இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Wednesday, January 22, 2025

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 26-01-2025

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 

26-01-2025

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 26-01-2025


திருப்பலி முன்னுரை

எளிய இறை நம்பிக்கையின் வாயிலாக ஆன்மீகத்தில் முதிர்ச்சி காண வந்துள்ள சகோதர, சகோதரிகளே! இறைமகன் இயேசு கிறிஸ்து மனிதர்களாகிய நம்மை போல திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கு பெற்ற பின் அலகையின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இறை திருவுளத்தை நிறைவேற்ற  வேண்டுமென்ற பற்றுறுதின் விளைவாக அலகையின் அத்தனை சோதனைகளையும் வென்று, தான் இறைமகன் என்பதை நமக்கு நிருபித்தார். கிறிஸ்துவால் சோதனைகளை வெற்றி கொள்ள முடியுமெனில், அவரின் உடலின் உறுப்புகளாகிய நம்மாலும் நம்முடைய சோதனைகளை எதிர் கொள்ள முடியும். பாவத்தை போக்கி, சாவை அழிப்பதற்காக உலகத்தில் தோன்றிய இயேசு கிறிஸ்து, எளியவர்களுக்கும், பாவ நாட்டத்தால் சிறைப்பட்டோருக்கும் ஆண்டவரின் வாழ்வு தரும் வார்த்தையை அறிவித்தார். ஏழை எளியவர்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தார். இவ்வாறாக தன்னுடைய வாழ்வை பிறருக்கு அளித்ததன் வாயிலாக தன்னை சோதனைகளில் இருந்தும், பாவத்திலிருந்தும் காத்துக் கொண்டார். நாமும் நம்முடைய வாழ்வை நமக்காக வாழாமல், ஏழை எளியவர்களுக்காக வாழும் பொழுது நம்முடைய சோதனைகளிலிருந்தும், பாவங்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள முடியும்.  எளியவர்களுக்கும், சிறைப்பட்டோருக்கும் நாம் நம்முடைய நற்செய்தியை வார்த்தைகளால் அல்லாமல், இயேசுவைப் போல நம் செயல்களால் நற்செய்தி பணியாற்ற தேவையான வரங்களை வேண்டி வாழ்வளிக்கும் இக்கொண்டாட்டத்தில் மகிழ்வுடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பின் எருசலேமுக்கு வந்த மக்கள் நெகேமியா தலைமையில் ஆலயத்தை மீண்டும் கட்டினர். எஸ்ரா திருச்சட்டத்தை புதுப்பித்து, மக்கள் கடைப்பிடிக்க வழிவகுத்தார். ஆண்டவரின் வார்த்தைகள் அவர்களுக்கு வழியாக மாறியதை உணர்ந்து மக்களும் உருக்கமாக அழுதனர். எனவே, ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்துவின் மூலம் ஒரே மக்களினமாக மாறிய நம் அனைவருக்கும் கிறிஸ்துவே தலையாக விளங்குகின்றார். எனவே, இறைமக்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்துவில் பங்கேற்கின்றோம். நாம் அனைவரும் கிறிஸ்வின் உடலோடு இணைந்திருப்பதால் நாம் அனைவருமே கிறிஸ்துவுக்கானவர்கள். நம்மில் ஏற்றத்தாழ்வுகள் இருத்தாலாகாது எனவும், அதற்கான விளக்கத்தையும் அளிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம். 


மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை, கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா! உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து, அளவுக்கு அதிகமான பொருட்களை, சொத்துக்களைச் சேமிக்காமல் எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வழிபாட்டின் நாயகரே எம் இறைவா! நாங்கள் செய்யும் வழிபாடுகள் வெற்றுச் சடங்குளாக அல்லாமல் அர்த்தமுள்ளதாக அமையவும், வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாடிக்கையான ஒரு செயலாக இல்லாமல் பொருளுள்ள வழிபாட்டின் முழுநிறைவையும், நிறைவான வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைக் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதிய சிந்தனைகளோடும், புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலைத் தந்தருன வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறிப்பாக எம் நாட்டின் இறையாண்மைக்கு, மக்களின் ஒற்றுமைக்கு எதிரான சட்ட மாற்றங்கள், விவசாயிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், ஏழை எளியோர் இழைக்கப்படும் அநீதிகள் நீங்கிட உம் இரக்கத்தை எங்கள் மீது பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...