பொதுக்காலம் 21-ம் ஞாயிறு 25 – 08 – 2024
திருப்பலி முன்னுரை
இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு இறைவழியில் பயணிக்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே ! தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது என்ற யோவான் நற்செய்தியாளரின் வார்த்தைகளின் சுருக்கத்தை தியானிக்க பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறாகிய இன்று நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். கடவுளோடு விண்ணகத்தில் வீற்றிருந்த இயேசு, மண்ணகத்தில் மனிதராக பிறந்து, மனிதராக வாழ்ந்து, இறைபடிப்பினைகளை வார்த்தையாலும், தன்னுடைய வாழ்வாலும் மக்களுக்கு போதித்தார். இயேசுவினுடைய அன்பின் போதைனைகள் மீது பலர் நம்பிக்கைக் கொண்டனர், சிலர் அவற்றின் மீது நம்பிக்கைக் கொள்ளவில்லை. நாமும் பல நேரங்களில் இயேசுவின் போதைனைகளில் இருந்து தவறி நடக்கின்றோம், இதற்கு காரணம், நாம் இயேசுவினுடைய இறைத்தன்மையை பற்றிய முழமையான அனுபவம் பெறாததே காரணமாகும். நாம் நம்முடைய ஊனியல்புகளுக்கு இடம் கொடுக்;காமல், தூய ஆவியால் முழமையாக ஆட்கொள்ளப்படும் பொழுது, இயேசு காட்டும் பாதையில் பயணிக்க முடியும். தூய அவியால் முழமையாக ஆட்கொள்ளப்படுவதற்காகவும், இயேசுவின் வார்த்தைகளை நம் வாழ்வாக்கவும் வேண்டியும் இந்த உறவின் விருந்தில் பங்கேற்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
வேற்று தெய்வங்கள் மீதும் ஆர்வம் கொண்டு பொய் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்ரேயல் மக்களை, இறைவன் தன்னுடைய பணியாளராகிய யோசவா மூலம் நெறிப்படுத்துகின்றார். இறைவனின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்த இஸ்ரேயல் மக்களும், இறைவன் தங்களுக்கு செய்த அரும் அடையாளங்களை எண்ணி, இறைவன் பதம் திரும்பும் நிகழ்வை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கிறிஸ்துவை மனமகனாவும், கிறிஸ்து ஏற்படுத்திய திருஅவையை மனமகளாகவும் உருவகப்படுத்திய பவுல் அடிகளார், திருஅவையின் உறுப்பினர்காளாகிய நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று போதிக்கின்றார். கிறிஸ்து நமக்காக செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து, கிறிஸ்துவர்களுக்கு உகந்த வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. உமது அன்பின் வெளிப்பாடாக திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! கிறிஸ்து விட்டுச் சென்ற அன்பின் பணியை, இன்றும் தியாக உள்ளத்தோடு பணியாற்றும் திருஅவையின் உறுப்பினர்களுக்களாகிய எங்கள் அனைவருக்காகவும் செபிக்கின்றோம். கிறிஸ்துவின் தியாகப் பணியில் எங்களை மேலும் ஈடுபடுத்திக் கொள்ள தேவையான இறைவலிமையைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. வார்த்தைகளால் உலகை உருவாக்கிய எம் இறைவா! உம் அன்பையும், வல்லமையையும் வெளிப்படுத்துவதற்காக உருவாக்கிய இயற்கையை நாங்கள் எங்களுக்கு அளித்த பரிசாக எண்ணி, இயற்கையை நல்ல முறையில் காக்கவும், மனிதர்களாகிய நாங்களும் இயற்கையின் அங்கம் என்று உணர தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. திருக்குடும்பத்தின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள தந்தைகளும், தாய்களும் மற்றும் பிள்ளைகளும் திருக்குடும்பத்தை பிரதிபலிக்க வேண்டுமென்றும், திருக்குடும்பத்தில் உள்ள தியாக உணர்வும், பரசபர அன்பும் எங்கள் குடும்பங்களில் மேலோங்க தேவையான இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. நலம் அளிக்கும் நாயகனே எம் இறைவா! எம்-பாக்ஸ்(ஆ-pழஒ) என்ற புதியவகை கிருமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நலமளிக்க வேண்டுமென்றும், இந்த புதியவகையை கிருமியை கட்டுபடுத்த வேண்டிய போதிய அறிவை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
5. விண்ணக படிப்பினைகளை மண்ணகம் வந்து போதித்த எம் இறைவா! இறைஞானத்தின் வெளிப்பாடாக நீர் எமக்களித்த திருவிவிலியத்தின் மேன்மையை உணர்ந்து திருவிவிலியத்தில் உள்ள வார்த்தைகளை குறையின்றி கற்று, தியானித்து, எங்கள் வாழ்வில் பின்பற்ற வரமருள வேண்டுமென்று உம்மை
மன்றாடுகின்றோம்.
.jpeg)