இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, February 6, 2026

Sunday 5th Week Mass Introdcution - A

FEB
08
2026

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

YEAR
A

✦ திருப்பலி முன்னுரை

இறைவனின் திருவிருந்தில் நம்பிக்கையுடன் பங்கேற்ற வந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கும், இந்நாளில் இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் நம்முடைய நம்பிக்கையையும், நன்மைத்தன்மையையும் செயல்களில் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. இறைவன் தம்முடைய அன்பை, இவ்வுலகை படைத்து அவற்றை மனிதனுடைய ஆளகைக்கு உட்படுத்தியதன் வாயிலாக தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். இறைவாக்கினர்களும் திருத்தூதர்களும் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து இறைவார்த்தையை அறிவித்ததன் வாயிலாக தங்களுடைய நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுத்தனர். இவர்களைப் போல நம்முடைய நம்பிக்கையை செயல்களின் வயிலாக வெளிபடுத்த வேண்டும்.

இறைவன் நமக்களித்துள்ள பரிசுகளை நம்முடைய சுயநலத்திற்காக மட்டும் பயன்படுத்தும் பொழுது நாம் பாவத்தில் விழுகின்றோம். நம்முடைய திறமைகளையும், செல்வத்தையும் நமக்காக மட்டும் பயன்படுத்துவதற்கு பதிலாக இறை மகிமைக்காக பயன்படுத்தும் பொழுது நம்முடைய நம்பிக்கை முழு வடிவம் பெறும். நம்முடைய விசுவாசத்தை வார்த்தைகளாகவும், செயல்களாகவும் பிறருக்கு பகிர்தளிப்போம். திருப்பலியில் பங்கேற்று, இறைவனின் அருளைப் பெற்ற நாம் , அந்த இறையாசிரை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளை நமக்கு கற்பிக்கும் படி இறைவனிடம் மன்றாடுவோம். நம்முடைய தேவைகளை நன்கறிந்த இறைவன், பிறருடைய தேவைகள் அறிந்துகொள்ளும் நல்ல மனதை நமக்கு நல்கிட வேண்டுமென்றும் அதன் மூலம் இவ்வுலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் விளங்கிட வேண்டுமென்றும் நம்பிக்கையுடன் இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எசாயா 58: 7-10)

வெளிப்புற ஆடம்பர காணிக்கைகளை இறைவன் விரும்புவதில்லை. பசித்தவர்களுக்கு உணவளிப்பதும், வீடில்லாதவர்களுக்கு உறைவிடம் வழங்குவதும், உடையற்றவர்களுக்கு உடை கொடுப்பதுமே இறைவன் விரும்பும் உண்மையான நோன்பு என்பதை இறைவாக்கினர் எசாயா தெளிவாக எடுத்துரைக்கிறார். இந்த உண்மையான நோன்பின் ஆழமான பொருளை வெளிப்படுத்தும் இன்றைய முதல் வாசகத்தை கிறிஸ்துவின் ஒளியாக விளங்க வேண்டுமென்ற ஆர்வத்துடன் கவனிப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (கொரிந்தியர் 2: 1-5)

நமது நம்பிக்கையின் அடித்தளமானது நம்முடைய ஞானத்தில் அல்ல, கடவுளின் வல்லமையில் உள்ளது. இதை மையமாகக் கொண்டு தூய பவுலடியார் தனது பணிவாழ்வை அமைத்தார். அவர் அறிவித்த நற்செய்தி மனித திறமையால் அல்ல, தூய ஆவியாரின் வல்லமையான செயலால் நிகழ்ந்தது என்பதை உறுதியாக எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுலடியாரின் எழுத்துகளை நாம் கவனமுடன் வாசிக்க கேட்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. அன்பை ஆணிவேராக வைத்து நீர் உருவாக்கிய உம் திரு அவைக்காக மன்றாடுகின்றோம். இறைவாக்கினர்களும், மெசியாவும் எவ்வித தொய்வும் இன்றி இறைப்பணி ஆற்றியது போல உம் திரு அவையின் தலைவர்களும், உறுப்பினர்களும் தளராது இறைப்பணி ஆற்றி, தங்களுடைய இறைநம்பிக்கையை செயல்களின் மூலம் வெளிப்படுத்தி இவ்வுலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
  2. நல்ல மேய்ப்பனே எம் இறைவா! இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், தங்களுடைய வாழ்வின் சுயநல எண்ணங்களுக்காக மக்களை பயன்படுத்தாமல் இருக்கவும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்கவும் அவரகளுக்கு தேவையான நல்ல மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நலம் தரும் நற்கருணை நாயகனே எம் இறைவா! இவ்வுலகில் நோய்களாலும், போர்களாலும் மற்றும் கொடிய இனவாதத்தாலும் பாதிப்படைந்து தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் மன்றாடுகிறோம். நீரே அவர்களை உம்முடைய பிள்ளைகளாக கருதி அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்றும், எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்திட வேண்டிய நல்ல மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
  4. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும், எங்களுடைய ஆன்மீக வாழ்வு, அன்றாட வாழ்வில் வெளிப்பட வேண்டிய நிறை வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களுடைய குறைகளை ஏற்று, இறைவழியில் நடந்து, இறைவனின் வல்லமையை பெற எங்களுக்கு தேவையான அருளைத் தந்தருளும். மேலும், எங்களுடைய நம்பிக்கை எங்களுடைய செயல்களில் வெளிப்படுத்திட வேண்டிய வழிகளை எங்களுக்கு கற்பித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Ordinary 4th Week | Iraivelicham Mass Introduction



No comments:

Post a Comment

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...