ஆண்டவரின் திருமுழுக்கு
திருப்பலி முன்னுரை
திருமுழுக்கின் வாயிலாக நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு நாம் இறைவனின் மாசற்ற பிள்ளைகளாகின்றோம். நாம் பெற்ற திருமுழுக்கின் வழியாக நாம் தேர்ந்தெடுத்த பாதையான கிறிஸ்துவின் பாதையில் பயணிக்கும் பொழுது கிறிஸ்து அருளும் தூய ஆவியின் திருமுழுக்கை பெறுகின்றோம். மண்ணுலக மாந்தரை பாவத்திலிருந்து மீட்க தோன்றிய இறைமகன், இறைவனின் பாதையில் என்றும் நடக்க திருமுழுக்கின் மூலம் தன் இறைத்தன்மையை உறுதி செய்தார். இதன் அடையாளமாக இறைமகன் இயேசு கிறிஸ்து யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற பொழுது, இறைவனின் தூய ஆவியானவர் புறா வடிவில் இயேசுவின் மீது இறங்கி வந்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்டு, நிலையான பேரின்ப வாழ்விற்கு அழைத்துச் செல்ல வல்ல கிறிஸ்துவின் மீது இறைவன் கொண்ட அன்பை, “என் அன்பார்ந்த மகன் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்ற தன் அன்பு வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றார்.இறைவன் இயேசுவிற்கு அருளிய அதே தூய ஆவியை நமக்கும் நம்முடைய நம்முடைய திருமுழுக்கின்; பொழுது அளிக்கின்றார். இயேசு தான் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் ஆற்றலால் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து, இறைத்திருவுளத்தை நிறைவேற்றினார். நாமும் நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் வல்லமையால் நம்முள் உள்ள மன அழுக்குகளை அகற்றி இறைவன் காட்டும் அன்பின் பாதையில் என்றென்றும் பயணிப்போம். அந்தப் பயணத்திற்கு தடையாக உள்ளவற்றை, திருமுழுக்கின் வாயிலாக நாம் பெற்றுக் கொண்ட தூய ஆவியின் துணையுடன் வெற்றி கொண்டு இறைவனின் பிள்ளைகள் என்ற உறுதியுடன் இந்த உயர்வின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
ஆயனின் வருகை எதிர்பார்த்து மந்தைகாத்திருப்பது போல, தங்களுக்கு வாழ்வளிக்க வரும் எல்லாம் வல்லவரின் வருகைப் பற்றி விரிவானக் குறிப்புகள் இன்றைய முதல் வாசகத்தில் தரப்பட்டுள்ளது. துவண்டு கிடந்த மக்களினத்திற்கு புதுப்பொலிவளிக்க வல்ல மீட்பரை வரவேற்கும் படி இறைவாக்கினர் எசாயா அவர்கள் இறைவாக்குறைக்கின்றார். எனவே, இறைவனிடமிருந்து வரும் மீட்பையும், மீட்பரையும் நமதாக்குவதற்கான வழிகளைக் கற்பிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
மனிதராய் பிறந்த அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவன் அளிக்கும் அருள் வெளிப்படுத்தப்படுகின்றது. மனிதராய் நம்மிடையே பிறந்த இயேசு கிறிஸ்து நம்மை அனைத்து தீமைகளிலிருந்து காத்து, நீதியின் பாதையில் நடத்திடுவார் என்றும், அவர் வாழியாக நாம் வாழ்வு தரும் தூய ஆவியின் திருமுழுக்கை பெறகின்றோம் என்ற இறைப்படிப்பினைகளை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
- இயேசுவின் பெயரால் திருமுழக்கு பெற்று, இறைச் சமுகமாய் ஒன்று கூடி வாழும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் இயேசு காட்டிய அன்பின் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், நாங்கள் பெற்ற திருமுழக்கின் உன்னதத்தை உணர்ந்து, தூய ஆவியின் வாழிகாட்டுதல்களின் படி எங்கள் வாழ்வை சீரமைக்க வேண்டிய அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- உண்மையை உலகுக்கு அளிக்க வந்த எம் அன்பு இறைவா! கடமை, கண்ணியம் தவறாது உழைக்கும் அனைத்து தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். எந்த சூழலிலும் கடமை தவறாது உழைக்கும் உண்மையானவர்களுக்கு, உண்மையின் வழியில் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலையும், உண்மையின் வழியில் செல்லாதோர்க்கு தகுந்த ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- எஙகள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! கடும் நோய்களாலும், தீராத மன உளைச்சலாலும் அல்லல்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். விண்ணகத்திலிருந்த மண்ணகத்திற்கு இறங்கி வந்த மண்ணக உணவாகிய நீரே, அவர்களுக்கு ஆறுதலாக இருந்து நலமளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- விண்ணக உணவாக மண்ணகம் வந்த எம் இறைவா! அன்றாட உணவில்லாமல் வீடுகளிலும், வீதிகளிலும் வசிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு ஆன்மா உணவையும், அன்றாட உணவையும் அளிக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- ஞானத்தை வாரி வழங்கிய எம் அன்பு இறைவா! கிறிஸ்துவை மையமாகக் கொண்டு சிறிய திருஅவையாக கூடி செபிக்கும் நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்றவாறு எங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவும், எம் பங்கு பணியில் பணிபுரியும் இறைப் பணியாளர்களும், இறைமக்களும் ஆன்ம வாழ்வில் மென்மேலும் வளர அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
