பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு
17-11-24
திருப்பலி முன்னுரை
ஒவ்வொரு நாள் திருப்பலி கொண்டாட்டமும் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மை தயார் செய்கின்றது. நம்மை பாவத்தின் பிடியிலிருந்து மீட்பதற்காக இம்மண்ணுலகில் மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களை தன் மீது சுமந்து, பாவம் போக்கும் செம்மறியாக நம் பாவங்களை நீக்கினார். இறை வல்லமையால் இறப்பினை வென்று விண்ணகம் சென்றார். நம்மையும் விண்ணகம் அழைத்துச் செல்ல மீண்டும் வருவார் என்று எதிர்நோக்கி காத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையே இயேசுவின் இரண்டாம் வருகையின் அடிப்படை. இயேசுவின் இரண்டாம் வருகையின் பொழுது, பாவிகள் பெரும் துயரையும், பாவமற்றவர்கள் இறைவனின் முடிவில்லா பேரின்ப மகிழ்வையும் பரிசாக பெறுவர். நாம் நம்முடைய பாவ வாழ்க்கையில் நாட்டம் கொண்டு, தொடர்ந்து பாவம் செய்வோம் எனில், இயேசுவின் இரண்டாம் வருகை நமக்கு கசப்பானதென்றாகும். இயேசுவின் இரண்டாம் வருகையை இன்பமாய் மாற்ற, நம் உடலில் தைத்துக் கொண்டிருக்கும் பாவ அழுக்குகளை அகற்றுவோம். இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம் உள்ளம் என்னும் ஆலயத்தை அழகு படுத்துவோம். எப்பொழுதும் விழிப்பாக இருந்து பாவத்திலிருந்து விலகி இருப்பதன் மூலம் நாம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பெரு மகிழ்வுடன் பங்கேற்போம் என்ற நம்பிக்கையுடன் இந்த மகிழ்வின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
இறைவன் இம்மண்ணுலகத்திற்கு தம் மக்களை தீர்ப்பிட இறங்கி வருவார். அவர் வரும்பொழுது பாவம் செய்தவர்களையும், பாவம் மற்றவர்களையும் வெவ்வேறாகப் பிரித்து, அவர்களுக்கு தக்க பலன்களை அளிப்பார், என்று தனியேல் இறைவாக்கினரின் மூலமாக இறைவன் கூறும் செய்திகளை இம்முதல் வாசகத்தில் கவனமுடன் செவி கொடுப்போம்
இரண்டாம் வாசக முன்னுரை
இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்து பாவக்கழுவாய் பலியை நமக்காக நிறைவேற்றினார். பாவத்திலிருந்து மீட்பு பெற்ற நாம், நம்முடைய உள்ளங்களை, பாவத்தின் பிடியிலிருந்து மீட்டு, பாவக்கழுவாய் தேட அழைக்கப்படுகின்றோம். நம்மை பாவமில்லா வாழ்வை வாழ அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. நிலை வாழ்வின் மேன்மையை எடுத்துரைத்த எம் இறைவா! உம் திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், உம்முடைய இரண்டாம் வருகைக்காக எங்களை தயார் செய்துவதற்கான அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. நேர்மை தவறாத எம் இறைவா! நாங்கள் சமுதாயத்திலும் எங்கள் வீடுகளிலும் வகிக்கும் பொறுப்புகளை முழுமன ஈடுபட்டுடன் ஆற்றவும், பிறருக்கு பயன் அளிக்கும் வகையில் வாழவும் வேண்டிய வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. விழிப்பாயிருக்கும்படி மொழிந்த எம் இறைவா! உம்முடைய இரண்டாம் வருகை எதிர்நோக்கி இருக்கும் நாங்கள் அனைவரும், எந்த நிலையிலும் பாவத்தின் சூழ்ச்சியில் சிக்காமல், உம்முடைய வருகைக்காக எங்கள் இல்லங்களையும், உள்ளங்களையும் தயார் செய்ய தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. இறைவாக்குரைத்த எம் இறைவா! நாங்கள் பெற்றுக் கொண்ட இறை நம்பிக்கையையும், படிப்பினைகளையும் எங்கள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய பொறுப்புணர்வையும், அதற்கான ஆற்றல்களையும் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
5. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! தொடர் கலவரங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மணிப்பூர் மாநில மக்களுக்காக மன்றாடுகின்றோம். அங்கு மீண்டும் எழுந்துள்ள மோசமான சூழ்நிலைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து, அமைதி நிலைநாட்ட வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.