவாழ்வை உடமையாக்க உரிமையளித்த எம் இறைவா! உம் திருமகன் வழியாய் நீர் எமக்களித்த வாழ்வின் வாரத்தைகளை கேட்டு, அவ்வார்த்தையைப் பின்பற்றி பேரசையின் வழியை மறந்து, புதுவழியில் பயணப்பட்டு நிலைவாழ்வை எமதாக்கிக் கொள்ள தேவையான இறைவலிமையை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. அல்லல்படுவோரின் ஆதரவே எம் இறைவா! பருவநிலை மாற்றத்தாலும், மோசமான உடல்நிலையாலும் பாதிக்கப்பட்டு அல்லல்படும் மக்களை நிறைவாக ஆசிர்வதியும். நீரே அவர்களுக்கு அதரவாக இருந்து, அவர்களின் துயர்துடைத்து அவர்களுக்கு புதுவாழ்வளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. இறை திருவுளத்தை நிறைவேற்றுவதையே உணவாகக் கொண்ட எம் இறைவா! திருமுழுக்கினால் இறைவனின் அழைப்பு பெற்ற நாங்கள் அனைவரும் இறைவனின் திருவுளத்தை அறிந்து, இறைவன் நமக்கென அளித்துள்ள பணியை சிறந்த முறையில் ஆற்றிட தேவையான மனதிடத்தை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF


Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...