🌟 பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 🌟
25-01-2026
✦ திருப்பலி முன்னுரை
கிறிஸ்து ஏற்படுத்திய அன்பின் பாதையில் இவ்வுலகை தொடர்ந்து அழைத்துச் செல்ல, கிறிஸ்து நம்மை சீடர்களாக தேர்ந்து, இறைவனில் தெளிவடையச் செய்கின்றார்.
கிறிஸ்துவுடன் இணைந்து பயணிக்கும் சகோதர, சகோதரிகளே! இன்று நம்முடைய திருஅவை பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்புடன் கொண்டாடுகின்றது. ஒற்றுமையுடன், சகோதரத்துவத்தை மையமாக கொண்டு இயங்கும் திருஅவையின் தோற்றத்திற்கான காரணத்தையும், தோன்றிய விதத்தையும் இன்றைய வாசகங்கள் தெளிவாக விளக்குகின்றன. இறைவனை விட்டு விலகிச் சென்று அடிமையாக வாழ்ந்த மக்களினத்தை, அடிமையின் பிடியிலிருந்து மீட்பதற்காக மீட்பர் தோன்றினார். நம்முடைய எதிர்பார்ப்பின்படி நம்மிடையே தோன்றிய மீட்பர் அதிகாரத்தை தவிர்த்து, அன்பை விதைத்தார். இறையன்பு மற்றும் பிறரன்பு என்ற அன்பின் கட்டளைகள் மூலம் இறையரசை இம்மண்ணுலகில் இன்று வரை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றார்.
இந்த அன்பின் அழைப்பானது முதலில் திருத்தூதர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்களும் கிறிஸ்துவின் அன்பின் கட்டளைகளை கற்று, கிறிஸ்துவில் தங்களைக் கரைத்துக் கொண்டனர். அன்று, அன்பின் பாதையில் சகோதரத்துடனும் சமத்துவத்துடனும் பயணிக்க சீடர்களுக்கு அளிக்கப்பட்ட அதே அழைப்பானது, இன்று நமக்கும் அளிக்கப்படுகின்றது. சாதி, பதவி, பணம், செருக்கும் மற்றும் பேராசை என்ற உலக மாயைகளை களைந்து, கிறிஸ்துவின் இறைக்குடும்பத்தில் நம்மை இணைத்து கொள்வோம். அதற்கு தேவையான இறையுதவிகளை அளிக்கும் இவ்வொற்றுமையின் கொண்டாட்டத்தில் அகமகிழ்வுடன் ஒன்றிணைவோம்.
✦ வாசக முன்னுரைகள்
இவ்வுலகிற்கு ஒளியைக் கொண்டுவர வல்ல இறைவனின் பாதையில் நாம் நடக்கும் பொழுது, இறைவன் அளிக்கும் அவ்வொளியைக் கண்டு கொள்வோம். அதன் மூலம், துன்பங்களை தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ஒவ்வொருவரும் இறைவன் அளிக்கும் இன்பத்தின் அகமகிழ்வை நிச்சயம் அடைந்திடுவர் மற்றும் இறைவனின் நிலையான உறவில் இணைந்திடுவர் என்ற நம்பிக்கையை அளிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு, கிறிஸ்துவின் பெயரால் கூடிய வாழும் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். கிறிஸ்து நம்முடைய மனித நிலையை தேர்ந்து கொண்டு, மானிடத்தை உயரத்தினார். எனவே, இறைவனின் பிள்ளைகளாகிய நாம் மானிடத்தின் பண்புகளாகிய சமத்துவத்துவத்தில் மேலோங்கி, நம்மிடத்தில் உள்ள வேறுபாடுகளைக் களைய அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு இறைக்குடும்பத்தின் உறுப்பினர் என்ற உணர்வுடன் செவிகொடுப்போம்.
✦ மன்றாட்டுகள்
- அன்பின் சமுகத்தை கட்டியெழுப்ப வல்ல எம் இறைவா! அகில உலக கிறிஸ்துவர்களின் ஒற்றுமைக்காக இவ்வாரம் முழுவதும் மன்றாடிய நாங்கள் இறைவிருப்பத்தின்படி ஒற்றுமையாக இருக்கவும், எங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை முன்னிறுத்தாமல் கிறிஸ்துவை மையமாக கொண்டு இறையரசை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் செயல்பட தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- எங்களை வழிநடத்தும் நல் ஆயனே எம் இறைவா! சுயநலமற்ற முன்மதியுடன் செயல்பட கூடிய நல்ல தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். வெறுப்பு அரசியல் மூலம் மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி, அரியாமையை விதைக்கும் தலைர்களை தவிர்த்து, பிறநலன நோக்கத்துடன் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க தேவையான அறிவொளியை தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாகின்றோம்.
- அறிவின் ஊற்றே எம் இறைவா! வரும் காலங்களில் தேர்வை சந்திக்க உள்ள எம் பிள்ளைகளுக்காக மன்றாடுகின்றோம். இந்த தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேர்வுகளுக்கான தயாரிப்பிற்காக கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், தேர்வுக்கான தயாரிப்புகளை இன்றே தொடங்கிட தேவையான வரங்களையும், அதற்கு உகந்த மனநிலையும், உடல்நிலையும் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா! உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து, அளவுக்கு அதிகமான பொருட்களை, எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைக் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதிய சிந்தனைகளோடும், புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Baptism of Lord

No comments:
Post a Comment