இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, November 7, 2025

Sunday Mass Introduction - 32 Sunday

பொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு
09-11-2025
Sunday Mass Introduction

Sunday Mass Introduction -  32 Sunday

திருப்பலி முன்னுரை

நொருங்கிய உள்ளத்தை பலியாக அளிக்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! இன்று நம் தாயாம் திருஅவை அதனுடைய தலைமைப்பீடமான புனித லூத்தரன் ஆலய நேர்ந்தளிப்பு பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்புவிடுக்கின்றது. சிறப்புமிக்க இந்நாளில், நம் திருஅவையின் தோற்றத்திற்கான காரணத்தையும், நம்முடைய கிறிஸ்துவ வாழ்வையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். பாவத்தின் பிடியில் சிக்குண்ட ஆன்மாக்களை மீட்பதற்காக, கிறிஸ்து மனிதராக பிறந்தார். அன்பின் பாதையில் நடப்பதன் வழியாக நாம் பாவத்திலிருந்து விடுபட முடியும் என்று தன் சொல்லாலும் செயலாலும் கற்பித்தார். இறுதியில் அன்பின் இறையரசை தன்னுடைய பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு மூலம் நிறுவினார். அதன்படி, ஆன்மாக்களை மீட்கும் பணியை தொடர்ந்தாற்ற திருஅவையை ஏற்படுத்தினார். அவ்வண்ணம், இறைவனால் ஏற்படுத்தப்பட்ட திருஅவையின் உறுப்பினராக இருக்கும் நம்முடைய சிந்தனையும், செயலும், சொல்லும் அதற்கேற்றவாறு உள்ளதா? என சிந்திப்போம்.  நம் குடும்பத்திலும், இறைச் சமுகத்திலும் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற பொழுது நாம் கிறிஸ்துவின் சிடர்களாகின்றோம். எனவே, லூத்தரன் ஆலய நேர்தளிப்பு விழாவை கொண்டாடும் இந்நாளில், நம்முடைய ஆன்மாவை இறைவனுக்கு காணிக்கையாக்கி நம்முடைய ஆன்ம மீட்புக்காகவும், நம்முடைய அயலாரின் மீட்புக்காகவும் சிறப்பாக செபிப்போம்.

வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை

இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட இஸ்ரேயல் மக்கள், இறைவனின் வாக்கிற்கேற்ப தங்கள் வாழ்வை நடத்தாததால் பல்வேறு நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டனர். சிதறடிக்கபட்ட மக்களை இறைவாக்குரைத்து இறைவனின் பாதையில் இறைவாக்கினர்கள் வழிநடத்தினர். இன்று எசேக்கியல் இறைவாக்கினரும், இஸ்ரேயல் மக்களின் கனவான வழிபாட்டு அலயத்தையும். நம் உள்ள ஆலயத்தையும் இம்முதல் வாசகத்தில் ஒப்பிடுகின்றார். எனவே, உள்ள மாற்றத்திற்கு அழைப்புவிடுக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

நம்முடைய ஆன்மாவை கட்டியெழுப்புவதற்காகவே கிறிஸ்து திருஅவையை ஏற்படுத்தினார். இந்த திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் அன்பின் பாதையில் நடப்பதன் மூலம் நம் ஆன்மாவினை கட்டியெழுப்ப முடியும். அதன்படி, தூய ஆவியாரின் துணை கொண்டு அன்பின் பாதையில் பயணிக்க அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் கவனிப்போம்.


மன்றாட்டுகள்

1. அன்பின் அடையாளமாக திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், உம்முடைய அன்பின் கட்டளைகளை குறைவின்றி கற்க வேண்டுமென்றும், எங்கள் உள்ள ஆலயத்தையும், வழிபாட்டு ஆலயத்தையும் அன்பு நிறைந்த செயல்களால் அலங்கரிக்க தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. வழிநடத்தும் எம் இறைவா! இச்சமுகத்தின் தூண்களான இளைஞர், இனம் பெண்களை நிறைவாக ஆசிர்வதியும். தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தங்களைச் சார்ந்தவர்களின் நலனில் அக்கறை கொள்ளவும் அவர்களுக்கு தேவையான ஞானத்தை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. பெண் சீடர்களை உயர்த்திய எம் இறைவா! எங்களுடைய இல்லத்திலும், சமுகத்திலும் வாழும் பெண்களுக்கு உரிய மதிப்பளித்திட வேண்டிய வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்றும், இச்சமுகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்புடன் வாழ்வதற்கான மேம்பட்ட சமுகத்தை கட்டியெழுப்புவதற்கான சுத்தமான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பு செய்ய அழைப்பு விடுக்கும் எம் இறைவா! இவ்வுலகெங்கும் போர்களாலும், இனவாதத்தாலும் பாதிக்கபட்டு தங்கள் உயிரையும், உறவுகளையும் இழந்த அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். “உம் அயலாரை, உன்னை அன்பு செய்தது போல் அன்பு செய்” என்ற இயேசுவின் அழைப்பினை ஏற்று, இவ்வுலகினை அன்பினால் கட்டியெழுப்ப தேவையான மனநிலையை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


Comment , Share

Download

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...