இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, December 20, 2024

Christmas Mass Introduction 2025

கிறிஸ்து பிறப்பு திருப்பலி - 2025



திருப்பலி முன்னுரை

உன்னத்தின் இறைவன்

விண்ணகத்தின் அரியணை துறந்து

மண்ணகத்தின் மடியினில் தவழ

நம்மிடையே மலர்ந்துள்ளார்.

கிறிஸ்து பிறப்பின் பெருமகிழ்வில் கலந்திட இறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே !

உன்னதத்தின் மாட்சமிகு இறைவன், மண்ணகத்தில் இறை ஆட்சியை நிறுவ மனிதராய் நம்மிடையே பிறக்கும் நன்னாளே, கிறிஸ்துமஸ் பெருநாள். நம்மைப் படைத்த இறைவன் தம்முடைய அன்பை, அன்றாட வாழ்வின் கொடைகள் மூலம் நமக்கு வெளிப்படுத்துகின்றார். நம்மை தம் கண்ணின் மணிபோல காக்கும் அதே இறைவன், அன்பின் மிகுதியினால் தன்னையே இத்தரணிக்கு தானமாக அளித்தார். கடவுள் நிலையை இறுகப்பற்றிக் கொள்ளாமல் இறையியல்புடன் கூடிய, குறை நிறைந்த மனிதராக இம்மண்ணில் பிறக்கின்றார்;. இருப்பினும், இறையியல்பு மற்றும் இறை வேண்டலின் ஆற்றலுடன் குறைவுடைய மனித வாழ்வை நிறைவுள்ள வாழ்வாக எப்படி மாற்ற முடியும் என்று தன் வாழ்வால் அறிவித்தார். பிறரன்பு, தாழ்ச்சி மற்றும் இறை வேண்டல் மூலம் நம்முடைய வாழ்வின் போக்கை போற்ற மாற்ற முடியும் என்ற நமக்கு எடுத்துகாட்டுகின்றார்;. 

மனிதராய் பிறந்த இயேசு மாளிகையைத் தேர்ந்துகொள்ளவில்லை, மாட்டிடைக் குடிலைத் தேர்ந்துகொண்டார். அரசர்களுக்கு ஆசி வழங்கவில்லை, ஆநிரை காக்கும் ஆயர்களுக்கே காட்சியளித்தார். ஏனெனில், கிறிஸ்து ஏழைகளையும், ஏழ்மையையம் மற்றும் எளிமையையும் தன் வாழ்வாக கருதினார். இறை வேண்டலின் துணையுடனும், எளிமையின் பலமுடன் பகிர்வின் மூலம் பிறரன்பை போதித்தார்.  

எனவே, இயேசு பாலனின் பிறப்பு நம்மிடத்தில் இருக்க வேண்டிய தாழ்ச்சியையும், நாம் பிறரிடத்தில் கொள்ள வேண்டிய அன்பையும் கற்பிக்கின்றது. இயேசு இவ்வுலகத்தின் உணவாக தீவனத்தொட்டில் பிறந்து தன்னுடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஆந்த அன்பை பெற்று, அதை பிறருடன் பகிர அழைக்கும் இப்பெருமகிழ்வின் கொண்டாட்டத்தில் இணைவோம்! மகிழ்வோம்.

கிறிஸ்து பிறப்பு திருப்பலி – 25-12-24

வாசக முன்னுரைகள்

இரவு திருப்பலி

முதல் வாசக முன்னுரை (எசா 9 : 2-4, 6-7)

தொடர் போர்களாலும், பஞ்சத்தாலும் வாடிய இஸ்ரேயல் மக்களை எதிர்வரும் மீட்பரின் வருகைக்காக தயார் செய்யும் இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்குகள் இன்றைய முதல் வாசக்கத்தில் இடம் பெற்றுள்ளது. நாம் செய்த பாவத்தால், இறைவன் நம்மை கைவிட்டுவிட்டார் என்று துவண்டு கிடந்த இறைவனின் மக்களை, அவர்களுக்காக புதிதாக தோன்றவிருக்கும் புது அரசர் நினைத்து மகிழ்ந்து அக்களிக்க அழைக்கும் இம்முதல் வாசகத்திற்கு ஆவலுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை ( தீத் 2 : 11-14)

