🌟 ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா 🌟
04-01-2026
“ஒளி அனைவருக்கும் வெளிப்பட்டது”
✦ திருப்பலி முன்னுரை
விண்ணகத்திலிருந்து மண்ணகம் இறங்கி வந்த இயேசு பாலனின் ஆசீரானது, எளிமையான இறை நம்பிக்கையை கொண்ட இடையர்களுக்கும், ஆழமான ஞானத்தை பெற்ற ஞானிகளுக்கும் நிறைவாக வழங்கப்பட்டது. ஏனெனில், இவர்கள் இருவருமே இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு, இறைவனின் ஆசீரை வேண்டினர். இதனால் இறைவன் அருளிய ஆசீர் அவர்களுக்கு நிறைவாக கிடைத்தது. மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு பாலன், இடையர்கள் மற்றும் ஞானிகளின் உள்ளத்திலும் பிறந்தார். அதன் விளைவாக இடையர்கள் ஆர்ப்பரித்தார்கள், ஞானிகள் காணிக்கைகளை பாலனுக்கு பரிசாக அளித்தனர்.
வானதூதரும், வான் நட்சத்திரமும் இயேசு பாலனை காண இடையர்களுக்கும் ஞானிகளுக்கும் அழைப்பு அளித்தது போல இன்றைய திருவழிபாட்டின் வாயிலாக நமக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. இயேசுவை காண வந்த மூன்று ஞானிகளுக்கு இவ்வுலகில் தாங்களிடத்தில் இருந்த சிறந்தவைகளை இறைவனுக்கு காணிக்கையாக அளித்தனர். நாம் எதை இத்திரு வழிபாட்டின் வாயிலாக இறைவனுக்கு அளிக்க வேண்டும்; என்று சிந்திப்போம். நீங்கள் குழந்தையாய் மாறாவிடில், விண்ணரசிற்குள் புக முடியாது என்று மொழிந்த இயேசுவே நம்மிடத்தில் குழந்தையாக பிறந்துள்ளார். எனவே, அக்குழந்தைக்கு போட்டி, பொறாமை அற்ற எளிய குழந்தை உள்ளத்தை பரிசாக அளிப்போம். கடினப்பட்ட நம் உள்ளத்தை கள்ளமில்லாத ஒன்றாக மாற்ற இந்த பகிர்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
✦ வாசக முன்னுரைகள்
பல்வேறு துன்பங்களினால் அவதியுற்ற இவ்வுலக மக்களுக்கு ஒளியை வழங்க இறைவனே மனிதனாக பிறந்தார். வாட்டமுற்ற மக்களின் மனதை இறைமகனின் பிறப்பின் முன்னறிவிப்பு செய்தி மூலம் இறைவாக்கினர் எசாயா வளமடையச் செய்கின்றார். இறைவனின் பிரதிநிதியாக அவர் கூறும் ஆசிர்வாத மொழிகளை உள்ளடக்கிய இம்முதல் வாசகத்திற்கு அவலுடன் செவிகொடுப்போம்.
அறிவில் மிகுந்த எத்தனையோ ஞானிகளுக்கும், இறைவாக்கினர்களுக்கும் கிடைக்க அரிய பெரும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இறைப்பண்பை கொண்ட இறைவன் மனிதராய் பிறந்ததன் மூலம் நம்மை அவருடைய உடன் பங்காளியக மாற்றுகின்றார். எளியவர்களாகிய நமக்கு அளிக்கப்பட்ட இந்த இறைவெளிப்பாடு எத்தனை மதிப்புமிக்கது என்று விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்
✦ மன்றாட்டுகள்
- எளியவர்களைத் தேடிச் செல்லும் எம் அன்பு இறைவா! விளிம்பு நிலை மக்களை தேடிச் சென்று தேற்றும் உன் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இயேசு பாலனின் பிறப்பால் மகிழும் நாங்கள் அனைவரும் இயலாதவர்களுக்காக நாங்கள் செய்யும் சேவைகளை மென்மேலும் சிறப்பாக செய்திட தேவையான உதவிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளிலும், மக்களுக்கு உபயோகமற்ற திட்டங்களிலும் எம் நாட்டுத் தலைவர்கள் பணத்தை வீணடிக்காமல், தொலைநோக்குடைய நல்ல திட்டங்களை தீட்டி, மக்களின் வாழ்வை உயரச் செய்ய தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- நநொருங்கிய உள்ளத்தை பலியாக கேட்ட எம் இறைவா! பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, செருக்கு, போன்ற உள்ள அழக்குகளை அகற்றி, எங்கள் இல்லங்களை நாங்கள் அலங்கரிப்பது போல, எங்கள் உள்ளங்களையும் அலங்கரித்து ஞானிகள் தங்களிடத்தில் இருந்தவற்றில் சிறந்ததை உமக்கு அளித்தது போல, நாங்களும் எம்மையே உமக்கு காணிக்கையாக்கும் மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- வார்த்தைக்கு வாழ்வளிக்கும் எம் இறைவா! இறைஞானம் பெற இறைப்பிடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும், பிறரன்பு பகிர்வில் வெறும் சொல் வீரர்களாய் மட்டும் இல்லாமல், செயல் வீரர்களாய் இருந்து, பிறரன்பு பணியில் ஈடுபட்டு இறைஞானத்தை எமதாக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- குழந்தைகளை விரும்பிய எம் அன்பு இறைவா! தலைமுறை இடைவெளியாலும், தகவல் தொழில் நுட்ப கருவிகளாலும் கட்டுண்டு தவிக்கும் எம் குழந்தைகளுக்கு, இறையரசின் மேன்மைகளை உணர்த்தும், நல்ல பண்புகனை கொண்ட வழிகாட்டிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction