✦ திருச்சிலுவை பாதை – முன்னுரை
கத்தோலிக்க திருச்சபையின் எந்த ஒரு ஆலயத்திற்குள் நுழைந்தாலும்,
நற்கருணை பேழை, பாடுபட்ட கிறிஸ்துவின் திருவுருவச் சுருபம், கன்னி மரியாவின் திருவுருவம் ஆகியவற்றோடு, தவறாமல் இடம்பெறும் ஒரு முக்கிய ஆன்மீக அம்சம் திருச்சிலுவை பாதையின் 14 நிலைகள் ஆகும்.
குறிப்பாக, கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்ப்பை நினைவுகூர்ந்து நம்மைத் தயாரிக்கும் தவக்காலத்தில், இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானித்து, அவரின் வேதனைப் பாதையில் ஆன்மீகமாக இணைந்து பயணிக்கச் செய்யும் இந்த திருச்சிலுவை பாதை பக்தி முயற்சி, உலகளவில் மிகவும் பிரபலமான வழிபாடாக விளங்குகிறது.
அப்படியானால்,
👉 கிறிஸ்துவின் பாடுகளை மையமாகக் கொண்ட இந்த திருச்சிலுவை வழிபாடு எவ்வாறு தொடங்கியது?
👉 எப்படி அது உலகம் முழுவதும் பரவியது? இந்த கேள்விகளுக்கான விடையையே இங்கு பார்க்கப் போகிறோம்.
✦ திருச்சிலுவை பாதையின் 14 நிலைகள்
- இயேசு மரணதண்டனைக்கு தீர்ப்பளிக்கப்படுகிறார்
- இயேசு சிலுவையைச் சுமக்கிறார்
- இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
- இயேசு தமது அன்னை மரியாவை சந்திக்கிறார்
- சைமோன் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவுகிறார்
- வெரோனிக்கா இயேசுவின் முகத்தைத் துடைக்கிறார்
- இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்
- எருசலேம் மகளிரை இயேசு சந்திக்கிறார்
- இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
- இயேசுவின் ஆடைகள் கழற்றப்படுகின்றன
- இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்
- இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்
- இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படுகிறது
- இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்
✦ தொடக்க கால வரலாறு
தகிபி 313 ஆம் ஆண்டு, ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை அங்கீகரிக்கப்பட்ட மதமாக அறிவித்தார். இதன் பின்னர், கிபி 335 ஆம் ஆண்டு, இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திருத்தூய கல்லறை தேவாலயம் கட்டப்பட்டது.
இந்த நிகழ்வு, கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படையாக வெளிப்படுத்தும் புதிய காலகட்டத்தை உருவாக்கியது. இயேசுவின் புனித கல்லறையை நோக்கி திருப்பயணம் மேற்கொள்ளும் பழக்கம் இதன் மூலம் உருவானது.
புனித ஜெரோம் தனது எழுத்துகளில், மக்கள் பெருந்திரளாக இயேசுவின் கல்லறையை நோக்கி திருப்பயணம் செய்ததாக குறிப்பிடுகிறார். அதேபோல், கிபி 381–384 காலப்பகுதியில், ஏஜேரியா என்ற கிறிஸ்தவ யாத்திரிகை, ஜெருசலேம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மேற்கொண்ட திருப்பயண அனுபவங்களை எழுத்தாக பதிவு செய்துள்ளார்.
அவர், இயேசு கல்வாரி மலையை நோக்கி நடந்த பாதையில், மக்கள் கிறிஸ்துவின் வேதனைகளை தியானித்து, அவரோடு இணைந்து நடந்த விதத்தை மிக அழகாக விவரிக்கிறார்.
✦ வேதனைப் பாதையிலிருந்து திருச்சிலுவை பாதைை
இயேசு கிறிஸ்து, கல்வாரி மலையை நோக்கி சிலுவையைச் சுமந்து நடந்த அந்தப் பாதையே, பின்னாளில் திருச்சிலுவை பாதை என்ற பக்தி வழிபாட்டின் அடையாளமாக மாறியது. அந்தப் பாதையில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்து, தியானித்து வழிபடத் தொடங்கினர்.
கிபி 70 ஆம் ஆண்டு, ரோமையர்கள் ஜெருசலேம் நகரத்தை முற்றிலும் அழித்தபோதிலும், இயேசு நடந்த பாதை குறித்த தகவல்கள் வாய்மொழி மரபுகள் மூலம் பாதுகாக்கப்பட்டன. இதனால், கிறிஸ்தவர்கள் தங்கள் திருப்பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டனர்..
