பொதுக்காலம் 20ம் ஞாயிறு 18-08 -2024
திருப்பலி முன்னுரை
விண்ணக இறைவன் அளிக்கும் விருந்தில் பங்கேற்க வந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் 20ம் ஞாயிறு திருப்பலியில் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ள நம் அனைவரையும் நம் தாயாம் திருஅவை இறைவனோடு இணைந்திருப்பதற்கான எளிய வழியைக் கற்பிக்கின்றது. நாம் எப்பொழது நமக்கும், நம்முடைய சுயநல எண்ணங்களுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கின்றோமோ, அப்பொழுது நாம் இறைவனுடன் நமக்கு இருக்கும் உறவை இழக்கின்றோம். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இயேசு கிறிஸ்து, தம்மையே நமக்காக தந்தார். தன்னுடைய விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் இறைவனின் திருவுளம் நிறைவேற்றினார். இயேசு கிறஸ்துவை பின்பற்றும் நாமும் அவ்வாறு வாழ அழைக்கப்படுகின்றோம். சுயநலமற்ற பிறநல வாழ்வே, இயேசு நமக்கு காட்டும் வழியாகும். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இயேசு கிறிஸ்து நாம் எவ்வாறு வாழ வேண்டுமென்று வாழ்ந்து காட்டி, நமக்கு அன்பின் பாதையைக் காட்டியுள்ளார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இறைவனின் பாதையான பிறரன்பு பாதையில், நாம் பயணிக்கும் பொழுது நாம் இறைவனோடு இணைந்திருப்போம். இறைவனோடு இணைந்திருப்பதற்கான ஞானத்தை பெற, இந்த விண்ணக கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
கிறிஸ்துவை பின்பற்றும் நாம் அனைவரும் ஞானத்துடன் நடந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம். உலகின் அழியக்கூடிய இன்பங்களில் ஈடுபடுவதல்ல, இயேசு தரும் விண்ணகப் பாதையில் பயணிப்தே உண்மையான ஞானம். இந்த ஞானத்தை பெற அழைப்பு விடுக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுத்து ஞானத்தை நம்முடையதாக்குவோம்.
இரண்டாம் வாசக முன்னுரை
ஞானமில்லாமல் வாழும் தறுமாறான வாழ்வை விட்டு, இறைவன் தரும் ஆவிக்குரிய வாழ்வை வாழ நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இறைவனை முன்னிருத்த வேண்டும். ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுவதற்காக அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. விண்ணக வாழ்வை வழங்க வந்த எம் இறைவா! நிலைவாழ்வை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான வழியைக் கற்பிப்பதற்காய் நீர் ஏற்படுத்திய உம் திருஅவையின் உறுப்பபினர்களுக்காக மன்றாடுகின்றோம். நாங்கள் அனைவரும் விண்ணக உணவாகிய இயேசுவை அழமாக அறிந்துகொண்டு, இறைவனை அடைவதற்கு வேண்டிய ஆசீரை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. உண்மையை உலகுக்கு அளிக்க வந்த எம் அன்பு இறைவா! கடமை, கண்ணியம் தவறாது உழைக்கும் அனைத்து தலைவர்களுக்காவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். எந்த சூழலிலும் கடமை தவறாது உழைக்கும் உண்மையானவர்களுக்கு, உண்மையின் வழியில் தொடர்து பயணிப்பதற்கான ஆற்றலையும், உண்மையில் வழியில் செல்லாதோர்க்கு தகுந்த ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. எஙகள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! கடும் நோய்களாலும், தீராத மன உளைச்சலாலும் அல்லல்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். விண்ணகத்திலிருந்த மண்ணகத்திற்கு இறங்கி வந்த மண்ணக உணவாகிய நீரே, அவர்களுக்கு ஆறதலாக இருந்து நலமளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. விண்ணகத்தை இருப்பிடமாக கொண்ட எம் இறைவா! மாறிவரும் புதிய காலச் சூழலுக்கு ஏற்ப எம் பிள்ளைகளை விண்ணகத்தின் பாதையான அன்பு வழியில் வழிநடத்திட வரம் வேண்டுகின்றோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரி வாழ்வு வாழ்ந்து காட்டவும், அதன் மூலம் பிள்ளைகள் நற்குணங்களுடன் வளரவும் தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
5. விண்ணக உணவாக மண்ணகம் வந்த எம் இறைவா! அன்றாட உணவில்லாமல் வீடுகளிலும், வீதிகளிலும் வசிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு ஆன்மா உணவையும், அன்றாட உணவையும் அளிக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
#mass introduction #
#18-08-2024#
#Thirupali Munurai#