இறைமகன் இயேசுவின் போதனையால் ஈர்க்கப்பட்ட பலர், கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்து வாழ்ந்தனர். இயேசுவின் பாதைகளை தமதாக்கிக் கொண்டு பயணிக்க தொடங்கினர். இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெற்றனர். அவ்வாறு திருமுருக்கு பெற்ற அனைவரும், இறைவன் மீது எவ்வாறு பற்று கொள்ள வேண்டும் என்று கற்பிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

பகல் திருப்பலி 

முதல் வாசக முன்னுரை (எசா 52 : 7-10)

இறைவன் தம் இறைவாக்கினர்கள் மூலம் அளித்த இறைவாக்குக்கள் ஒருபோதும் பொய்த்ததில்லை. தன்னுடைய மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், அவர்களை மீட்பின் பாதையில் வழிநடத்திச் செல்லவும் அவர்களுக்கென்று ஒரு அரசரை அனுப்பிய இறைவன் தம் இறைவாக்கினர்கள் மூலம் வரவிருக்கும் மீட்பரைப் பற்றி முன்னுரைக்கின்றார். எனவே, மீட்பரின் வருகைப் பற்றியும், அவரின் வலிமையைப் பற்றியும் இம்முதல் வாசம் அளிக்கும் விளக்கங்களுக்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (எபி 1 : 1 – 18)

இறைவன் பழைய ஏற்பாட்டில பல்வேறு வடிவங்களிவும், இறைவாக்கினர்களின்; மூலமாக மக்களிடம் உறையாடினார் தன் அன்பின் மிகுதியால் மனித உருவெடுத்து மக்களிடையே மனிதராக தோன்றிய இறைமகன், வானதூதர்களை விட மேலானவர். இறையாட்சியை நிறுவியதன் வழியாகவும், தாம் கொண்டுள்ள இறை இயல்பின் காரணமாக தந்தையின் மகனாக இயேசு விளங்குகின்றார் என்ற மறையுண்மையை உணர்த்தும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ஏழைகளைத் தேடிச் சென்ற எம் இறைவா! விளிம்பு நிலை மக்களை தேடிச் சென்று தேற்றும் உன் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகிறோம். கிறிஸ்து பிறப்பில் மகிழ்வு கொள்ளும் நாங்கள், கிறிஸ்து பிறந்ததன் நோக்கத்தை நிறைவேற்றவும் எளியவர்களுக்காக வாழவும் வேண்டிய வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளிலும், மக்களுக்கு உபயோகமற்ற திட்டங்களிலும் எம் நாட்டுத் தலைவர்கள் பணத்தை வீணடிக்காமல், தொலைநோக்குடைய நல்ல திட்டங்களை தீட்டி, இயேசு பாலன் கொண்டு வந்த நீதியின் பாதையில் மக்களை வழிநடத்தி, அவர்கள் வாழ்வில் உயர்வடையச் செய்ய தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. திருக்குடும்பத்தின் நாயகனே எம் இறைவா! இயேசு பாலனின் பிறப்பால் திருக்குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி எங்கள் இல்லங்களில் ஏற்படவும், எங்கள் குடும்பங்களில் உள்ள தந்தைகளும், தாய்களும் மற்றும் பிள்ளைகளும் திருக்குடும்பத்தை பிரதிபலிக்க வேண்டுமென்றும், திருக்குடும்பத்தில் உள்ள தியாக உணர்வும், பரசபர அன்பும் எங்கள் குடும்பங்களில் மேலோங்க தேவையான இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு, இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இயேசு பாலனின் பிறப்பில் நம்பிக்கைக் கொண்ட நாங்கள், இறைவன் காட்டும் புதுப்பாதையில் பயணிக்கவும், இயேசுவோடு சேர்ந்து புதுவாழ்வு பெறவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. ஞானத்தின் ஆதாரமே எம் இறைவா! இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களுடைய வாழ்வில் கிறிஸ்து பாலனின் ஆசிரை உணர்ந்திட உம்மை மன்றாடுகின்றோம். தவறான வழிகாட்டுதல்களால் தங்கள் வாழ்வை சிதைத்து கொள்ளாமல், தங்கள் வாழ்வின் குறிக்கோள்களை நோக்கி அயராது உழைக்க வேண்டிய அருள்வரங்களை இவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 



Christmas Mass Introduction 2025
Tamil Mass Introduction
Sunday Mass Introduction
Irai Velicham Mass Introduction
Mass Introduction PDF


Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...