✦ பிரான்சிஸ்கன் துறவிகளின் பங்கு
கிபி 7ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, ஜெருசலேம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததால், அங்கு கிறிஸ்தவர்கள் திருப்பயணம் மேற்கொள்வது ஆபத்தானதாக மாறியது. இருந்தாலும், புனித பிரான்சிஸ் நிறுவிய பிரான்சிஸ்கன் துறவியர்கள், இந்த திருச்சிலுவை பாதை வழிபாட்டை உயிர்ப்புடன் பாதுகாத்தனர்.
கிபி 1342 ஆம் ஆண்டு, ஜெருசலேமிலுள்ள புனித இடங்களை பராமரிக்கும் பொறுப்பு பிரான்சிஸ்கன் துறவியர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், திருச்சிலுவை பாதை வழிபாடு மேலும் வளர்ச்சி பெற்றது.
✦ “நிலைகள்” என்ற அமைப்பு
15ஆம் நூற்றாண்டில், ஆங்கில யாத்திரிகரான வில்லியம் வே, ஜெருசலேமில் இயேசு நடந்த பாதையை “Via Dolorosa” என்று அழைத்து, ஒவ்வொரு நிகழ்வையும் தனித்தனி நிலைகளாக வகுத்தார். இதுவே இன்றைய திருச்சிலுவை பாதையின் அமைப்புக்கான அடித்தளமாக அமைந்தது.
அந்த காலகட்டத்தில், சில இடங்களில் 12 நிலைகளாகவும், சில இடங்களில் 37 நிலைகளாகவும் இந்த எண்ணிக்கை மாறுபட்டது.
✦ 14 நிலைகள் – விவிலியமும் மரபும்
திருச்சிலுவை பாதையின் 14 நிலைகள், விவிலிய ஆதாரங்களும் திருச்சபையின் மரபு வழி செய்திகளும் இணைந்தே உருவானவை.
- வெரோனிக்கா இயேசுவின் முகத்தைத் துடைத்தது
- இயேசு மூன்று முறை கீழே விழுந்தது
இந்த நிகழ்வுகள் நேரடியாக விவிலியத்தில் இடம்பெறாவிட்டாலும், திருச்சபையின் மரபு வழி செய்திகளின் அடிப்படையில் நிலைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர, மற்ற அனைத்து நிலைகளும் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை விவரிக்கும் விவிலியப் பின்னணியிலிருந்து பெறப்பட்டவையே.
✦ திருத்தந்தையர்களின் வழிகாட்டுதல்
திருச்சிலுவை பாதையின் 14 நிலைகள், விவிலிய ஆதாரங்களும் திருச்சபையின் மரபு வழி செய்திகளும் இணைந்தே உருவானவை.
- 1686 – இனோசென்ட் பதினொன்றாம் ஆலயங்களில் திருச்சிலுவை பாதை அமைக்க அனுமதி வழங்கினார்
- 1731 – திருச்சபை அதிகாரப்பூர்வமாக 14 நிலைகள் என நிர்ணயித்ததுு
- 1742 – பெனடிக்ட் பதினான்காம் அனைத்து ஆலயங்களிலும் ஒரே வடிவில் 14 நிலைகள் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்
பின்னர், புனித லியோனார்ட் ஆஃப் போர்டோ மோரீசியோ, இத்தாலியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஆலயங்களில் திருச்சிலுவை பாதைகளை நிறுவி, இந்த பக்தியை உலகளவில் பரப்பினார்.
✦ உலகளாவிய அடையாளம்
ரோமில் உள்ள கொலோசியம் மன்றத்தில், புனித வெள்ளியன்று திருச்சிலுவை பாதை வழிபாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியதன் மூலம், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், இந்த பக்தியை உலக அரங்கில் பெரும் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
✦ நிறைவுச் சிந்தனை
கிறிஸ்துவின் பாடுகளை தியானித்து, அவரோடு இணைந்து பயணித்து, அவரின் வேதனைகளை நம் இதயத்தில் பகிர்ந்து கொள்வதே திருச்சிலுவை பாதையின் உண்மையான ஆன்மீக நோக்கம்.
எனவே, நாம் திருச்சிலுவை பாதையில் பங்கேற்கும் ஒவ்வொரு முறையும், அதை ஒரு சாதாரண வழிபாடாக மட்டும் அல்ல, இறைவனின் வேதனையில் நாமும் பங்கெடுக்கிறோம் என்ற ஆழ்ந்த உணர்வோடு, மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் கலந்து கொள்வோம். 🙏



No comments:
Post a Comment