திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (07-12-2025)
*Follow the Page
திருப்பலி முன்னுரை
கிறிஸ்துவின் பெயரால்; ஒன்று கூடி வந்துள்ள இறைச் சமூகமே! திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கும் இந்நாளில் அண்டவரின் வருகைக்காக ஆயத்தமாக அழைக்கப்படுகின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் "மனம் மாறுங்கள். ஏனெனில், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என மனமாற்றத்திற்கு நமக்கு அழைப்புவிடுகின்றார். மனமாற்றம் என்பது நன்மை, தீமை அறிந்து கிறிஸ்துவின் கட்டளையின் படி வாழ்வதாகும்;. எனவே, நம்முடைய வெளிப்புற மாற்றம் என்பது நிலையானது அல்ல. அக மாற்றமே உண்மையான மாற்றம். அதுவே, நமக்கு அமைதியை அளிக்கவல்லது.
இந்த அகமாற்றத்தினை அடைய, இறைவனோடும் நம் அயலரோடும் உள்ள உறவை கிறிஸ்துவின் அன்பின் போதனைகளின் துணை கொண்டு புதுபிக்க வேண்டும். புது மனிதர்களாக வாழ அழைக்கும் இன்றைய நற்செய்தி வாசகத்திற்கேற்ப நம் வாழ்வை மாற்ற வேண்டும். கடவுளுக்கு அஞ்சி இறை வார்த்தையின் படி வாழ்பவர்களே, விண்ணரசில் நுழைய முடியும். எனவே, நாம் மனம் மாறியவர்கள் என்பதை நம் செயல்களால் காட்டுவோம். நாம் செய்த பாவத்திற்காக மனம் வருந்துவோம். பாவம் என்ற பழைய பாதையை தவிர்த்து, மன மாற்றம் என்ற புதிய பாதையில் நம் பயணத்தை தொடரவும். அன்பு, மன்னிப்பு, இரக்கம், பொறுமை போன்ற கிறிஸ்துவின் கொடைகளைப் பெற்றிடவும் இயேசுவின் வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்தும் இந்த இறையருளிள் கொண்டாட்டத்தில் இணைவோம், செபிப்போம்.
கிறிஸ்துமஸ் ரீத் முன்னுரை - அமைதி
அன்புள்ள சகோதர சகோதரிகளே! "அமைதியை ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்". திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிறில் அமைதியின் திரியினை ஏற்றி, கிறிஸ்து அளிக்கும் அமைதி என்னும் கொடையை பற்றி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்து உலகிற்கு கொண்டு வந்த உண்மையான அமைதி நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிலைக்க இந்த ஒளி அழைப்பு விடுக்கிறது. இந்த அமைதியின் ஒளியை ஏற்றும் வேளையில், கலங்கும் இதயங்கள் அமைதியைக் காணவும், சோர்ந்த ஆன்மாக்கள் ஓய்ந்திடவும், ஒருவரை ஒருவர் ஏற்று ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழவும் சிறப்பாக செபிப்போம்.
"அமைதியை ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்".
திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிறில் அமைதியின் திரியினை ஏற்றி, கிறிஸ்து அளிக்கும் அமைதி என்னும் கொடையை பற்றி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்து உலகிற்கு கொண்டு வந்த உண்மையான அமைதி நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிலைக்க இந்த ஒளி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இந்த அமைதியின் ஒளியை ஏற்றும் வேளையில், கலங்கிய இதயங்கள் அமைதியைக் காணவும், சோந்து போன ஆன்மாக்கள் புத்துயிர் பெறவும்; மற்றும் ஒருவரை ஒருவர் ஏற்று ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழவும் சிறப்பாகச் செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை (எசாயா 2: 1-5)
“நீதியின் அரசர் தோன்றியிருக்கின்றார், அவர் மேல் ஆண்டவரின் ஆவி தங்கியிருக்கும், அவர் மக்களை நீதியின் பாதையில் நடத்துவார்” என் எசாயா இறைவாக்கினர் எடுத்துரைக்கின்றார். அவ்விறை வாக்கின்படி, மனிதர்களை பாவத்தின் பிடியிலிருந்து மீட்டு, நிதியின் பாதையில் அழைத்துச் செல்லும் மீட்பரை, தகுந்த தயாரிப்புடன் வரவேற்க நம்மை ஆயத்தப்படுத்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசகம் முன்னுரை
நம்மிடையே மனிதராக பிறக்கவிருக்கும் இயேசுவின் இல்லம், நம்முடைய உள்ளம் என்பதை நாம் நினைவு கூற வேண்டும். இருளின் செயல்களான பாவத்தின் செயல்களை களைந்து, ஒளியின் மக்களாக வாழ வேண்டும். நம்முடைய ஊனியல்பின் படி வாழாமல், கிறிஸ்து நமக்கு கற்றுத் தந்த இறை இயல்புகேற்ப வாழ வேண்டும் ஆகிய மனமாற்றத்தின் செய்திகளை எடுத்துரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அமைதி இழந்து தவிக்கும் வேளைகளில் ஓடிச் சென்று உதவும் உம்; திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நீர் கற்றுத் தந்த அமைதியின் பாதையை இம்மண்ணுலகில் முழுமையாக நிறுவிடவும், உம் பிறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் எங்கள் அனைவர் வாழ்விலும் அமைதி என்றும் மலர்ந்திடவும்; வரமருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
2. நீதியின் அரசரே எம் இறைவா! நாட்டுத் தலைவர்களுக்காக செபிக்கிறோம். மக்களை ஆளும் தலைவர்கள் தங்கள் சுயநலத்தை விடுத்து, பொதுநலனில் அக்கறை கொண்டு உம்மைப் போல் நீதியை நிலைநாட்ட வேண்டுமென்றும், தேவையைற்ற கலவரங்களையும், போர்களையும் கைவிட்டு, இவ்வுலகில் அமைதியை நிலைநிறுத்த அவர்களுக்கு தேவையான மனதை தந்தருள வெண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. கருணைக்கடலே என் இறைவா! உமது வருகைக்காண வழியை ஆயத்தப்படுத்தும் நாங்கள் அனைவரும், உலக இன்பங்களின் நாட்டங்களை தவிர்த்து, ஆடம்பரங்களில் அக்கறை காட்டாமல் வாழவும். இறைவார்த்தைக்கும் திருஅவை கட்டளைகளுக்கும் பணிந்து நடந்து, கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டு மனமாற்றத்தின் பாதையில்; வாழ்வை அமைத்து, புது வாழ்வு வாழவும் வரமருள உம்மை மன்றாடுகிறோம்
4. இரக்கத்தை பொழியும் அன்பு இறைவா! இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் ஜெபிக்கிறோம். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவும், தங்களின் வாழ்வின் இயல்பு நிலைக்கும் மீண்டும் திரும்பவும் அவர்களுக்கு அருள்புரியும். மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வளர்களையும், பணியாளர்களையும் ஆசிர்வதித்து, அவர்களை ஆபத்துகளிலிருந்து காத்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment