இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, December 13, 2024

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு – 15-12-2024

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு – 15-12-2024



திருப்பலி முன்னுரை

எளிய வடிவில் ஆழமான விசுவாசத்தைக் கொண்டிருந்த இடையர்களுக்கு தோன்றிய வான தூதர்கள் பெருமகிழ்வு தரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றோம் என்று கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தார்கள். வறண்டு போன இதயங்களை வளமிகு இதயமாக மாற்ற இறைமகன் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்து, இறைவனின் ஈடில்லா கொடையான மகிழ்ச்சியை நமக்கு தருகின்றார். இறைவனில் நம்பிக்கை கொண்டு, அமைதியின் பாதையில் பயணித்தால் இறைவன் தரும் மகிழ்ச்சியை நாம் பெற முடியும். திருவருகைக்காலத்தின் மூன்றாம் வாரமும், இறைவன் அருளும் மகிழ்ச்சியை மையமாக வைத்து நம் வாழ்வை சீர்படுத்த நம்மை அழைக்கின்றது. இன்றைய வாசகங்களும் இதைனையே எடுத்துரைக்கின்றன. இறைவன் தரும் மகிழ்ச்சியை நாம் எவ்வாறு பெற்று அக்களிக்க வேண்டும் என்று முதல் இரண்டு வாசகங்களும் கூறுகையில், நற்செய்தி வாசகம் நாம் அந்த மகிழ்வை பெறுவதற்கான வழியை காட்டுகின்றது. நாம் நம்மிடத்தில் உள்ளவற்றை பிறரோடு பகிர்ந்து வாழ்வதன் மூலம், நம்மை நிலைகுலையச் செய்யும் பயத்தை துறந்து மகிழ்வை பற்றி கொள்கின்றோம். மாட்டு தீவனத் தொட்டியில் பிறந்த இயேசு கிறிஸ்து தன்னையே இவ்வுலகத்திற்கு உணவாக பகிர்ந்தளித்ததன் மூலம் இறைவன் தரும் நிலையான பெரு மகிழ்வில் பங்கெடுத்தார். நாமும் நம்மிடம் உள்ள நல்ல குணங்களையும், தேவைக்கு அதிகமான செல்வத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது இறைவன் தரும் பெருமகிழ்வில் பங்கு கொள்ள முடியும். எனவே பகிர்வின் பண்பை நம் இயல்பாக மாற்ற இந்த மகிழ்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

கிறிஸ்துமஸ் ரீத் - மகிழ்ச்சி முன்னுரை

நம்பிக்கையும் அமைதியும் வலுப்பெற்ற இடத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும். திருவருகை காலத்தின் மூன்றாம் வாரத்தில் மகிழ்ச்சி என்று இறை வரத்தை பற்றி சிந்திக்கவும் அதை பெறுவதற்காகவும் நாம் அழைக்கப்படுகின்றோம். இறைவனின் எல்லையில்லா அன்பை நாம் பெரும்பொழுது இறைவனின் பெருமகிழ்வில் பங்கெடுக்கின்றோம். இறைவனின் எல்லையில்லா அன்பை பெறுவதற்கான ஒரே வழி, இறைவன் அளித்த இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளை பின்பற்றுவதே. நாம் நம் அயலாரை நேசித்து, அவரோடு பகிர்ந்து வாழும் பொழுது இறைவன் நம் மீது அன்பு கூறுகின்றார். இவ்வாறாக, அன்பு கூறும் இறைவன் நமக்கு மகிழ்ச்சியை தருகின்றார். இறைவன் தரும் பெரு பெரு மகிழ்வில் பங்கெடுக்க நம்மை நாம் தகுதியாக்கவும், அதன் மூலம் நம் வாழ்வில் ஒளி பெறுவதன் அடையாளமாக இம்மூன்றாம் திரியாகிய மகிழ்வின் திரியில் ஒளியேற்றி நம் வாழ்வை பொலிவடையச் செய்வோம் இறைவன் தரும் ஆசிகளை நிறைவாக பெறுவதற்காக முழு மனதுடன் ஜெபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் செப்பனியா எழுதிய நூலிளிருந்து கொடுக்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில் இறைவாக்கினர் அவர்கள், மக்களுக்கு தைரியத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கும் வார்த்தைகளை பகிர்கின்றார். அஞ்சாமை, நம்பிக்கை, மற்றும் மகிழ்ச்சியை வாழ்வில் அளிக்கவல்ல இவ்வார்த்தைகள், இறைவனின் அன்பையும் அருளையும் நமக்குள் உறுதியூட்டுவதற்காய் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரில் இணைந்த மகிழ்ச்சி, நன்றியுடன் கூடிய இறை வேண்டல், மற்றும் அஞ்சாமையை ஆகியவற்றை வளியுறுத்தும் இவ்விரண்டாம் வாசகம், கடவுளின் அமைதியானது நம் உள்ளத்தையும் மனத்தையும் காத்திடும் என்பதைக் கூறுகின்றன. இறைவனின் பிறப்பில் மகிழ்வதற்காய் நமக்கு அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. மகிழ்வை மணம் பரப்பச் செய்ய திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! திருஅவையினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் நற்செய்தியை பரப்பவும், அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ளவும் அவர்களுக்கு உம் அருளை அளித்து, ஒருமைப்பாட்டில் வாழ வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. நீதியுடன் உலகை ஆளும் எம் இறைவா! உலகத் தலைவர்கள் அனைவரும் நீதியுடன் மக்களின் நன்மைக்காக செயல்படவும். அவர்களுக்கு தெய்வீக அறிவும் சக்தியும் அளித்து, மகிழ்ச்சியுடன் வாழவும், பிறரின் மகிழ்ச்சிக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. மகிழ்வை அளிக்கவல்ல எம் இறைவா! எங்கள் இதயங்களில் மகிழ்ச்சி மலர்ந்து, அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்வை வாழந்திடவும், எங்கள் இதயத்தில் குடிகொள்ளும் மகிழ்வை, பிறருடன் பகிர்ந்து வாழும் பக்குவத்தை தந்தருள வேண்டுமென்றும், உம் அருளால் வாழ்வில் மகிழ்ச்சி பரவி, அமைதியில் வாழ வரமருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.
  4. மகிழ்வின் மகிமையை உணர்த்த குடும்பங்களை கட்டியெழுப்பும் எம் இறைவா! அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் அமைதியையும் அளித்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அன்பும் பரிவும் கொண்டு வாழவும், தங்கள் உறவுகளில் ஒருமைப்பாட்டுடன் இருக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. இயற்கையை ஆளுகை புரியும் எம் இறைவா! எங்களுக்கு வேண்டிய மழையை தந்தமைக்காக உமக்கு நன்றி கூறும் இவ்வேளையில், வரவிருக்கும் நாட்களிலும் போதிய மழயைப் பெற்று, இயற்கையுடன் இணைந்து வாழம் ஆற்றலைத் தந்தருள வேண்டுமென்றும், கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் புரிந்திட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...