இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, November 8, 2024

பொதுக்காலத்தின் 32-ஆம் ஞாயிறு 10-11-2024

 பொதுக்காலத்தின் 32-ஆம் ஞாயிறு 10-11-2024


திருப்பலி முன்னுரை

இறை பகிர்வின் இனிய நிகழ்வில் பங்கேற்க வந்துள்ள சகோதர சகோதரிகளே! பொதுக்காலத்தின் 32-ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்தின் வாசகங்கள் அனைத்தும் அளித்தலின் மேன்மையை பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன.  இருப்பவற்றில் இருந்து கொடுப்பதை காட்டிலும், இருப்பதையெல்லாம் கொடுப்பதே முழுமையான பிறரன்பு பகிர்வாகும்.  நமக்கான செல்வங்களை இம்மண்ணுலகில் சேர்க்கும் பொழுது அவை அழிந்து போகும். நாம் சேர்க்கும் செல்வத்தை பிறருடன் பகிரும் பொழுது அவை விண்ணுலகில் உயரும்.  நாம் இம்மண்ணுலகில் புரியும் பாவங்களின் பொருட்டு, நமக்காக மரித்த இயேசு கிறிஸ்து, இறைவன் தன் மீது கொண்ட அன்பை நம் அனைவரோடும் பகிர்ந்து கொண்டார். நம்மையும் உன்னதமான இந்த பகிர்வின் வாழ்விற்கு  அழைக்கின்றார். நாம் பற்றி பிடிக்கும் பணம், பதவி, பட்டம் மற்றும் செல்வம் இவை எல்லாம் நம்மோடு நிலைத்து நிற்பதில்லை. எதிர்பார்ப்பின்றி பிறருக்கு செய்யும் நற்செயல்கள் மட்டுமே நம் ஆன்மாவிற்கு நன்மை பயக்கும். இன்றைய வாசகங்களில் இடம்பெறும் ஏழைப் கைம்பெண்கள் தங்களிடம் உள்ளதை எல்லாம் இறைவனுக்கு கொடுத்து, விண்ணகத்தை தங்களின் தாயகம் ஆக்குகின்றனர். இறைவனின் சீடர்களாகிய நாமும் இந்த ஏழைக் கைம்பெண்களை போல பகிர அழைக்கப்படுகின்றோம். இயேசு நம் பாவங்களின் பொருட்டு தன் உயிரையே நமக்காக அளித்தார். இவர்களைப் போல நாமும், நம்மிடம் உள்ளவைகளை பிறருடன் பகிர்ந்து கொண்டு விண்ணகத்தின் விழுமியங்களை கடைபிடிக்க வேண்டிய அருள் வரங்களை வேண்டி இந்த பகிர்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்

வாசக முன்னுரைகள்

முதல் வாசகம் முன்னுரை

இறைவாக்குறைக்கும் பணியில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்ட எலியா இறைவாக்கினர், தன்னுடைய இறைவாக்குரைக்கும் பணியை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் செயல்களின் மூலம் பகிர்வின் மேன்மையை நமக்கு விளக்குகின்றார். உணவின்றி வறுமையில் தவித்த ஏழைக் கைம்பெண்ணின் ஈகை பண்பை விளக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம் பாவங்களுக்காக இம்மண்ணுலகில் பிறந்து மரித்த இயேசு கிறிஸ்து, நம் அனைவருக்கும் தலைமை குருவாக இருக்கின்றார். தலைமை குரு நம் பாவங்களுக்காக பாவ கழுவாய் புரிவது போல, தன்னுடைய இறப்பின் மூலம் நம் அனைவருடைய பாவங்களுக்காகவும் பாவக்கழுவாய் புரிந்த இயேசு என்றும் நம் அனைவருக்கும் தலைமை குருவாய் விளங்குகின்றார் என்று மொழியும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்


மன்றாட்டுகள்

1. உம் எல்லையில்லா அன்பின் அடையாளமாக திரு அவையை ஏற்படுத்திய எம் இறைவா! உன் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், உம்மைப் போல தங்களிடத்தில் உள்ளது அனைத்தும் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் தாராள மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


2. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! போதிய உணவு, உடை, உறைவிடமின்றி வறுமையால் வாடும் அனைவரையும் அரவணைக்கும்படி மன்றாடுகின்றோம. இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டிய மனப்பக்குவத்தை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம். 


3. எங்களை அதிகமாய் அன்பு செய்யும் இறைவா! உலகெங்கும் வெவ்வேறு வழிகளில் உம்முடைய நற்செய்தி அறிவிப்பு பணியை, சமூக நல சேவைகள் மூலம் ஆற்றி வரும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளை தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்


4. குழந்தைகளை அன்பு செய்த எம் அன்பு இறைவா! எங்கள் வீடுகளில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பகிர்வின் மேன்மையை எங்களுடைய செயல்களால் எடுத்துச் சொல்லவும். பிறர் அன்பு பகிர்வின் பாதையில் அவர்களின் நன்முறையில் வளர்த்திட வேண்டிய ஞானத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. தலைமை குருவே எம் இறைவா! நீர் ஏற்படுத்திய நற்செய்தி பணியை இவ்வுலகில் தொடர்ந்து ஆற்ற, தேவையான இறை அழைத்தல்களை தந்தருள வேண்டுமென்றும், சிறப்பான முறையில் எங்கள் பங்கில் இறை அழைத்தலை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...