பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு
✦ திருப்பலி முன்னுரை
இறைச்சமுகமாக இறைவனை ஆராதிக்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவானது, நம்முடைய பிறரன்புச் செயல்களின் மூலம் வெளிப்பட வேண்டுமென்ற மைய நோக்கோடு நம் தாயாம் திருஅவை, பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறைச் சிறப்பிக்க நம்மை அன்புடன் அழைக்கின்றது. கிறிஸ்து இறைப்பணியை தனித்து ஆற்ற வல்லமை பெற்றிருந்தும், தன்னுடைய இறைபணிக்காக சீடர்களைத் தேர்ந்து கொண்டார். துன்பத்தின் வேளையில் இயேசுவின் சீடர்கள் கிறிஸ்துவை மறுதலித்த பொழுதும், தன்னுடைய சீடர்களை கிறிஸ்து ஒரு பொழுதும் மறுதலித்ததில்லை. எனெனில், கிறிஸ்து இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே பாலமாக இருந்து, வெளிவேடமற்ற தூய்மையான உள்ளங்களை கொண்ட இறைச் சமுகத்தை கட்டியெழுப்புவதை தன்னுடைய நோக்கமாக கருதினார்.
கிறிஸ்துவின் சீடர்களாகிய நாமும் கிறிஸ்துவின் மேன்மைமிக்க மதிப்பீடுகளை கடைபிடிக்க அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்துவின் சட்டங்களும், மதிப்பீடுகளும் புறக்காரணிகளைச் சார்ந்தவை அல்ல. அவை நம்முடைய அகத்தை மையப்படுத்துகின்றன. இப்படி, கிறிஸ்துவின் கட்டளைகள் நம்முடைய உள்ளத்தை சார்ந்தது என்று நாம் உணரும் பொழுது கிறஸ்துவின் ஞானம் நம்மை ஆட்கொண்டு, தீயதை விலக்கி நன்மையின் பாதையில் நம்மை அழைத்துச் செல்லும். எனவே, நம்முடைய உள்ளத்தை நம் அன்பின் செயல்கள் மூலம் தூய்மை செய்வோம். மேலும், நம் புலன்களால் செய்வது மட்டும் பாவமல்ல, நம் உள்ளமே பாவத்தின் தொடக்கப்புள்ளி என்பதை உணர்ந்து அகமாற்றத்திற்கு அழைப்புவிடுக்கும் இந்த சகோதரத்துவத்தின் திருவிருந்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
✦ வாசக முன்னுரைகள்
இறைவன் கட்டாயத்தின் பெயரால் நம்மை நன்மையின் பாதையில் நடத்துவதில்லை. மாறாக, நாம் முழுமனதுடன் உண்மையின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றார். அதற்கு ஏதுவாக, இறைவன் நம்முன் நன்மையையும் தீமையையும் வைத்துள்ளார். மேலும், தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் நமக்களித்துள்ளார். எனவே, நாம் நம்முடைய சுய விருப்பத்துடன் இறைவனை தேர்ந்தெடுப்பதன் அடையளமாக நன்மையின் பாதையை காட்டும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
ஞானம் என்பது கடவுளிடமிருந்து பிறக்கின்றது. இவ்வுலக அறிவால், நாம் இறைவனை அடைவது அத்தனை எளிதல்ல. எனவே, இறைவன் அளிக்கும் ஞானத்தை பெற நாம் முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியின் முதல் படியாக தளர்வற்ற இறை நம்பிக்கை வேண்டுமென்று பவுல் அடிகளார் வலியுறுத்துகின்றார். நம்மை படைத்து காத்தும் வரும் இறைவனை அறிந்து கொள்வதற்கு உதவும் ஞானத்தை நமதாக்கி கொள்வோம். அதற்கான வழிகனை கற்பிக்கும் இவ்விரண்டாம் வாகத்திற்கு கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்கள் என்ற மனவுறுதியுடன் செவி கொடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி - மத் 11: 25 அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
✦ மன்றாட்டுகள்
- நேர்மையை நிலைநாட்ட திரு அவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இறை நெறிகளைக் குறைவின்றி கற்று, உண்மைக்குச் சான்று பகர்ந்திட வேண்டுமென்று மன்றாடுகின்றோம். மேலும், சகோதரத்துவத்தை முன்னிறுத்தி சமமான சமுதாயத்தை கட்டியெழுப்ப தேவையான அருள்வரங்களைத் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- நீதியின் பாதையில் பயணிக்க அழைக்கும் எம் இறைவா! எம் நாட்டு தலைவர்களும், மக்களும் நீதியின் பாதையில் நடந்திட அருள்புரியும்! நாங்கள் அனைவரும் எங்கள் சனநாயக கடமையை சரிவர ஆற்றவும், எங்களுடைய வாக்குகளை பணத்திற்காக செலுத்தாமல், நல்ல மனம் கொண்ட மனிதர்களுக்கு செலுத்தி, நல்ல தலைவர்களைப் பெற்றிட தேவையான ஞானத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- காயப்பட்டவர்களை தேடி மீட்கும் எம் இறைவா! உரிமைகளுக்காகவும், நேர்மைக்காகவும் மற்றும் தங்களின் கடமையின் பொருட்டும் உயிர் துறந்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நேர்மையை தங்களின் வாழ்வின் பாதையாக கொண்டு வாழ்ந்த இவர்களை நாங்கள் என்றும் நினைவு கூர்ந்து, அவர்களைப் போல நேரிய வழியில் வாழ்ந்திட தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
- அன்பை உலகில் விதைத்த எம் இறைவா! எங்களுடைய குடும்பங்களில் கிறிஸ்துவ விழுமியங்களைப் பின்பற்றி, ஒருவர் மற்றவருக்கு துணையாக வாழ்ந்திடவும், தளர்வுறும் நேரங்களிலும், உறவுகளில் விரிசல் ஏற்படும் வேளைகளிலும் அமைதி காத்து அன்பினை அடிப்படையாக வைத்து, அனைத்து இன்னல்களயும் ஒற்றுமையுடன் வென்று சமதானத்தில் என்று நிலைத்திட வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
- எங்கள் குடும்பங்களையும் , சமுதாயத்தையும் தங்கள் கரங்களில் ஏந்தவுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்காக மன்றாடுகின்றோம். திரைக்கவர்ச்சியையும் சமுக ஊடக ஈர்ப்பையும் தவிர்த்து தங்களுடைய நேரத்தை நல்ல முறையில் செலவழிக்கும் இவர்களுக்கு நீரே துணையாக இருந்து, அவர்களுடைய வாழ்வின் வெற்றியின் கனியினை அடைந்திட உதவ வேண்டுமென்றும், அவர்கள் மூலம் எம் சமுதாயம் மேம்படைய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Ordinary 6th Week | Iraivelicham Mass Introduction | Sunday 6th Week Mass Introduction |


No comments:
Post a Comment